under review

மஹ் மேரி (மலேசியப் பூர்வகுடி)

From Tamil Wiki
மஹ் மேரி பழங்குடி (நன்றி: வல்லினம்)

மஹ் மேரி (Mah Meri) பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் செனோய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இனக்குழுவின் கைவினை வேலைப்பாடுகள் உலக அளவில் தனித்துவமானதாகவும் கலைத்துவமானதாகவும் கருதப்படுகிறது.

பெயர் காரணம்

'மஹ் மேரி' என்றால் வன மனிதன் என்று பொருள்படும். ஆரம்பத்தில் (Besisi) என இவர்கள் அழைக்கப்பட்டனர். மஹ் மேரி பழங்குடி தங்களை ‘ம பெதிசேக்’ (Ma Betisek) என்றும் அழைப்பர். ம பெதிசேக் என்றால் செதில்கள் கொண்ட மனிதர்கள் என்று பொருள்படும். மலாய் மொழியில் மஹ் மேரி என்றால் செதில்கள் (Bersisik) அல்லது கரையோரத்தவர் (Pesisir) எனும் பொருளும் உள்ளது.

இனக்குழு

மஹ் மேரி சமூகம் மங்கோலிய இன (Mongoloid) மக்களின் சந்ததியினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இருண்ட நிறம், சுருள் கூந்தல், கறுப்பு கண்கள், 156 செ.மீ முதல் 168 செ.மீ உயரம் மற்றும் 50 கிலோ முதல் 65 கிலோ உடல் எடை எனும் உடல்ரீதியான ஒற்றுமைகள் இரு இனக்குழுக்களுக்கும் உண்டு.

இனப்பரப்பு

நன்றி: Joshua Project

மஹ் மேரி மக்கள் ஆரம்பத்தில் ஜொகூரின் கடல் சார்ந்து வாழ்ந்தனர். ஜொகூர் கடல்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலுக்கு அஞ்சி கடற்கொள்ளையர்களிடமிருந்து தப்பி ஓடி வந்தனர். வந்தவர்கள் சிறு காட்டை எரித்து உலூ சூச்சோ எனும் புது குடியமைப்பை உருவாக்கினர். 1940களில் ஜப்பானிய கொடுங்கோலாட்சியின் போது, பிரிட்டிஷ் ஜப்பானியரை எதிர்க்க மஹ் மேரி மக்களைச் சிலாங்கூரின் புக்கிட் பாங்கோங் கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி மஹ் மேரி பழகுடியினரும் அங்கு புலம் பெயர்ந்தனர். தற்போது மஹ் மேரி பழங்குடி சிலாங்கூர் கடலோர மேற்கு பகுதியில் சுங்ஙாய் பேலேலிருந்து பூலாவ் கேரி வரை வாழ்ந்துவருகின்றனர். மஹ் மேரி மக்கள் கேரி தீவில், கம்போங் சுங்காய் பும்போன் (Kampung Sungai Bumbun), கம்போங் சுங்காய் ஜுடா (Kampung Sungai Judah), கம்போங் சுங்காய் குராவ் (Kampung Sungai Kurau), கம்போங் கெபாவ் லாவோட் (Kampung Kepau Laut), கம்போங் ரம்பாய் (Kampung Rambai) எனும் ஐந்து கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

வழிபாடு

மஹ் மேரி மக்கள் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுபவர்கள். மனிதன் வாழும் உலகுக்கு நேர்மாறாக பனிரெண்டு மணி நேர ஆவி உலகம் இருப்பதாக நம்பிக்கையுள்ளவர்கள். மஹ் மேரி சமுதாய சடங்குகளை ஆவி உலக நேரப்படி செய்து முடிக்கின்றனர். இவ்விரண்டு உலகங்களும் தனித்தனியே இயங்குவதால், ஆவி உலகில் உலாவும் ஆவி, மனித உலகத்திற்கு ஒரு குழந்தை பிறப்பின் வழி நுழைந்து மரணத்தின் வழி இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று செல்வதாக நம்புகின்றனர். மஹ் மேரி பழங்குடியினர் உயர்திணை அஃறிணை பாரபட்சமின்றி அனைத்துக்கும் ஆவியிருப்பதாக நம்புகின்றனர்.

தொழில்

மஹ் மேரி மக்கள் மர வேலைபாடுகள் செய்வர். மஹ் மேரியின் மரவேலைபாடுகள் சதுப்பு நில காடுகளில் வளரும் ‘நைரே பாத்து’ (Nyire Batu), ‘காயு புலாய்’ (Kayu Pulai) எனும் மரங்களாலானவை. மஹ் மேரி மக்கள் கைவினை பொருட்களான கூடைகள், வளையல்கள், கைப்பை போன்றவற்றையும் பின்னுவர்.

பண்பாடு

மஹ் மேரி பழங்குடியினர் பாலின சமத்துவத்தோடு பழக்கப்பட்டவர்கள். மஹ் மேரி இன ஆண்களும் பெண்களும் வாழ்கை துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் மறுமணம் புரிவதிலும் தனிமனித சுதந்திரத்தைக் கொண்டவர்கள்.

நம்பிக்கைகள்

மஹ் மேரி பழங்குடிகள், தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களுக்கு உணவாக வேண்டுமென சபிக்கப்பட்டுள்ளதாகவும் அப்படி அவற்றை உட்கொள்வதினால்தான் மனிதனுக்கு நோய், காயம் ஆகியவை ஏற்படுகிறதெனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். மஹ் மேரி மக்கள் ஆவிகளின் மீது மிகுந்த நம்பிக்கையுடையவர்கள். மஹ் மேரி பழங்குடிக்குச் ‘சங்கலி’ புலி ஆவி என்ற நம்பிக்கையுள்ளது. மஹ் மேரி பழங்குடியின் முன்னோர்கள் முன்பு வைத்த கண்ணியில் ஒரு புலி மாட்டிக்கொண்டதாகவும், மாட்டிக் கொண்ட புலியின் ஆவி அதற்குப்பின் புலிபிடிக்க வரும் பழங்குடியினரைத் தாக்குவதாகவும் நம்புகின்றனர். ஆகவே, மஹ் மேரி மக்கள் புலிபிடிக்க வேண்டினால், வேட்டைக்காரர்கள் அவர்கள் தம் பாதுகாப்பைக் கருதி முதலில் புலியின் ஆவியிடம் அனுமதி பெற்றே செயல்படுவர்.

கலை

மஹ் மேரி முகமூடிகள் (நன்றி: zeta studios )

மஹ் மேரி பழங்குடியினர் மர வேலைப்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்கள். ‘மோயாங்’ (Moyang) முகமூடிகளையும் நாட்டுப்புற கதை உருவகங்களையும் மரச்சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். மரச்சிற்பங்களை வன ஆவிகளுக்குப் பிரசாதமாகப் படைத்து, அதை காட்டிலும் ஆறுகளிலும் வைப்பர். மஹ் மேரி மக்கள் செதுக்கிய மரச்சிற்பங்களும், முக மூடிகளும் தனா ராத்தா, கேமரன் மலையில் கலை கூடமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரித்தீவிலும் இவர்களுக்கான கலைக்கூடம் உண்டு. மஹ் மேரியின் மர வேலைப்பாடுகள் உலகத்தரம் வாய்ந்த்தாக UNESCO அதிகாரிகளின் Seal of Excellence விருது வாங்கியுள்ளது.

மஹ் மேரி பழங்குடியின் முகமூடி (நன்றி: Visit Selangor)
நன்றி: the star

மஹ் மேரியின் பின்னல் கலை தொம்போக் தொம்போ (Tompoq Tompoh) என்றழைக்கப்படும். தொம்போக் என்றால் பின்னலின் தொடக்கம். தொம்போ என்றால் ஒன்று மேல் ஒன்று பின்னப்படும் பாய் போன்ற வடிவம். ஆக, தொம்போக் தொம்போ என்றால் கூட்டு முயற்சியின் தொடக்கம் என்று பொருள்படும். மஹ் மேரி மக்கள் ஜொ-ஓ நடனம், முக மூடி நடனம் போன்றவற்றைப் பண்பாட்டு விழாக்களிலும் பண்டிகைகளிலும் ஆடுவர்.

பண்டிகை

ஹரி மோயாங் புஜா பந்தாய் (நன்றி: jakoa.gov.my)

மஹ் மேரி பழங்குடியினர் ஆண்டுக்கு ஒருமுறை 'மோயாங் லாவுட் (Moyang laut) எனும் வழிப்பாடு செய்வர். கடல் மூதாதையர்கள் எனும் பொருள்கொண்ட இந்த வழிபாட்டை 'ஹரி மோயாங் பூஜா பந்தாய்' (Hari Moyang Puja Pantai) என்றும் அழைப்பர். இதற்கு ‘கடற்கரை வழிபாடு’ எனும் பொருளாகும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற இவ்விழா கொண்டாடப்படுகிறது. கடலுக்குச் செல்லும் போது நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என்றும் தங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி பாதுகாப்பாக தொழில் செய்ய துணை நிற்க வேண்டுமென்றும், தங்களின் தவறுகளை மன்னிக்க கோரி மூதாதையர்களைப் பிராத்திப்பதும் இவ்விழாவின் நோக்கம். ஷாமனின் தலைமையில் ஹரி மோயாங் தொடங்கும். 'ஷாமன்' என்றால் மந்திரம் தெரிந்த பூசாரி என்று பொருள். கடல் நீர் மட்டம் இறங்கும் வேளை ஜோஹ் (Jo-oh) எனப்படும் வன நடனத்துடன் ஆவிகளின் புகழ்பாடல்களைப் பாடியபடி கடலுக்குச் செல்வர். முன்னோர்களின் ஆவிகள் இறங்கிய சன்னதம் கொண்ட டூகோன்களை (Dukun) மஹ் மேரி மக்கள் அழைத்து வருவர். டுகோன் என்பவர், மந்திரங்களை ஓதி நோய்களுக்கு நாட்டு மருத்துவம் பார்ப்பதும், ஆவிகளுடம் பேசும் திறன் கொண்டவருமாக அறியப்படுகிறார்.

இவ்விழாவின் போது மஹ் மேரி பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளான ஜுலே, ரெபானா, தாவாகளை இயக்கிக் கொண்டு கிராமத்திலிருந்து அணிவகுப்பர். இவ்விழாவில் கடலோடு தொடர்புடைய தம் மூதாதையர்களுக்குச் சடங்குகள் செய்து படையல்களை படைப்பர்.

விழா

மஹ் மேரி பழங்குடியினர் ஹரி மோயாங் எனப்படும் மூத்தோர் நாள் (Hari Moyang) எனும் விழாவைக் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடுவர். இதனை ஆவிகளின் நாள் (Spirit’s Day) என்றும் அழைப்பர். இவ்விழாவின் நாள் குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்காது. மூத்தோர் நாள், மஹ் மேரி குடியின் மூத்தவர்களின் கனவில் ஆவிகள் கூறும் தினத்தன்று கொண்டாடப்படும். இவ்விழா அக்குழுவினரில் உள்ள முக்கியமானவர்களின் மரணங்களினாலும் மற்ற இயற்கை பேரிடர்களினாலும் ஒத்திவைக்க வாய்ப்புண்டு. மூத்தோர் நாளை பொது இடமான ஆவிகளின் வீட்டில் வழிப்படுவர். மூத்தோர் நாளன்று உணவு பண்டங்கள் அனைவரோடும் பகிர்வர். மூத்தோர் நாளின் முந்தைய நாள் சங்கார் எனப்படும் வழிப்பாட்டு இடத்தில் இறந்தவர்களுக்கு படையலிடும் வழக்கமுண்டு. இவ்விழா ஷாமனின் தலைமையில் நிகழ்த்தப்படும்.

திருமணம்

திருமணத்திற்கு முன், மஹ் மேரி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களின் விருப்பத்திற்குரிய இணையைச் சொல்ல, தேர்ந்தெடுக்க சரிநிகர் சந்தர்ப்பங்கள் விளையாட்டு போன்ற சிறு சடங்கு வழியாகவே வழங்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு சடங்கு

மஹ் மேரி பெண்கள் திருமணம் செய்ய விருப்பமில்லையெனில், அவர்களின் கைகளை பொது மக்களின் பார்வையிலிருந்து மறைத்து வைத்துக்கொள்வர். கைகளைப் பின்பக்கமாக வைத்துக் கொள்வதும், கைகளைக் கட்டிக்கொள்வதும் என மற்றவரின் பார்வைக்குத் தன் கைகளை மறைத்துக்கொள்வர். திருமணத்திற்கு விருப்பமுள்ள பெண்கள், தங்கள் கைகளை அனைவராலும் பார்க்க முடியும்படி கைகளை நீட்டிக் காட்டிக்கொள்வர். அப்படி கைகளைத் திறந்து காண்பிக்கும் மஹ் மேரி பெண்ணை ஓர் மஹ் மேரி ஆணுக்கும் பிடித்திருக்குமாயின் அவரது கைகளைப் பற்றிக்கொள்ளலாம். அப்படி தேடி வரும் ஆணை அப்பெண்ணுக்குப் பிடிக்கவில்லையெனில் கைகளைக் மறைத்துக்கொள்ளலாம். ஒருவரை மற்றொருவருக்கும் பிடித்திருந்து, கைகள் கோர்க்கப்பட்டால் அவர்களுக்கு திருமணம் நடக்கும். மஹ் மேரி ஆண்கள் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் விளையாட்டில் ஆர்வம் காட்டுவர். அதுவே, அவருக்கு அப்பெண்ணை மணக்க விருப்பமில்லையெனில் அவர் சடங்கில் ஆர்வமில்லாதவராகத் தன்னை வெளிப்படுத்தினால், பெண்ணின் குடும்பம் அவரை நிராகரித்துவிடும்.

திருமண தயார் நிலை

திருமணத்தின் போது, கோங், மூங்கில் கட்டைகள், வயலின், கித்தார் இசைக்கப்படும். மஹ் மேரி திருமணம், ஊர்த்தலைவரான பாதின் (Batin) இல்லத்தில் நடைபெறும். திருமணத்திற்காக பனை ஓலைகளில் மீன்கள், பூக்கள், பறவைகள், நட்சத்திரங்களான வடிவங்களில் பின்னல்கள் வீட்டின் தூண்களிலிருந்து தொங்கவிடப்படும். மஹ் மேரியின் தொம்போக் தொம்போ பின்னலில் பாய்கள் தூண்களைச் சுற்றியும் பொருத்தப்படும். மஹ் மேரி பழங்குடியினரின் திருமண விழாக்கள் நான்கு நாட்கள் நடைபெறும். இந்த நான்கு நாட்களில் ஏழு சடங்குகள் நடத்தப்படும்.

முதல் சடங்கு:
  • மெரிசிக் (Merisik), பெண் கேட்டல்
  • கும்புல் பாக்காட் (Kumpul Pakat), குழுவுரையாடல்
  • மினாங் (Minang), நிச்சயதார்த்தம்
மணமகளின் மணக்கோலம். (1. தலையில் தாஜூக் (Tajuk), 2. பின்னல் 3. காதில் பூங்கா தேக் (Bunga Tek) எனும் தேக் பூ, )

நிச்சயதார்த்தின் போது மாப்பிளை, பெண் வீட்டாருக்கும் மணமகளுக்குச் சீதனம் கொண்டு வருவார். வழக்கமாக, முதல் சீதனம் வெண்துணியில் கட்டப்பட்ட ரொக்கப் பணம். இரண்டாவது, மணப்பெண்ணுக்கான பரிசுகள். மூன்றாவது, வெற்றிலை பாக்குகளுடன் சுருட்டுகள் வண்ணத் துணியில் கட்டப்பட்டவை. இவற்றை பெண் வீட்டார் சபையினர் முன் திறந்து காட்டுவர். பெண்வீட்டார் சீதனங்களைப் பெற்றுக் கொண்டபின் இரு வீட்டாரின் மூத்தவர்கள் மோதிரம் மாற்றிக்கொள்வர்.

இரண்டாம் சடங்கு: காதேக் ஜெமோய் (Kateik Jemoi), பற்களைச் சமப்படுத்துதல்

திருமணத்திற்கு முதல் நாள் டுகோன் மணமக்களின் பற்களை மோதிரத்தால் கூர்மைபடுத்தி சீரமைப்பர். பற்களைச் சீரமைக்கும் இச்சடங்கு திருமணத்திற்கு முன் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் திருமணத்திற்குப் பிறகு முன்னோக்கி கொண்டு செல்லப்படாமல் இருக்க, எந்தவொரு தீய சகுனத்தையும் நிராகரிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுவருகிறது. இந்தச் சடங்கு முடிந்தவுடன் மணமக்கள் வீடு திரும்ப வேண்டும். இரவுணவு ஆடல் பாடலுடன் விடியல் வரை கொண்டாடப்படும்.

மூன்றாம் சடங்கு: பெரினாய் (Berinai), மருதாணியிடல்

திருமண ஜோடிகளுக்கு இரண்டாம் நாள் கைவிரல்களில் மருதாணியிடும் சடங்கு. மருதாணி நன்கு சிவக்க மறுநாள் காலை வரை நடன நிகழ்வுகளுடன் இச்சடங்கு நீடிக்கும். மணமக்களைப் பிலாமின் எனும் மணமேடையில் உட்காரவைத்து மருதாணியிடுவது வழக்கம்.

நான்காம் சடங்கு: பெரரகான் (Perarakan), மணமகன் பெண் வீட்டுக்கு வருதல்

மணமகன் திருமண நாளன்று பனை ஓலை பின்னப்பட்ட பாவாடையும், மணிகள் பொருத்தப்பட்ட தலைப்பாகையும் அணிந்திருப்பார். மணமகளின் வீட்டையடைந்த மணமகனுடன் மணமகள் வீட்டார் மூன்று முறை விளையாட்டாக சச்சரவு செய்வார். பெண்வீட்டாரிலுருந்து ஒருவர் மணமகனை சீலாட் (Silat), தற்காப்புக் கலை பாவனையில் விளையாட்டாக வம்புக்கிழுப்பார். இச்சடங்கின் போது, தாம்பொ (Tambo) எனும் மத்தள வாத்தியமும் தவாக் (Tawak) எனும் கோங்கையையும் வாசிப்பர்.

ஐந்தாம் சடங்கு: இகாப் கெடோ (Igap Kedoh), மணப்பெண்னைப் பிடித்தல்
மஹ் மேரி பழங்குடியினரின் அண்டவியல் நம்பிக்கை

இகாப் கெடோ சடங்கில், மணபெண்ணைச் சுற்றி ஏழு பெண்கள் நிற்பர். ஏழு பெண்களும் தம் தலைக்குமேல் துணிகளை நீட்டிப்பிடித்து ஒரு துணி வளையத்தை அமைப்பர். அதன் உள்ளே மணப்பெண் இருப்பார். ஏழு பெண்களும் கூடி மணப்பெண்ணை மணமகனின் பார்வையிலிருந்து மறைக்கவேண்டும். மஹ் மேரியினரின் தொன்மத்தின்படி, அவ்வட்டம் ஒரு புனித மலையைக் குறிக்கிறது. பெரும் வெள்ளத்திற்குபின், மஹ் மேரியின் நிஜ உடன் பிறந்தோர் ஒரு வட்டமிட்டு மற்ற உயிர் பிழைத்தவர்களை ஏழு ஆண்டு ஏழு மாதம் ஏழு நாட்களுக்குப் பிறகு தேடி கண்டுபிடிப்பதைத் தொடர்புபடுத்துவது அவ்வட்டம். அவ்வட்டத்தை ஏழு பெண்கள் தாங்கி நிற்பர். ஏழு என்பது மஹ் மேரி பழங்குடியின் நம்பிக்கைபடி ஏழு அடுக்குகளைக் கொண்ட அண்டவியலைக் குறிக்கும். எப்போதும், மணமகளுக்குப் ‘பாதுகாப்பாக’ அவரது உறவினர்கள் மணமகளைச் சுற்றி நிற்பர். ஷாமன் அல்லது டுகோன் முன்செல்ல, மணமகன் அவருக்குப் பின்னால் இந்த ஏழு பேர் இணைந்த வட்டத்தைச் சுற்றி வருவார். மாப்பிள்ளையின் பின்னால் ஒருவர், பூங்க தெலூர் (Bunga Telur) தோள்களில் ஏந்தியபடி வருவார். இவருக்கு பின்னால் மாப்பிளை வீட்டாரும் சேர்ந்து பெண்களின் வட்டத்தை ஏழு முறை சுற்றி வருவர். மஹ் மேரியின் பழைய பாணி, மணமகன் மணமகளை நெருங்க, மணமகள் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி மணமகனைத் ‘தேட’ வேண்டும். மணமகள் ‘தயங்க’ அவரது சகோதரர் அல்லது வீட்டில் பெரியவர் மணமக்களின் கைகளைக் கோர்க்கச் செய்து மணமகள் வீட்டினுள் அழைத்துச் செல்வர். மஹ் மேரி பழங்குடியின் புதிய தம்பதியினரின் சடங்குகளில், மாப்பிளை வட்டத்தை ஏழு முறை சுற்றி வந்த பின்னர், மாப்பிளை மணப்பெண்ணின் கைகளை வட்டத்தினுள் எம்பி பிடிக்க வேண்டும். தவறான கைகளைப் பற்றினால், திருமணம் தொடர்ந்து நடக்க முடியாது.

ஆறாம் சடங்கு: பெர்சான்டிங் (Bersanding), பரிசம்

மஹ் மேரியின் பரிசம் சடங்கில் சில இணை சடங்குகள் உள்ளன.

நியாம் பாக் (Nyam Park)

மணமக்கள் ஒன்றாக அமர்வதற்கு முன், மணமக்களின் கால்களைக் கழுவுவர். அதன் பின், நியாம் பாக் (Nyam Park) சடங்கு நடைபெறும். இந்தச் சடங்கின் நோக்கம், மணமக்கள் அவர்களது புற, அக உலகை திருமண வாழ்வில் ஒன்றினைந்து வாழ புரிந்துக்கொள்வதாகும். சமைத்த கவுனி அரிசி உருண்டை, ஒரு குவளையில் நீர், கடற்பாசியில் சுற்றப்பட்ட பாக்கு என மூன்று பொருட்களை ஒரு வயதில் மூத்த பெண், மணமக்களின் முகவாய்க்கட்டையில் மூன்று தடவை வைத்து வைத்து எடுப்பார். இச்செயலானது சாப்பிடுவதும் அருந்துவதுமான ஒரு குறியீடாக சடங்கில் அமையும்.

நாசி டாமாய் (Nasi Damai)

அதன்பின், மணமக்கள் ஒருத்தருக்கொருவர், நாசி டாமாய் (Nasi Damai) எனும் கவுனி அரிசி உருண்டையை உட்டிக்கொள்வதாகும். இந்தச் சடங்கு இருவரும் நிம்மதியான வாழ்கைக்கு உறுதிசெய்வதாக கருதப்படுகிறது. ஊட்டிவிடும் இச்செயல் குடும்ப பொறுப்புகளைச் சமமாகப் பகிர்தலுக்கு ஒரு குறியீடாகும்.

சபை வணக்கம்
பெலாமின்

இதன்பின், மணமக்கள் சபையினரின் முன் மூன்று முறை முட்டிக்கால்களை மடித்து, மேலுடலை கீழிறக்கி வணக்கம் செலுத்த வேண்டும். அதற்குபின், மண்மக்கள் பெலாமின் (Pelamin), எனும் மணமேடையில் அமர அனுமதிக்கப்படுவர். பழைய மஹ் மேரி திருமணங்களில், மணமக்கள் ஒருவரின் தோள் மீதுஒருவர் கை வைத்து ஏழு முறை முட்டிக்கால்களை மடித்து, மேலுடலை கீழிறக்கி வணக்கம் செலுத்த வேண்டும். அதன்பின்னரே, அவர்கள் பெலமினில் அமர முடியும். இச்செயலானது, மணமக்கள் இருவரும் சேர்ந்து செயலாற்றினால் மட்டுமே மணவாழ்கையை இணக்கமாக வாழலாம் என்னும் குறியீடாகும். தம்பதியர் வீட்டின் முன் உள்ள மணமேடை நெய்த தேங்காய் இலைகள் அல்லது பனை ஓலைகளால் ஆனது. மஹ் மேரி பழங்குடியினர் ரூமா பான்ஞாஙில் (Rumah Panjang) வசித்தால், அந்த ஜோடி மற்ற குடும்ப உறுப்பினர்களால் பார்க்க ருமா பான்ஞாஙில் நடுவில் உள்ள மணமேடையில் அமர்வர்.

நலங்கு
நலங்கு வைக்க உபயோகிக்கும் பொருட்கள். மருதாணி, தெபுங் தாவா, வெடித்த கவுணி அரிசி. (இடமிருந்து வலம்)

இரு வீட்டாரும் திருமண உடன்பாட்டின் அடையாளமாக கவுனி அரிசியும் தண்ணீரும், சேர்ந்து கலக்கிய கலவை, தெபுங் தாவா (Tepung Tawa) இரண்டையும் மணமக்களின் நெற்றி, கன்னம், மோவாயில் தடவி, மூன்று வகை அரிசியை தெளித்து தம்பதியரை ஆசீர்வதிப்பார்கள். இரு வீட்டாரும் சேர்ந்து சாப்பிடுவதற்காக பல்வேறு உணவுகள் தயாரித்து விருந்தினர்களுக்கு விருந்தளிப்பர்.

ஏழாம் சடங்கு: கென்டூரி ஹம் (Kenduri Hum), மலர் குளியல்

திருமணத்திற்கு மறு நாள், மஹ் மேரி பழங்குடியின் இறுதி சடங்காக, மன்டி பூங்கா கொம்பா (Mandi Bunga Gomba) எனும் மலர் குளியலில் பங்கெடுப்பர். ஒரு வாளியில், நீர் ஊற்றி அதில் செம்பருத்தி, பின்னிய பனை இலைகள், ஆவிகளின் இலைகள் என ஊற வைக்கப்படும். இந்தக் கலவையை எலுமிச்சை தண்ணீர் எனக் கூறுவர். இந்தச் சடங்குக்கு மணமகள் நவீன கால தோற்றத்தில் அலங்கரிக்கப்படுவார். இச்சடங்கில் மஹ் மேரி பழங்குடியினரின் பாரம்பரிய இசையான கண்டிங் (Ganding) ஒலிபரப்படும். இறுதி சடங்கான கென்டீரி ஹமில் சில இணை சடங்குகள் உள்ளன.

உகோப் சடங்கு

மணமக்கள் சாரோங்கில் உடை மாற்றிய பின்னர், ஷாமன் உகோப் (Ukup) சடங்கை நிகழ்த்துவார். இச்சடங்கில் ஷாமன் சாம்பிராணி புகையில் தனது கைகளை வெப்பமாக்கி, அவ்வெப்பத்தைத் தம்பதியரின் முழங்கால் முட்டியிலும், தோள்களிலும் ஒத்தி வைப்பார். இச்சடங்கு, மஹ் மேரி பழங்குடியின் மூதாதையர் ஆவிகள் பார்த்து, ஆசிர்வதித்து திருமண வாழ்வில் தம்பதியரைப் பாதுகாக்கும் நம்பிக்கை கொண்டதாகும்.

மாவு பூசி நலங்கு வைத்தல்

அடுத்த சடங்கில் தம்பதியரின் தாயார்கள் சாரோங் உடுத்தி கலந்துக் கொள்ள வேண்டும். இந்த நால்வரும் தரையில் பாய் விரித்து கால்களை நீட்டியபடி அமர வேண்டும். முதலாவதாக ஷாமனும், அவரைத் தொடர்ந்து உறவினர்களால் நால்வரின் நெற்றி, முகம், கை, கால்களில் மாவைப் பூசி புனிதமாக்குவார். மணமக்களை ஆசிர்வதிப்பதாக பாதின் அவர்களின் மீது நீர் தெளிப்பார். மூதாதையர் இலையால் எலுமிச்சை தண்ணீர் தம்பதிகளின் உடலில் தடவப்படும். தடவியபின் அந்த மூதாதையர் இலைகள் தம்பதியரின் முழு கெட்ட சக்திகளை உறிஞ்சியுள்ளன என மஹ் மேரி பழங்குடியினர் அதை நம்புவதால், அவ்விலைகள் உடனே வீசப்படும்.

மன்டி பூங்கா கொம்பா

அவர்களின் மீது உறவினர்கள் மெல்ல வெள்ளை துணியை நால்வரின் தலைக்கு மேல் பிடித்து நீரை ஊற்றி, அதன்பின் குளியலை விளையாட்டாக மாற்றுவர். தலைக்கு மேல் கொட்டும் முடியும் தருவாயில், வெள்ளை துணிமீது சில்லிங் (Syiling) நாணயங்கள் இருக்கும். அவற்றை இறுதியில் கீழே கொட்ட, சிறுவர்கள் அதை விளையாட்டுடன் எடுத்துக்கொள்வர்.

துபாட் லெபாஸ் சடங்கு

ஷாமன்கள் இருவர், கால்களை நீட்டி அமர்ந்திருக்கும் தம்பதியரின் முகத்திலிருந்து கால்வரை மேலும் கீழுமாக ஏழு தடவை மூதாதையர் இலைக்கொண்டு தம்பதிகளைத் தீய கண்களிடமிருந்து பரிசுத்தபடுத்துவர். இந்த முறையும் அவ்விலைகளை உடனே வீசி எரிவதுண்டு. தம்பதியினரை திரும்பி அமரச் செய்து, ஷாமன் அவர்கள் மீது கலந்த அரிசியைத் தெளித்து தூய்மைபடுத்துவார். அதன் பின், புதுமண தம்பதிகள் உடை மாற்றம் செய்து விருந்தில் கலந்துக்கொள்வர்.

இந்தச் சடங்கு முடிந்தவுடன் மணமக்கள் கணவன் – மனைவியாக மஹ் மேரி சமூகத்தில் அறியப்படுவர்.

விவாகரத்து

மஹ் மேரி பழங்குடியினரின் வழக்கத்தில் திருமணங்கள் மணமக்களின் விருப்பத்திற்கு நேர்மாறாக நடக்காது. மஹ் மேரி சமூதாயத்தில் ஆண்கள் பல மனைவிகளையும் பெண்கள் பல கணவன்களையும் கொள்ளலாமென்பதால் விவாகரத்து நடப்பது அரிதினும் அரிது. மஹ் மேரி பழங்குடியில் விவாகரத்து நடக்குமெனில் தடுக்கமுடியாத சூழ்நிலைகளாலான நிலையில் இரு குடும்பங்களின் பேச்சு வார்த்தைகளுக்கிடையில் விவாகரத்து நடந்துள்ளது.

மரணச் சடங்கு

மஹ் மேரி பழங்குடியினர் குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால், அக்குடும்பத்தின் மூத்த பிள்ளை கிராமத் தலைவரைச் சந்தித்து மற்றவருக்குச் செய்தி சொல்ல உத்தரவு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறந்தவரின் வீட்டிலுள்ள மஹ் மேரி பழங்குடி குடும்பத்தார் உணவோ நீரோ அருந்த மாட்டார்கள். இறந்தவரின் ஆவிக்கு உணவளித்து அவரின் நினைவாக ஏழாம் நாள், நாற்பத்து நான்காம் நாள், நூறாவது நாள் வழிபாடுகள் செய்வர்.

தனித்துவம்

மஹ் மேரி பழங்குடியினரின் சமூகத்தில் முகமூடிகள் முக்கியமானவை. மரக்கட்டைகளில் செதுக்கப்படும் முகமூடிகள் சடங்கு, வழிபாடு, நோய்க்கு சிகிச்சையளிக்க, வாதைகளைப் போக்க, சேவாங் நடன விழாவில் அணிய எனப் பயன்படுகின்றன. மஹ் மேரி பழங்குடியினர் இந்த முகமூடிகள் இடையூறுகளைத் தடுக்கும் அடையாளமாகக் கருதுகின்றனர். அவற்றை உபயோகித்து முடித்தவுடன் காடுகளிலும் நதிகளிலும் வீசுவது இவர்களின் வழக்கம். ஒவ்வொரு முகமூடியும் குறிப்பிட்ட தன்மையுடன் செயலாற்ற வடிவமைக்கப்படுவதால், அவற்றை மஹ் மேரி பழங்குடியினர் தொடவோ, விளையாடவோ அனுமதிப்பதில்லை.

உசாத்துணை


✅Finalised Page