under review

மலாயாவின் தோற்றம் (வரலாற்று நூல்)

From Tamil Wiki
Malaya varalaru.jpg

‘மலாயாவின் தோற்றம்’ எனும் நூல், மலாயாவின் பழமையான வரலாற்றையும் பிற்கால சமூக வாழ்வையும் தொகுத்து எழுதப்பட்ட வரலாற்று நூல். இந்நூலை பெ.நா.மு. முத்துப்பழநியப்ப செட்டியார் 1938 -ம் ஆண்டு தனது 69-ம் வயதில் எழுதி வெளியிட்டார்.

நூல் அறிமுகம்

மலாயாவின் ஆதிகால வரலாறு தொடங்கி ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் வரை இந்நூலில் எழுதப்படுள்ளன. 1938--ம் ஆண்டில் முதல் பதிப்பும் 2011--ம் ஆண்டு மறுபதிப்பும் கண்ட இந்நூல் மலாயாவின் வரலாற்றையும் , பல்லின மக்களின் குடியேற்ற வரலாற்றையும் நாட்டு வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பையும் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகின்றது. மேலும் நகரத்தார் சமூகம் மலாயாவின் வளர்ச்சியிலும் தமிழர்களின் சமூக வாழ்விலும் ஆற்றிய பங்குகள் குறித்தும் விவரிக்கின்றது. முதலாம் உலகப்போருக்கும் முன்பான மலாயாவின் அமைப்பு, நகரங்கள், மக்களின் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு வரலாற்று சித்தரிப்புகளை இந்நூல் கொண்டுள்ளது. முறையான மேற்கோள்களுடன் வாசிப்புக்குச் சுவையாக பல இடங்களில் மரபு கவிதைகளையும் பாடல்வரிகளையும் இணைத்துள்ளார் ஆசிரியர்.

இந்நூலை எழுதி முடிக்கவும் நம்பகத்தன்மையுடன் கூடிய வரலாற்று ஆதாரங்களுடன் நூலை விரிவாக்கம் செய்யவும், அவரது நண்பர்கள் சுவாமி அற்புதானந்தாவடிகளும் உ.அரு.அருணாசலம் செட்டியாரும் (மலாக்கா) மிகுந்த உறுதுணையாக இருந்துள்ளனர்

நூலாசிரியர் விபரம்

பெ.நா.மு. முத்துப்பழநியப்ப செட்டியார்

பெ.நா.மு. முத்துப்பழநியப்ப செட்டியார் தமிழ் நாட்டில் காரைக்குடி அருகே அமைந்த ஆத்தன் குடி என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் நாட்டில் இருந்து தொழில் காரணமாக மலாயா வந்த அவர் பினாங்கு மாநிலத்தில் சுங்குரும்பை நகரில் (இன்று புக்கிட் மெர்தாஜாம்) ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார். தன் சமூகத்துக்கும் அங்குள்ள மக்களுக்கும் அவர் பல தொண்டுகளைச் செய்தார். சுங்குரும்பை முருகன் கோயில், மங்களநாயகியம்மன் கோயில், இராமநாதன் தமிழ்ப்பள்ளி (புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி) ஆகியவை இவரால் கட்டப்பட்டவை. மேலும் நகரத்தார் விடுதி தோற்றுனர், இந்து சபா பொறுப்பாளர், இந்து அறப்பாதுகாப்பு நிலைய உறுப்பினர் போன்ற பல்வேறு சமூக பொறுப்புகளிலும் இருந்துள்ளார். பிரிட்டீஷ் அரசு அவருக்கு ஜெ.பி (சமாதான நீதிபதி) என்கிற உயர் மதிப்பு கொடுத்து சிறப்பித்துள்ளது.

நூல் உள்ளடக்கம்

இந்நூல் நான்கு அதிகாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் அதிகாரம்

மலாயாவின் ஆதிவரலாற்றையும் மலாக்கா பேரரசு உருவாக்கம் பற்றியும் விளக்குகிறது. மலாயாவின் ஆதி அடையாளங்களை வால்மீகி ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய பக்தி இலக்கியங்களிலும், சங்க இலக்கியம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களிலும் இருந்தும் எடுத்தாண்டுள்ளார். அத்துறைகளில் ஆய்வுகள் செய்து எழுதிய ஆங்கில வரலாற்றறிஞர்களின் மேற்கோள்களையும் காட்டியுள்ளார். மலாக்கா உருவாக்கமும் அதன் வீழ்ச்சியும், இஸ்லாமிய ஆட்சிகள் உருவாக்கம், போர்த்துகீசியர் படையெடுப்பு, டச்சு, ஆங்கில படையெடுப்புகள் போன்ற பல்வேறு வரலாற்று சம்பவங்களை முதல் அத்தியாயம் கொண்டுள்ளது.

இரண்டாம் அத்தியாயம்

ஆங்கில ஆட்சியாளர்களின் நாட்டு நிர்வாக முறை, நாட்டின் வணிக வளர்ச்சி . ஆங்கில கல்வித் திட்டம், மதங்களின் சமத்துவம், போன்றவற்றை விளக்குகிறது.

மூன்றாம் அத்தியாயம்

இந்திய, சீன மக்களின் குடியேற்றம், ஜாவா மக்களின் குடியேற்றம், தொடுவாய் பகுதிகளின்(பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர்) அபரிமித வளர்ச்சி போன்ற தகவல்கள் விரிவாக உள்ளன.

நான்காம் அத்தியாயம்

பிரிட்டீஷாரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த தொடுவாய் மாநிலங்கள்( பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர்) பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றன. மேலும் ஐக்கிய மலாய் மாநிலங்கள்(ஆங்கில கவர்னரை சுல்தானின் அரசியல் ஆலோசகராக ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் பற்றிய வரலாறும் விவரிப்புகளும் உள்ளன. அதேப்போல் ஐக்கியப்படாத மலாய்நாடுகள் (ஜொகூர், கிலாந்தான், திரெங்கானு, பெர்லீஸ், கெடா) ஆகிய மாநிலங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆண்டு வரிசைப்படி நடந்த முக்கிய நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

நூலின் முக்கியத்துவம்

இந்நூல் வரலாற்று மனநிலையில் சார்புகளற்று எழுதப்பட்டுள்ளது. 320 பக்கங்கள் கொண்ட இந்நூலில் அரிய ஆட்டவணைகள், தகவல் விபரங்கள், 74 அரிய புகைப்படங்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் செட்டியார்களின் பல்துறை பங்களிப்பை அறிந்து கொள்ளவும் இந்நூல் வழிகாட்டும்.

மதிப்பீடு

மறுபதிப்பு நூலுக்கு மதிப்புரை வழங்கிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு ‘முத்துப்பழநியப்பனின் நூலில் மலேசியாவின் உண்மைச் சரித்திரமே சொல்லப்பட்டிருக்கிறது. மலாயாவின் தோற்றம் என்னும் இந்த நூல் இந்தியர்களின் தகவல் கருவூலமாக சேகரித்து வைத்தக்தக்க நூல்’ என்று மதிப்பிடுகின்றார்.

துணைநூல்

  • மலாயாவின் தோற்றம், பெ.நா.மு. முத்துப்பழநியப்ப செட்டியார் (1938)


✅Finalised Page