under review

பாம்பு நடனம்

From Tamil Wiki
பாம்பு நடனம்

இந்நிகழ்த்துக் கலை பாம்பைப்போல் உடலை வளைத்து ஆடும் நடனம். இது கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும், துணை ஆட்டமாகவும் நடைபெறும். அண்மை காலத்தில் உருவான இக்கலை பொழுதுபோக்குத் தன்மைக் கொண்டது. இதனை "பாம்பாட்டம்" என்றும் அழைக்கின்றனர்.

நடைபெறும் முறை

கரகாட்டப் பெண் கலைஞர்களில் இளவயது பெண்கள் இந்நடனத்தை ஆடுவர். கரகாட்டம் நிகழும் கோவில் விழாக்களில் இந்நடனம் நிகழ்த்தப்படும். இது நடனமாக மட்டுமின்றி நாடகத்தன்மையுடனும் நிகழ்கிறது. பாம்பு நடனத்திலும், அதனை தொடர்ந்து நடைபெறும் நாடகத்திலும் கரகாட்டப் பெண், கோமாளி, குறவன், குறத்தி ஆட்டக்காரர்கள், நையாண்டி மேளக்காரர்கள் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.

பாம்பு நடனத்தை அடுத்து நடைபெறும் நாடகத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில் வரும் மருத்துவர், மணப்பெண், மணமகள் இடம்பெறுவர். நடனம் ஆடுபவர் நடனத்திற்கு ஏற்ப நாதஸ்வரக்காரர் மகுடி வாசிப்பார். அந்த மகுடியின் இசைக்கு ஏற்ப நடனமாடும் பெண் வளைந்து வளைந்து ஆடுவார். பொதுமக்களின் கூட்டத்தில் இருந்து கோமாளி வேடமணிந்தவர் இதனை வேடிக்கைப் பார்ப்பார். சிறிது நேரம் கழித்து அவரும் ஒரு கோலை எடுத்து மகுடி வாசிப்பதுப் போல் நடிப்பார். அவர் அருகே சென்று பாம்பாடும் பெண் ஆடுவார். திடீரென அவரைக் கொத்திவிடுவார்.

அவர் மயங்கி விழுந்ததும், பாம்பு பெண் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுவார். அதன்பின் இறந்தவரின் தங்கை வந்து ஒப்பாரி பாடல் பாடுவார். இசைக் கலைஞர்களில் ஒரு அவளிடம் வந்து, "அழாதே ஒரு வைத்தியன் இருக்கிறான் இவனைப் பிழைக்கவைத்து விடுவான்" என்று ஆறுதல் சொல்லிவிட்டு, அவர் ஒரு குறவனை அழைத்து வருவார்.

குறவன் மயங்கிக் கிடப்பவரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்து, "இவனை நான் காப்பாற்றுகிறேன். என்னை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், சத்தியம் செய்" என்பார். அப்பெண்ணும் சத்தியம் செய்துக் கொடுப்பார்.

குறவன் கையிலுள்ள கோலைக் கொண்டு மகுடி ஊதுவார் (குறவன் அப்படி நடிக்கும் போது நாதஸ்வரக் கலைஞர் மகுடி வாசிப்பார்). பாம்பு வேஷம் கட்டிய பெண் மீண்டும் வந்து மயங்கிக் கிடப்பவரின் காலில் வாய் வைத்து அவர் உடலில் இருந்த விஷத்தை உறிஞ்சுவார். அவருக்கு மயக்கம் தெளிந்து எழுந்துவிடுவார். பின் திருமணப் பேச்சு தொடக்கும்.

குறவனுக்குத் தன் தங்கையை மணம் பேசக் கோமாளி வருவார். மேளக்காரர்களிடம், சாப்பாட்டுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்று பேசுவார். திருமண அழைப்பும் தொடங்கும். மேளக்காரர் பாடலை இசைப்பார். இப்படியாக நகைச்சுவையுடன் திருமணம் முடியும். கரகாட்டத் துணைக்கலையான காளையாட்டத்திலும் இதே போல் திருமணக் காட்சி வரும்.

நிகழ்த்துபவர்கள்

  • கரகாட்டப் பெண் - இவர் பாம்பு வேஷம் கட்டி நடனம் ஆடுவார்
  • கோமாளி - இவர் நகைச்சுவை நாடகத்தில் பாம்பு தீண்டும் பாத்திரத்தில் இடம்பெறுவார்.
  • குறவன் - இவர் மருத்துவராக வருவார்
  • மணப்பெண் - இவர் கோமாளியின் தங்கையாக வருவார்
பாம்பு நடனம்

அலங்காரம்

  • இந்நடனம் ஆடுகின்ற பெண் உடலை ஒட்டியவாறு வெண்ணிற ஆடையையோ, பாம்பு நிறமுள்ள வெள்ளிபோல் மினுங்கும் ஆடையையோ அணிந்து கொள்கிறார். இந்த ஆடையின் பின்புறம் கறுப்பு நிறமுடையதாக இருக்கும்.
  • பாம்பு நடனத்தை அடுத்துவரும் நகைச்சுவை நாடகத்தில் வரும் மருத்துவர், மணப்பெண், மணமகன் அவரவருக்குரிய ஒப்பனைகளுடன் வருவர்.

நிகழும் ஊர்கள்

இந்நிகழ்த்துக் கலை இன்று மிக அருகியே நிகழ்கிறது.

  • இது இப்போது தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் மிக அபூர்வமாக நிகழ்கிறது.

நடைபெறும் இடம்

கரகாட்டம் நிகழும் கோவில் விழாக்களில் இது நிகழ்த்தப்படுகிறது. இது ஊர்வலத்தின் போதோ, பொது இடங்களிலோ, வீதிகளிலோ நிகழ்வதில்லை. இக்கலை மேடைகளிலே நிகழ்த்தப்படுகிறது. பாம்பு நடனம் ஆடுபவரின் உடையுடன் வீதியில் புரண்டு ஆட முடியாததே அதற்கு காரணம்.

இசைக்கருவிகள்

கரகாட்டத்தின் இசைக்கருவிகளே பாம்பாட்டத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இக்கலைக்காக நாதஸ்வரத்தில் மகுடி வாசிக்கும் போது தவில், பம்பை ஆகிய இரண்டும் பின்னணியில் மெல்ல ஒலிக்கின்றன.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்


✅Finalised Page