under review

மசூரி (மலாய் நாட்டார் கதை)

From Tamil Wiki
மசூரி ஓவியம்

லங்காவி தீவில் புகழ்பெற்ற மலாய் நாட்டார் கதை ‘மசூரி’. மசூரி கதை சுல்தான் அகமட் தஜுடின் ஹலிம் ஷா II (Sultan Ahmad Tajuddin Halim Shah II ibni al-Marhum Sultan Ziyauddin Mukarram Shah) ஆட்சிக்காலத்தில் 1803-1843 ஆண்டு நடந்ததாக நம்பப்படுகிறது. மசூரி வரலாற்றைத் தொட்டு பலவிதமான புனைவு கதைகள் மலேசிய நாட்டில் வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.

பின்புலம்

மசூரியின் தந்தை பண்டாக் மாயா (Pandak Mayah) தாய் என்டா அலாங் (Endah Alang). இவர்களின் பூர்வீகம் புக்கேட் தாய்லாந்து எனக் கூறப்படுகிறது. மசூரியின் பெற்றோர் தாய்லாந்திலிருந்து புலம்பெயர்ந்து லங்காவிக்குத் தஞ்சம் புகுந்தவர்கள்.

லாங்காவியில் அவர்கள் இருவரும் விவசாயிகளாகவும் காடுகளில் மூங்கில்கள் சேகரித்தும் விற்பனைச் செய்வதையும் தொழிலாகக் கொண்டனர். குங்கிலியம் மற்றும் லாயாங் லாயாங் பறவைக்கூடுகளை விற்பனை செய்ததால் மேலும் வளம் பெற்றனர். காலப்போக்கில், அவர்களின் வாழ்க்கை மேம்பட்டு, பரந்த விளைநிலங்களை வாங்கி செல்வந்தராக விளங்கினர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் மசூரி. மசூரி 18-ம் நூற்றாண்டின் இறுதியில் லங்காவி தீவின் உலு மெலகா கிராமத்தில் பிறந்தார்.

வாழ்க்கை முறை

மசூரி குழந்தைப் பருவத்திலிருந்தே மற்ற குழந்தைகளிடமிருந்து தனித்துத் தெரிந்தார். எப்போதுமே தனக்குப் பிடித்த கருப்பு நிற உடையோடுதான் வலம் வந்தார். நன்னடத்தையையும் நல்ல பண்புநலங்களையும் கொண்டிருந்ததோடு வளர வளர பேரழகியாகத் திகழ்ந்தார். மசூரியின் புகழ், அழகு அனைவரின் பேசுப்பொருளாக மாறியது.

அக்காலக்கட்டத்தில் லங்காவியை ஆட்சி செய்த சுல்தானின் பிரதிநிதியான டத்தோ பெக்கர்மஜயா என்ற வான் யாஹ்யா (Wan Yahya) காதுகளுக்கும் மசூரியின் புகழ் எட்டியது. மசூரியை வான் யாஹ்யா வீரரான அவரின் இளைய சகோதரர் வான் டேருஸ் (Wan Derus) என்பவருக்கு மண முடித்து வைத்தார். சில காலங்களுக்குப் பிறகு மசூரி தாய்மையடைந்தாள்.

மசூரி மீதான அவதூறு

1800-களில் கெடாவுக்கும் சியாமுக்கான (தாய்லாந்து) உறவில் சரிவு ஏற்பட்டதால் போர் மூண்டது. வான் டேருஸ் கர்ப்பமாக இருந்த மசூரியை விட்டுவிட்டு போரிடச் சென்றான். மசூரி தனது பெற்றோருடன் வசிக்கத் தொடங்கினாள். அதே சமயத்தில் சுமத்திரா (இந்தோனேசியா) தீவிலிருந்து வந்த டெராமாங் (Deramang) என்ற நாடோடிப் பாடகன் அவ்வூருக்கு வந்தான். மசூரியின் பெற்றோர் அனுமதியோடு டெராமாங் மசூரி வீட்டிலேயே தங்கிப் பாடல்களைப் புனைகிறான். மசூரியும் அதில் திறமையானவளாக மாறுகிறாள். மசூரியின் புகழ் அவ்வூரில் மேலும் பரவ அது வான் யாஹ்யா மனைவியின் பொறாமைக்குக் காரணமாகியது. அவளுக்கும் நாடோடிப் பாடகனுக்கும் கள்ள உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறாள். தனது கணவனை வற்புறுத்தி மசூரிக்கும் டெராமாங்கிற்கும் மரண தண்டனைக் கிடைக்குமாறு செய்கிறார். தனது மனைவியால் தூண்டப்பட்ட வான் யாஹ்யா, போர்க்களத்திலிருந்து தனது இளைய சகோதரர் திரும்பி வரும் வரை காத்திருக்காமல் மசூரிக்கும் டெராமாங்கிற்கும் தண்டனையை வழங்க பாடாங் மட்சிராட் என்னும் இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல உத்தரவிடுகிறார். அவளது பெற்றோர் எல்லா சொத்துகளையும் கொடுத்துவிடுவதாகக் கூறியும் கெஞ்சியும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தண்டனை நிறைவேற்றப்பட்டது

மசூரி சமாதி

மசூரியை ஒரு மரத்தில் கட்டிவைத்து ஈட்டியால் குத்த முயன்றனர். ஆனால் பலமுறை முயன்றும் ஈட்டி அவளது உடலைத் துளைக்கவில்லை. பின்னர் அவளை அவர்கள் குடும்ப பாரம்பரியத்தில் வந்த அபூர்வ குத்துவாளால் (keris) கொல்ல முடியும் என அறிந்து அதனை எடுத்துவந்து குத்திக்கொன்றனர். இறக்கும் முன்பு தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தாலும் அநீதியாலும் ஏழேழு தலைமுறைக்கும் லங்காவி செழிக்காது எனவும் அமைதியும் முன்னேற்றமும் இன்றி முடங்குமமெனவும் சாபமிட்டாள். சாதாரண மக்களைப் போல் அல்லாமல் மசூரியின் ரத்தம் வெண்குருதியாக வெளியாகியது. டெராமாங்கும் பின்னர் கொல்லப்பட்டான். மசூரியை மீட்க கொடுப்பதாகக் கூறிய அவளின் சொத்துக்கள் அனைத்தும் மசூரியின் அருகிலேயே அவளது பெற்றோரால் அடக்கம் செய்யப்பட்டது என்று பரவலாகப் பேசப்படுகிறது.

மசூரி மறைவுக்குப்பின்

மசூரி கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, வான் டேருஸ் லங்காவி தீவுக்குத் திரும்பினார். தனது மனைவியின் மரணச் செய்தியால் துயருற்று தனது மகன் வான் ஹக்கீமுடன் தீவை விட்டு வெளியேறினான். லங்காவி தாய்லாந்தினால் நாசம் செய்யப்படுகிறது. வான் யாஹ்யா சயாமிய அரசால் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறான். மசூரிக்கு துரோகம் இழைத்த அவரது மனைவி வான் மஹுரா சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் பினாங்குத் தீவிலிருந்து லங்காவிக்கு வந்து எவ்வளவு முயன்றும் அந்நிலத்தை வளப்படுத்த முடியவில்லை. கடற்கொள்ளையர்களாலும் கடும் வன்முறைகளாலும் லங்காவி மசூரி சாபமிட்டதைப்போலமே இருண்ட நிலமானது.

1980-களுக்கு முன்பு, லங்காவி தீவு மிகவும் வறண்டு இருந்தது, அங்கு மக்கள் இருந்ததை விட அதிகமான எருமைகள் இருந்தன எனக் கூறப்படுகிறது. எனவே, உண்மையிலேயே மசூரி தவறிழைக்கவில்லை ஆதலால்தான் லங்காவி மசூரியின் சாபத்திற்கு ஆளானது என மக்கள் நம்பினர்.

தற்போதைய லங்காவி

1980-ம் ஆண்டுக்குப் பிறகு துங்கு அப்துல் ரஹ்மான் அங்கு மாவட்ட அதிகாரியாக இருந்தபோது மசூரி சமாதியைக் கண்டுபிடித்து அதற்கு கல்லறை அமைத்தார். அக்கல்லறை மக்காம் மசூரி ‘Makam Mahsuri’ என அறியப்படுகிறது. அச்சமயத்தில் மசூரியின் ஏழாவது தலைமுறையும் உருவாகிவிட்டதால் சாபம் நீங்கி லங்காவி எழுச்சி பெறத் தொடங்கியது. சுங்கம் இல்லாத தீவாக அறிவிக்கப்பட்ட பின்னர் பெரும் சுற்றுப்பயணத் தீவாக மாறியது. மசூரியின் பரம்பரையில் வந்த ஏழாவது தலைமுறை என்ற பெருமையுடன் 1990-ம் ஆண்டு Wan Aishah Wan Nawawi என்பவரை கெடா மாநில வரலாற்றுக் கழகம் ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தியது. அப்பெண் தற்போது தாய்லாந்து பிரஜையாக புக்கேட் தீவில் வசித்து வருகிறாள்.

உசாத்துணை


The Legend of Mahsuri

மலாய் புராணக்கதைகள் ஓர் அறிமுகம் - ம.நவீன்

மசூரி திரைப்படம்


✅Finalised Page