பொற்றொடி (நாவல்)
பொற்றொடி (1911) தமிழின் தொடக்க கால நாவல்களில் ஒன்று . ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை எழுதிய நாவல் இது. துணிச்சலான சுதந்திரமான பெண் கதாபாத்திரங்களைச் சித்தரிப்பது இக்காலகட்டத்தில் தமிழில் முக்கியமான சமூகசீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இந்நாவல் அப்படி ஒரு கதைநாயகியை காட்டுகிறது. இது தமிழில் பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றை முன்வைத்த நாவல்.
எழுத்து, பிரசுரம்
ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம்பிள்ளை வழக்கறிஞர். சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். ஜி.சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். இந்நாவல் 1911-ல் வெளிவந்தது. 1913-ல் மறு பதிப்பு வெளிவந்தது. இரண்டாம் பதிப்புக்கு மதுரை அமெரிக்க மிஷன் உயர்தர கலாசாலை தமிழ் பண்டிதர் நெ.ரா.சுப்ரமணிய சர்மா முன்னுரை எழுதியிருக்கிறார்.
கதைச்சுருக்கம்
பொற்றொடி ஒரு சுதந்திர சிந்தனை உள்ள பெண். பள்ளி ஆசிரியன் சீராளனைக் காதலிக்கிறாள். அவள் வீட்டில் அவளைக் கேட்காமல் வெள்ளையப்பனுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்க முயல்கிறார்கள். அவள் அதை ஏற்பதில்லை. சீராளனின் நண்பரான பக்காச்சாமியார் சமூகசீர்திருத்த சபையின் தலைவர் ஜட்ச் சத்தியசீலர் மற்றும் அவர் மனைவி துளசி இருவர் உதவியுடன் பொற்றொடியை கடத்திச் சென்றுவிடுகிறார். வெள்ளையப்பனுடன் திருமணம் உறுதியான அதே நாளில் சீராளன் பொற்றொடியை மணந்துவிடுகிறான். வெள்ளையப்பன் ஒரு ஜமீன்தார் உதவியுடன் வந்து தாக்க பெரிய அடிதடி நடைபெறுகிறது. கலகத்தில் வீடு தீக்கிரையானதனால் பொற்றொடியும் சீராளனும் கடும் துயர்களை அடைகிறார்கள். இறுதியில் வெள்ளையப்பனும் பிறரும் தண்டிக்கப்படுகிறார்கள். சீராளனுக்கு உயர்ந்த வேலைகிடைக்கிறது. அவனுக்கு ஒரு பிரிவுபச்சார விழா நடைபெறுகிறது. அதில் பக்காச்சாமியார் பணம் பற்றி மணமா, குணம் பற்றி மணமா என்னும் உரையை நடத்துகிறார்
இலக்கிய இடம்
இந்நாவல் அடிப்படையில் புதிய காலகட்டத்தின் வரவை கொண்டாடுவது. பழையகாலகட்டம் முடிந்துவிட்டது என்று அது கூறுகிறது. கட்டாயமணம் புரிய நினைக்கும் வெள்ளையனிடம் பொற்றொடி 'ஆனால் ஒன்றுமட்டும் திண்ணமாய் தெரிந்துகொள். நீ என்ன சொன்னாலும் சரி, உன்னுடைய அம்மாவும் தாத்தாவும் சொன்னாலும் சரி, காரியம் நடவாது. கவர்மெண்டு இங்கிலீஷ் கவர்மெண்டு என்பது ஞாபகத்தில் இருக்கட்டும் என்று சொல்கிறாள். இது அக்காலத்தைய பொதுமனநிலையின் பதிவும் ஆகும்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:35 IST