under review

மருதம்பாடிய இளங்கடுங்கோ

From Tamil Wiki

மருதம்பாடிய இளங்கடுங்கோ சங்க காலப் புலவர். அகநானூற்றில் உள்ள இரண்டு பாடல்களும், நற்றிணையில் உள்ள ஒரு பாடலும் அவர் பாடியவை.

வாழ்க்கைக் குறிப்பு

சேர மரபைச் சேர்ந்தவர். கடுங்கோ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கவும் பயன்படுவதால் இவர் பாண்டியர் என்றும் கூறுவர். புகழூரிலுள்ள ஆறுநாட்டான் மலையிலுள்ள தமிழ்க் கல்வெட்டு அசோகன் காலத்தை சேர்ந்தது. இதில் சேரமன்னர் மூவரின் பரம்பரை வரிசை உள்ளது. 'கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ' என்பது அந்த வரிசை. இதிலுள்ள இளங்கடுங்கோ இவர் என்பது தமிழறிஞர்கள் கருத்து. பாலைபாடிய பெருங்கடுங்கோவின் தம்பி என்பர். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய மூன்று பாடல்ளும் மருதத் திணைப் பாடல்கள் என்பதால் 'மருதம்பாடிய இளங்கடுங்கோ' என்பர். அகநானூறு (96, 176), நற்றிணை 50-ஆவது பாடல் இவர் பாடியது. வெண்ணெல் வளமிக்க பருவூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சேரரும், பாண்டியரும் இணைந்து சோழரை எதிர்த்து தோல்வி கண்ட செய்தியும், சோழரின் மகளான அஃதை பற்றிய செய்தியும் பாடலில் உள்ளது.

பாடல் நடை

  • அகநானூறு 96

நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே

உசாத்துணை


✅Finalised Page