under review

பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி

From Tamil Wiki
பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி

பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி (பொ.யு. 9--ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திண்டிவனத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தென்மேற்கிலுள்ள பெருமண்டூர் பொ.யு. 9--ம் நூற்றாண்டிலிருந்து புகழ் மிக்க சமணத்தலம்.

வரலாறு

இவ்வூர் பெருமடை, பெருமாண்டை, பெருமாண்டைப்பாற்புத்தூர் என பலவாறாகப் பெயர் பெற்று பிற்காலத்தில் பெருமண்டூர் என மாற்றம் பெற்றது.

அமைப்பு

இங்கு ஆதிநாதருக்கும், சந்திரபிரபா தீர்த்தங்கரருக்கும் தனித்தனியாக கோயில்கள் உள்ளன. இவற்றுள் தொன்மை வாய்ந்தது ஆதிதாதர் கோயில். இது இரவிகுலசுந்தரப்பெரும்பள்ளி என அழைக்கப்படுகிறது.

சந்திரநாதர்

பெரிய கோயில் மூலவர் சந்திரநாதர். இவர் கருவறையில் பிரமாண்டமான சிம்மாசனத்தில் முக்குடையின் கீழ் வீற்றுள்ளார். சுதையால் வடிக்கப்பட்டுள்ளார். இவர் அருகிலேயே தரணேந்திரர், பத்மாவதிதேவி சிலைகள் உள்ளன. பாரீசநாதர், விஸ்வேஷ்சாகர் மாமுனிவரின் பாத கமலங்கள் கோயில் வளாகத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலை 'இரவி குல சுந்தரப் பெரும்பள்ளி’ எனச் சோழர் நினைவாகப் பெயரிட்டுள்ளனர். கோயிலின் யட்சியை அரசியின் பெயரான 'முன்கை வளைகொண்ட மங்கையர் நாயகி வரசுந்தரி’ என அழைத்தனர்.

ஆதிநாதர் கோயில்

முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட கோயில் கருவறை, அர்த்தமண்டம், மகாமண்டபம் முகமண்டபம், சித்திரகூடமண்டபம், தருமதேவி கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டது. சித்திரகூடத்தை அடுத்து மானஸ்தம்பமும், பலி பீடமும் காணப்படும். பலிபீடத்தின் வடபுறத்திலும், தென்புறத்திலும் இரண்டு மண்டபங்கள் உள்ளன. இவையனைத்தையும் உள்ளடக்கியவாறு திருச்சுற்றுமதிலும் அதன் கிழக்குப்பகுதியில் கோபுரமும் கட்டப்பட்டிருக்கின்றன. கோபுரத்தின் தென்புறத்தில் வட்டவடிவ அமைப்புடைய ஜன்மாபிஷேக மண்டபம் ஒன்று உள்ளது

ஆதிநாதர் கோயில் பல்வேறு காலகட்டங்களில் புதுப்பிக்கப்பட்டிருந்தபோதிலும் இதன் அடித்தளப்பகுதி பண்டைய கட்டடக் கலையம்சங்களைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் பொ.யு. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருவறை அர்த்தமண்டபம் ஆகியவற்றின் கருங்கல்லான அடித்தளப்பகுதி உபானம், ஜகதி, திரிப்பட்டக்குமுதம் கலப்பகுதி(gala) பட்டிகை ஆகிய உறுப்புகளைக் கொண்டது. இந்த அடித்தளத்தில் பல்லவ மன்னனாகிய மூன்றாம் நந்திவர்மனது 19- ஆவது ஆட்சியாண்டு (பொ.யு. 866) கல்வெட்டு காணப்படுவதால், இந்த அரசனது ஆட்சிக்காலத்தில் இக்கோயில் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.

மகாமண்டபத்தினை ஒட்டி வடக்குப்புறத்தில் தருமதேவிக்குத் தனிக் கருவறை பொ.யு. 1192--ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அடங்கி ஆட்சி செய்து வந்த சம்புவராய சிற்றரசனாகிய இராசராசன் என அழைக்கப்பட்ட கண்ட சூரியன் என்பவன் கட்டி, அதில் யக்ஷியைப் பிரதிட்டை செய்தான் என சாசனம் ஒன்றின வாயிலாக அறியலாம். பொ.யு.12--ம் நூற்றாண்டில் மகாமண்டபம், யக்ஷி கருவறை ஆகியவற்றையும், பொ.யு. 16--ம் நூற்றாண்டில் முகமண்டபத்தையும், இருபதாம் நூற்றாண்டில் பிற மண்டபங்களையும் கொண்டு படிப்படியாக விரிவாக்கம் பெற்றிருப்பது தெரிய வருகிறது.

தர்மதேவி பெருமண்டூர்
சிற்பங்கள், உலோகத் திருவுருவங்கள்

ஆதிநாதர் கருவறையில் பொ.யு 15--ம் நூற்றாண்டைச் சேர்ந்த சலவைக் கல்லினாலான திருவுருவம் உள்ளது. யக்ஷி கருவறையில் பொ.யு. 12--ம் நூற்றாண்டில் பிரதிட்டை செய்யப்பட்ட சிற்பம் காணப்படவில்லை. தருமதேவியின் திருவுருவம் மயிலாப்பூரிலிருந்த நேமிநாதர் கோயிலைச் சார்ந்தது. இக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் சிறியனவாகவும், பெரியனவாகவும் உள்ளன. இவற்றுள் ரிஷபநாதர், சந்திரநாதர், முனிஸ்விரதர், சாந்திநாதர், சுமதிநாதர், கணதரர், தர்மதேவி, சரஸ்வதி ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை.

தருமதேவி வழிபாடு

தொண்டை நாட்டிலுள்ள சைனக் கோயில்களுள் பெருமண்டூர், திருப்பறம்பூர், சித்தாமூர் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் தருமதேவி வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெருமண்டூரில் பொ.யு. 12--ம் நூற்றாண்டிலேயே தருமதேவிக்குத் தனிக் கருவறை கட்டி, இத்தேவியின் வழிபாட்டுச் செலவிற்கென நிலதானங்கள் அளித்துள்ளனர்.

கல்வெட்டுகள்

பல்லவ நந்திவர்மன் நிலக்கொடைப் பற்றிய பொ.யு. 866 -ம் ஆண்டின் கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கனின் சிற்றரசன் கண்டர சூரிய சம்புவராயன் கால பொ.யு. 1192-ன் பள்ளிச்சந்தம் கல்வெட்டும் காணப்படுகிறது. மற்றோர் கல்வெட்டு கோயிலின் நிலங்களைப் பற்றியது.

கல்வெட்டுச் செய்திகள்

1. ஆதிநாதர் கோயிலிலுள்ள காலத்தால் முந்திய சாசனம் மூன்றாம் நந்திவர்ம பல்லவனது 19-வது ஆட்சியாண்டைச் (பொ.யு. 866) சார்ந்தது. இப்பள்ளிக்கு இரு நூறு அளவைநெல் தானமாக வழங்கப்பட்ட செய்தியைக் கொண்டது. பொ.யு. 9--ம் நூற்றாண்டில் இக்கோயில் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டது.

2. பொ.யு.1192--ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கண்டரசூரியன் என்னும் சம்புவராய சிற்றரசன் இக்கோயிலில் யக்ஷிக்கெனத் தனிக்கருவறைகட்டி, அதில் அவ்விறைவியின் சிற்பத்தை பிரதிட்டை செய்திருக்கிறான்.

3.அக்காலத்தில் ஆதிநாதர் கோயில் இரவிகுலசுந்தரப் பெரும்பள்ளி எனவும், இவ்வூர் பெருமாண்டைப்பாற்புத்தூர் எனவும் அழைக்கப்பட்டது. இச்செய்தினைக் கூறும் சாசனத்தைக் கொண்ட தூண் தற்போது சந்திரநாதர் கோயிலில் காணப்படுகிறது.

பெருமண்டூர்ப் பேரறிவாளர்கள்

  • பெருமண்டூர் மல்லிசேனப் பெரியோர் திருநறுங்கொண்டையிலுள்ள வீரசங்கத்தில் தொண்டாற்றினார். இவர் தமிழகத்தின் தென்பகுதிவரைக்கும் சென்று அறநெறி போற்றியவர்.
  • பொ.யு. 12--ம் நூற்றாண்டில் பெருமண்டூரில் வாழ்ந்த மல்லிசேனர் வேண்டுகோளின்படி தான் கண்டர சூரியன் என்னும் சிற்றரசன் யக்ஷி வழிபாட்டிற்கென ஏராளனான நிலங்களைத் தானம் செய்திருக்கிறான்.
  • பொ.யு.16--ம் நூற்றாண்டில் திருநறுங்கொண்டையில் வீர சங்கத்தை மீண்டும் நிலைபெறச் செய்த குணபத்திராச்சாரியாரின் குருவாகிய மண்டல புருஷர் பெருமண்டூரில் பிறந்தவர். இவர் சூடாமணி நிகண்டை யாத்தவர்.

பெருமண்டூரும், சித்தாமூரும்

பொ.யு. 16--ம் நூற்றாண்டிலிருந்து பெருமண்டூரிற்கும், சித்தாமூருக்கும் சமண சமயத்தின் மூலம் நெருங்கிய தொடர்பு இருந்தது. சித்தாமூரில் வீரசேனாச்சாரியார் மடத்தினை நிறுவச் செல்லச் சென்றபோது பெருமண்டூரில் வாழ்ந்த மக்கள் தங்களது அன்றாட வேலைகளையும் புறக்கணித்துவிட்டு அவரைப் பின் தொடர்ந்து சித்தாமூருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை தெரிவிக்கும் ஓவியங்கள் பெருமண்டூரிலுள்ள சந்திரநாதர் கோயிலில் காணப்படுகின்றன.

பிற்காலத்திலும் பெருமண்டூரைச் சார்ந்த சமணப் பெருங் குடிமக்கள் சித்தாமூர்க் கோயில் சிறப்புற வளர்ச்சி பெறுவதற்குத் துணை நின்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு சித்தாமூர்க் கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவத் திருவிழாவிற்கான தேதி குறித்தவுடன், அச்செய்தியினை முதன் முதல்ல பெருமண்டூர் மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். மேலும் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்குத் தேவையான நித்திய பாலினைப் பெருமலை மக்களே அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு வழிகளில் பெருமண்டூருக்கும், சித்தாமூருக்கும் நெருங்கிய தொடர்பு நெடு நாட்களாக இருந்து வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page