under review

ம. காமுத்துரை

From Tamil Wiki
ம. காமுத்துரை (படம்: நன்றி - விகடன்)
எழுத்தாளர் ம. காமுத்துரை
இலக்கியச் சந்திப்பு, கோவை

ம. காமுத்துரை (பிறப்பு: செப்டம்பர் 16, 1960) தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர். பொதுவுடைமை இயக்கம் சார்ந்த படைப்புகளை எழுதினார். தேனி, அல்லி நகரத்தில் வாடகைப் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ம. காமுத்துரை, செப்டம்பர் 16, 1960-ல், தேனியில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ. - Industrial Training Institute) வெல்டிங் தொழிற்படிப்பு படித்தார்.

தனி வாழ்க்கை

காமுத்துரை, உலோக இணைப்பாளர் (வெல்டர்) ஆகச் சிலகாலம் பணியாற்றினார். பின் பஞ்சாலை ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றினார். தொடர்ந்து விற்பனைப் பிரதிநிதி, ரொட்டி விற்பனை முகமை(agency) , செய்தித்தாள் முகமை , இரும்புப் பொருள்கள் விற்பனை, நிதி நிறுவனம் என்று பல தொழில்களை மேற்கொண்டார். தற்போது தேனி அல்லி நகரத்தில் வாடகைப் பாத்திரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மனைவி வேணி. மகன்கள்: விக்னேஷ், நாகேந்திரன்.

புழுதிச் சூடு - நூல் வெளியீடு

இலக்கிய வாழ்க்கை

காமுத்துரை வேலை தேடிக் கொண்டிருந்த காலத்தில் இலக்கியம் அறிமுகமானது. நூலக வாசிப்பின் மூலம் வாசிப்பார்வம் மேம்பட்டது. ‘புதிய நம்பிக்கை’, ‘விடியும்’ போன்ற சிற்றிதழ்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. எழுத்தாளர் அல்லிஉதயனின் தொடர்பால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு ஏற்பட்டது. சந்தித்த மனிதர்களும், வாழ்க்கை அனுபவங்களும் தொடர் வாசிப்பும் காமுத்துரையை எழுதத் தூண்டின. காமுத்துரையின் முதல் சிறுகதை, ’ஓய்வு கொள்ளும் ஊர்திகள்’ 1983-ல், செம்மலர் இதழில் வெளியானது. தொடர்ந்து சிற்றிதழ்களிலும் வெகு ஜன இதழ்களிலும் எழுதினார்.

’பூமணி’ என்ற கதையை பத்து கோணங்களில், பத்து களங்களில் எழுதினார். கிட்டத்தட்ட 200 சிறுகதைகள் எழுதியிருக்கும் காமுத்துரை, ‘மில்’, ‘முற்றாத இரவொன்றில்..’, ‘கோட்டை வீடு’ போன்ற நாவல்களையும் எழுதினார். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘காமுத்துரை கதைகள்’ என்ற தலைப்பில் வெளியானது.

இவரது ’கிட்டுணன்’ என்ற சிறுகதை, திலீப் குமாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு, பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஆங்கிலச் சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றது. ’லூஸ் ஓனர்’ சிறுகதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் உருதுமொழிப் பிரிவினரால் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கலைஞன் பதிப்பகம் மலேயாப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இவருடைய ‘மிகினும் குறையினும்’ சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டது. இவரது படைப்புகளை ஆராய்ந்து மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற்றனர்.

நாடக வாழ்க்கை

கிராமத் திருவிழாக்களின் போது நடக்கும் பல்வேறு நாடகங்களுக்குக் கதை, வசனம் எழுதினார் காமுத்துரை. புதிதாகப் பல நாடகங்களை எழுதினார்.

திரைப்படம்

ம. காமுத்துரை எழுதிய ‘முற்றாத இரவொன்றில்...’ நாவல் திரைப்படமாவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

விகடன் விருது
சுஜாதா விருது

விருதுகள்

  • 1998-ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - ’நல்ல தண்ணிக் கிணறு’ தொகுப்பு.
  • 2010-ன் சிறந்த நாவலுக்கான ஆனந்த விகடனின் பரிசு - ’மில்’ நாவல்.
  • உயிர்மை பதிப்பகம் வழங்கிய சிறந்த நாவலுக்கான சுஜாதா நினைவுப் பரிசு - ’மில்’ நாவல்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது - ’புழுதிச் சூடு’ தொகுப்பு.
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய படைப்பாக்க மேன்மை விருது - ’கோட்டைவீடு’ நாவல்.
  • 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்சன் நினைவு நாவல் விருது - ’குதிப்பி’ நாவல்.
  • 2020-ம் ஆண்டுக்கான செளமா நாவல் விருது - ‘குதிப்பி’ நாவல்.
  • 2021-ம் ஆண்டுக்கான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது - ‘கடசல்’ நாவல்.
  • திருப்பூர் இலக்கிய விருது - ‘அலைவரிசை’ நாவல்.
  • இலக்கியச் சாதனையாளர் விருது.
  • மதுரை நகைச்சுவை மன்றம் வழங்கிய சிறந்த இலக்கியச் சான்றாளர் விருது.
  • குமுதம் வெள்ளிவிழாப் போட்டிப் பரிசு.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டிப் பரிசு.
  • அமரர் ஜோதிவிநாயகம் நினைவுப் பரிசு.
  • ஆதித்தனார் நூற்றாண்டு நினைவு நாள் விருது.
  • நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது.
ம. காமுத்துரை நேர்காணல் புத்தகம்

ஆவணம்

ம. காமுத்துரையை நேர்காணல் செய்து அதனை ‘புனைவின் வழியேதான் மனித நாகரீகம் பிறந்தது' என்ற தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளார் எழுத்தாளர் மு. அரபாத் உமர். பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது.

இலக்கிய இடம்

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் பதிவு செய்தவர் காமுத்துரை. சாதாரண மனிதர்களின் பிரச்சனைகளை, அன்றாட வாழ்வை நகர்த்துவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, அவலங்களை, செய்து கொள்ளும் சமரசங்களைத் தன் படைப்புகளில் காட்சிப்படுத்துகிறார். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சிறு, குறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அவலங்களை இவரது படைப்புகளில் காண முடிகிறது. “ம. காமுத்துரையின் எழுத்துச் சிறப்பு, ஆடம்பரங்களற்ற மக்கள் மொழி. வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புள்ள நடை” என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார். “எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்டவர் காமுத்துரை” என்கிறார், பா.செயப்பிரகாசம்

ம. காமுத்துரை நூல்கள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • கருப்புக் காப்பி
  • மிகினும் குறையினும்
  • கப்பலில் வந்த நகரம்
  • விடுபட
  • நல்ல தண்ணி கிணறு
  • நாளைக்குச் செத்துப் போனவன்
  • கனா
  • பூமணி
  • இன்னும் ஒரு வாக்குமூலம்
  • புழுதிச்சூடு
  • குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
  • காமுத்துரை கதைகள்
ம. காமுத்துரை நூல்கள்
நாவல்
  • மில்
  • முற்றாத இரவொன்றில்
  • அலைவரிசை
  • கோட்டைவீடு
  • குதிப்பி
  • கடசல்

உசாத்துணை


✅Finalised Page