under review

பெரிய மேளம்

From Tamil Wiki
பெரிய மேளம்

பெரிய மேளம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நடத்தப்படும் நாட்டார் நிகழ்த்துகலை. பெரியமேளம் என்னும் இசைக்கருவியைக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் இக்கலை இப்பெயர் பெற்றது. அருந்ததியர் சாதியினர் இக்கலையை நிகழ்த்தி வருகின்றனர்.

நடைபெறும் முறை

பெரிய மேளம் குழுவில் ஏழு பேர் இடம்பெறுவர். அக்குழுவை 'மேளசெட்' என்பர். பெரியமேளம், தமரு, சட்டி, தமக்கு, ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளைக் குழுவினர் பயன்படுத்துவர். ஒவ்வொரு குழுவிலும் இரு தமருக்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு ஆறு இசைக்கருவிகளை ஆறு கலைஞர்கள் பயன்படுத்துவர். பெரிய மேளம் ஏறக்குறைய பத்து கிலோ எடையுள்ளதால் அதனை மாற்றிக் கொள்ள ஒருவர் எப்போதும் தயாராக இருப்பார்.

பெரிய மேளம் நிகழ்த்தப்படும்போதே ஒவ்வொரு அடிக்கும் உள்ள (தாளம்) வேறுபாட்டைக் கலைஞர்கள் தெரிந்து கொள்வர். பெரிய மேளத்தில் மொத்தம் பத்து அடிமுறைகள் உள்ளன. அவ்வடிமுறைகளைப் "பாகம்" என்று கூறுகின்றனர். இக்கலைஞர்களுக்கு செவ்வியல் கலையில் உள்ள ராகம், தாளம் பற்றி எதுவும் தெரியாது. பழக்கத்தில் மேளத்தை அடிப்பர், அடியை மாற்றும்போது பிற இசைக்கருவிகளும் அதற்கேற்ப இசைக்கப்படும்.

கலைஞர்கள் காலில் சலங்கை கட்டியிருப்பர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு ஆடும்போது சலங்கையின் இசையும் இணைந்து ஒலிக்கும்.

மேளத்தின் அடிமுறை
  • ஆட்டத்தின் முதல் பாகத்தில் அவர்கள் நிகழ்த்தவிருக்கும் பத்து ஆட்டங்களுடைய முன்னோட்டம் நிகழ்த்திக் காட்டப்படும். இதனை 'முதலடி' என்று கூறுகின்றனர்.
  • இரண்டாம் பாகம் பொதுவாக எல்லா விழாக்களிலும் அடிக்கப்படும் அடி.
  • திருமணத்திற்கு இசைத்து ஆடப்படுவது மூன்றாம் பாகம் எனப்படும்.
  • கங்கையம்மனுக்குக் கூழ் வார்க்கும் போது நான்காம் பாகம் அடிக்கப்படுகிறது.
  • வேகமான திரைப்படப் பாடல்களுக்குரிய அடி ஐந்தாம் பாகம் எனப்படும்.
  • ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ் வார்க்கும்போது அடிக்கப்படுவது.
  • பொங்கலின் போது நிகழ்த்தப்படும் மேளம் ஏழாம் பாகம்.
  • புலியாட்டத்தின் போது அடிக்கப்படும் மேளம் எட்டாம் பாகம் என்றழைக்கப்படுகிறது. இதனை 'ஜடலடி' என்றும் கூறுவர்.
  • விழாக்காலங்களில் ஒன்பதாம் பாகம் எனப்படும் அடி அடிக்கப்படுகிறது.
  • பத்தாம் பாகம் 'சாவு அடி'. இறப்பின் போது இம்மேளம் இசைக்கப்படுகிறது. ஊரில் யாரேனும் இறந்தால் சலங்கை கட்டி பெரிய மேளத்தில் சாவு அடியை நிகழ்த்தும் போது ஊரே கூடிவிடும்.

வட தமிழ்நாட்டிலுள்ள மக்கள் இழவுக் காரியங்களுக்குத் தான் பெரிய மேளத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். எனவே பெரிய மேளக் கலைஞர்கள் தற்போது குறைந்து வருகின்றனர்.

நிகழும் ஊர்கள்

இக்கலை தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நிகழ்த்தப்படுகிறது.

நடைபெறும் இடம்

கோவில் திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள், சில சாதியினரின் திருமணங்கள், இறப்புச் சடங்குகள் ஆகியவற்றில் இக்கலை இடம்பெறும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

காணொளி


✅Finalised Page