under review

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

From Tamil Wiki

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் ஓலைக்கடை என்னும் பகுதியில் வாழ்ந்ததால் இவருக்கு மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் என்னும் பெயர் வழங்கியிருக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் பாடிய இரு பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூலான நற்றிணையில் உள்ளன. இரண்டும் அகப்பாடல்கள்.

பாடல் சொல்லும் செய்திகள்

  • மாலையில் முல்லை மலர்ந்து மணம் வீசும். குருகுகள் தங்கள் இருப்பிடம் தேடிச் செல்லும்
  • தன் மகன் கிண்கிணி(கால்சலங்கை) ஒலிக்க தேர்கள் ஓடும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வாயில் பூமணம் கமழ்ந்தது. நெஞ்சில் பூசியிருந்த சந்தனம் கலைந்திருந்தது. அவனைக் கண்ட தந்தை (தலைவன்) மகனை அள்ளி அணைக்கச் சென்றபோது ஊடியிருந்த காதலி(மனைவி) 'யாரையா நீர்' என்று சொல்லித் தடுத்தாள். இந்தச் செய்தியைத் தலைவன் தன் பாணனிடம் சொல்லித் தலைவியுடன் வாழ வகைசெய்யுமாறு வேண்டுகிறான்(நற்றிணை 250)
  • ஞெமை மரம் ஓங்கி நிற்கும் இமய மலையின் உச்சியிலிருந்து வானத்து அருவி இறங்கிக் கங்கை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். அந்தக் கங்கையான்றுப் புனல்நீர் போல என் காமம் என் நிறைவுடைமையை அடித்துக்கொண்டு ஓடுகிறது. அந்தக் காமக் கங்கையில் நீந்திக் கரையேறுவது எப்படி என்று தலைவி வருந்துகிறாள்.

பாடல் நடை

நற்றிணை 250

மருதத் திணை

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.

நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே!

நற்றிணை 369
  • நெய்தல் திணை
  • பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்
அறியேன் வாழி- தோழி!- அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்
நிறை அடு காமம் நீந்துமாறே.

உசாத்துணை

மகடூ முன்னிலை, பெண்பாற் புலவர் களஞ்சியம், டாக்டர் தாயம்மாள் அறவாணன், பச்சை பசேல் பதிப்பகம் நற்றிணை, தமிழ் சுரங்கம்


✅Finalised Page