under review

போங்கி

From Tamil Wiki
போங்கி மக்கள்

போங்கி இன மக்கள் மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழும் சிறுபான்மைப் பழங்குடிக் குழுவினர். போங்கி மக்கள் சபா மாநிலத்தின் கூடாத் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாங்கித் தீவில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சமயம் / நம்பிக்கை

போங்கி இன மக்கள் ஆன்மவாத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். போங்கி இன மக்களில் வெகு சிலரே கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய சமயங்களைத் தழுவியிருக்கின்றனர். போங்கி இனமக்களின் சமய நம்பிக்கைகள் அதிகமும் சடங்குகளிலும் சிகிச்சை முறைகளிலுமே வெளிப்படுகின்றன. போங்கி மக்கள் தங்கள் இனக்குழுவில் நிகழும் குற்றங்களைக் கிராமத்தலைவரான ங்குஹுமேவிடம் முறையிடுகின்றனர். கிராமத்தலைவர் (nguhume) குற்றங்களை விசாரித்து, குற்றங்கள் நிருபிக்கப்படும் நிலையில் தகுந்த தண்டனைகளை வழங்குகின்றார்.

மொழி

போங்கி இனமக்கள் கடசான் டுசுன் மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். கடசான் டுசுன் மொழியைத் தனித்த உச்சரிப்புடன் பயன்படுத்துகின்றனர். .

சடங்குகள்

நோய் ஆற்றும் சடங்கு
போங்கி மக்கள்

நோய்களுக்கான சிகிச்சைச் சடங்கினை பெஜின் (bejin) என்றழைக்கின்றனர். இச்சடங்கின் போது, பூசகர் நோயைச் சிகிச்சைப்படுத்தும் நல்லாற்றல்களை விண்ணிலிருந்து அழைக்கின்றார். இரவில் நடத்தப்படும் பெஜின் சடங்கில் பெதெகுங்கு எனப்படும் தாளக்கருவியை இசைத்து விண்ணிலிருந்து நல்லாற்றல்களை அழைத்து நோயைக் குணப்படுத்த வேண்டுகின்றனர். தீவிரமற்ற நோய்களுக்கு மூலிகைகளை அரைத்து மந்திரங்களை வாசித்து நோயுள்ள அங்கத்தில் பூசுகின்றனர். பெஜின் சடங்கு நடத்தப்பட்டு மூன்று நாட்களாகியும் நோய் தீவிரம் குறையாதவர்களுக்கு மீண்டும் அச்சடங்கினை நிகழ்த்துகின்றனர். தீவிர நோய்கள் உடையவர்களின் விரல்களில் ஊசி குத்தி, ரத்தம் எடுக்கப்பட்டு வயிற்றுப்பகுதியில் பூசப்படுகிறது.

திருமணச்சடங்குகள்

கிராமத்துத் தலைவரின் முன்னிலையில் மணம்புரிய விரும்பும் மணப்பெண்ணை நிச்சயம் செய்வதிலிருந்து போங்கி இனக்குழுவின் திருமணச்சடங்குகள் தொடங்குகின்றன. மணப்பெண் வீட்டார் திருமணத்துக்கு இசைவளித்தவுடன் திருமணநாள் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு திருமணத்தன்று அளிக்கப்படவேண்டிய சீர் பொருட்களான பணம், தூக் எனப்படும் தாளக்கருவி, காடூர் எனப்படும் குறுங்கத்தி ஆகியவைக் குறித்த பேச்சுவார்த்தை நிகழ்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் மணமக்களின் பெற்றோர் அனுமதியின்றி மணமக்கள் சந்தித்துக் கொள்ளக்கூடாது. இவ்விதியை மீறுகின்ற மணமகனுக்குச் சோகிட் எனப்படும் தண்டம் (அபராதம்) விதிக்கப்படுகிறது. ஒரு சாண் அளவுள்ள வெள்ளி அலங்காரப் புகையிலைப் பெட்டியும் சும்புல் எனப்படும் கூடையுமே தண்டமாக விதிக்கப்படுகிறது. போங்கி இனமக்களின் திருமண விதிகள் சபா மாநில அரசாங்கம் வெளியிட்டிருக்கும் மாநிலப் பழங்குடி மக்களின் இனவழக்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இறப்புச்சடங்குகள்

போங்கி இனமக்களின் வழக்கப்படி இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு நிகழ்ந்த மூன்று நாட்களுக்கு குளிக்காமல் துக்கம் அனுசரிக்க வேண்டும். அதன்பின்னர், துக்க அனுசரிப்பின் அடையாளமாக ஆண்கள் தங்கள் தலைமுடியை மழித்துக் கொள்கின்றனர்; பெண்கள் கூந்தலின் கீழ் முடியை வெட்டிக் கொள்கின்றனர். அதைப் போல இறந்தவரின் கல்லறைக்குச் செல்வதற்கும் தடை இருக்கிறது.

கட்டுமானம்

போங்கி இன மக்கள் வீடு

போங்கி இனமக்களின் வீட்டு வடிவமைப்பும் கட்டுமானமும் தனித்துவமானது. போங்கி மக்களின் வீடு பாலி என அறியப்படுகிறது. சபாவில் இருக்கும் மற்ற இனக்குழுக்களைப் போல போங்கி மக்கள் நீண்டவீடுகளைக் கட்டுவதில்லை. பாலி வீடுகளின் கூரைப்பகுதிகளில் நீள்வாக்கான கோடுகள் அதிகமும் காணப்படுகின்றன. தூண்களால் தாங்கப்படும் வீடுகளின் தரைப்பகுதி நிபோங் எனப்படும் கட்டைகளால் ஆனதாக அமைந்திருக்கிறது. லாடோங் எனப்படும் மரத்தின் இலைகளைக் கொண்டு வீட்டின் கூரை வேயப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page