under review

பெண்ணின் குரல்

From Tamil Wiki
பெண்ணின் குரல் (இதழ்)

பெண்ணின் குரல் (இதழ்) (1979) ஈழத்துப் பெண்கள் மாத இதழ். முற்போக்குச் சிந்தனை கொண்ட இதழ்.

வெளியீடு

பெண்ணின் குரல் 1979 முதல் கொழும்பிலிருந்து வெளியான மாதம் ஒருமுறை இதழ். ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. சிங்களத்தில் 'காந்த ஹன்ட்', ஆங்கிலத்தில் “Voice of women" என்ற பெயர்களில் வெளிவந்தது. எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் பதினொரு ஆண்டுகள் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

நோக்கம்

பெண்ணின் குரல் இதழ் ஒரு முற்போக்கு மாதர் இதழ். ”பெண் ஒரு விற்பனைப் பண்டமல்ல” என்ற பிரகடனத்துடன் இவ்விதழ் வெளிவந்தது. இவ்விதழின் நோக்கங்கள்:

  • பல்வேறு துறைகளையும், அமைப்புகளையும் சார்ந்த பெண்களை இணைக்கும் அமைப்பாகச் செயல்படுதல்
  • பெண்களின் விடுதலை, நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக வாழ்வில் முழுமையாக பெண்கள் பங்காற்றுவதை முன்னிருத்தல்
  • பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுவதையும், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் அம்பலப்படுத்தல்.
  • இலங்கையிலும் பிற நாடுகளிலும் தமது உரிமைகளுக்காக பெண்கள் போராடும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

உள்ளடக்கம்

பெண்ணின் குரல் பெண்ணிய இதழாக, பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளுக்கு எதிரான இதழாக, மாதர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் வெளியாகிறது. இந்த இதழில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களும் பெண்கள் சார்ந்தவை. பெண்களுக்கான புரட்சிக் கருத்துக்களைப் பேசும் கவிதைகள் வெளிவந்தன.

பெண்களுக்கு சம ஊதியம், பெருந்தோட்டம், சுதந்திர வர்த்தக நிலையம், விவசாயம், கைத்தொழில்கள், அரேபிய நாடுகளில் பெண் தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற்றை பொருளாதார ரீதியில் ஆய்ந்துள்ள கட்டுரைகள், விளம்பரம், சினிமா, கவிதைகள், பாட நூல்கள், வானொலி ஆகிய பொதுஜன தொடர்பு சாதனங்களில் பெண்கள் பற்றித் தவறான கருத்துக்கள் கூறப்படுவதைக் கண்டிக்கும் கட்டுரைகள், பிற நாடுகளில் பெண்கள் இயக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் ஆகியவை வெளிவந்தன.

இலக்கிய இடம்

பெண்ணின் குரல் இதழைப்பற்றி ”பெண்கள் சஞ்சிகைகளில் வழமையாக வெளியிடப்படும் பெண்களின் அற்ப வெளிப்புற விடயங்கள் இல்லாது சமுதாயம் பெண்களை சுரண்டுவதை அம்பலப்படுத்துகிறது” என சண்டே அப்சர்வர் நாளிதழ் குறிப்பிட்டது.

ஆவணம்

உசாத்துணை


✅Finalised Page