under review

பத்ரகாளி

From Tamil Wiki
Batrakaali2.jpg

பத்ரகாளி: பார்வதி தேவியின் வடிவம். சிவனின் சடைமயிரிலிருந்து வீரபத்திரருடன் தோன்றியவள். தக்ஷனின் யாகத்தை அழிப்பதற்காக பிறந்தவள்.

தோற்றம்

நன்றி தமிழ் இந்து

பத்ரகாளியின் தோற்றம் வீரபத்திரர் தோற்றக் கதையுடன் தொடர்புடையது. தக்ஷனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி தீயில் விழுந்து மாய்ந்தாள். பார்வதி தீயில் விழுந்த செய்தி கேட்ட சிவன் சினம் கொண்டார். தன் சடை மயிரில் ஒன்றை எடுத்து நிலத்தில் அரைந்தார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர் என்ற கதை தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

பார்க்க: வீரபத்திரர்

புராணங்கள்

அக்னி புராணம்

பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் கம்சன் தேவகியை அடைத்து வைத்திருந்த அறையில் தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் பிறந்தார். வசுதேவர் கிருஷ்ணனை யசோதையிடம் கொடுத்துவிட்டு யசோதையின் மகளை சிறைபட்டிருந்த அறைக்கு எடுத்து வந்தார். கம்சன் அவ்வறைக்கு வந்த போது பெண் குழந்தையை கண்டு அதனை சிறை சுவற்றில் முட்ட முயன்றான். அக்குழந்தை கம்சன் கையிலிருந்து பறந்து ஆகாயத்தின் மேல் சென்றது. அந்த குழந்தை பத்ரகாளியின் ஒரு வடிவம் என அக்னி புராணத்தின் பன்னிரெண்டாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது.

லங்காலட்சுமி

Batrakaali3.jpg
Badhrakali.jpg

லங்காலட்சுமி இலங்கையை காவல்காத்து வந்தாள். அனுமன் இலங்கைக்குச் சென்ற போது அவனை முதலில் தடுத்து நிறுத்திய லங்காலட்சுமி காளியின் ஒரு வடிவமாக கருதப்படுகிறாள். அனுமன் தன் இடது கையால் லங்காலட்சுமியை அடித்து தள்ளிய போது மயங்கி விழுந்தாள். திரும்பி எழுந்த போது பழைய நினைவுகள் தெளிந்து காளியின் வடிவம் கொண்டாள். இராமன், இராவணன் போரை காணமுடியாது வருத்தமுற்ற காளி சிவனிடம் முறையிட்டாள். சிவன் அவள் முன் தோன்றி, “நீ திராவிட நாட்டிற்குச் சென்று அங்கே எனக்காக ஒரு சுயம்புலிங்க கோவிலை உருவாக்கு. நான் அவ்விடத்தில் கம்பனாக பிறந்து இராமாயணத்தை தமிழில் இயற்றுவேன். அப்போது நீ ராமாயணத்தையும், ராம, ராவண யுத்தத்தையும் கேட்கவும், பார்க்கவும் முடியும்” எனக் கூறி மறைந்தார். சிவன் சொல் கேட்ட காளி அதன்படி திராவிட நாட்டிற்கு சென்றாள்.

காளி: ஹொய்சாளா பாணி சிற்பம்

சோழ மன்னன் கம்பனையும், ஒட்டக்கூத்தரையும் ராமாயணம் பற்றி தமிழில் எழுதும்படி பணிந்தார். ஒட்டக்கூத்தர் தன் பாடங்களை ஆறு மாதத்தில் எழுதிமுடித்துவிட்டார். இறுதி நாள் நெருங்கியும் எழுதாமல் இருந்த கம்பனின் கனவில் சாரதாதேவி தோன்றி, “உனக்கான பாடல்களை நான் எழுதியுள்ளேன் எனச் சொல்லி மறைந்தாள்.” கம்பன் எழுந்த போது தன் அருகில் பாடல்கள் இருப்பதைக் கண்டு அதனை சோழ அவையில் பாடினார். சிவன் கம்பனாக பிறந்ததாகவும், கம்பன் போர் பற்றி பாடும் போது காளி நடனமாடியதாகவும் கதை உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்பர் இனத்தவர்கள் காளி கோவிலுக்கு பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.

சிவ புராணம்

மதுரை மீனாட்சி கோவில் சிவன் சன்னதி முகமண்டபத்தில் உள்ள சிற்பம்

பார்வதி தேவி இறந்தது அறிந்த சிவன் தன் சடை மயிரிலிருந்து வீரபத்திரரையும், பத்ரகாளியையும் உருவாக்கினார். சிவனின் சொல் பணிந்த பத்ரகாளி தக்ஷனை அழிக்க வீரபத்திரன் முன் சென்றாள். பத்ரகாளியிலிருந்து ஒன்பது துர்க்கைகள் தோன்றினர். நவ துர்க்கைகளும் தாகினி, சாகினி, பூதங்கள், பிரம்ம ராக்ஷசர்கள், பைரவர்களுடன் இணைந்து தக்ஷனுடன் போர் புரிந்ததாக சிவ புராணம் சொல்கிறது.

சௌர புராணம்

சௌர புராணத்தில் பத்ரகாளி பார்வதியின் சித்தத்திலிருந்து தோன்றியதாக வருகிறது. சிவன் தன் சடை முடியிலிருந்து வீரபத்திரரை உருவாக்கியபோது பார்வதி தன் சித்தத்திலிருந்து பத்ரகாளியை உருவாக்கி தக்ஷனின் யாகத்தை அழிக்கும்படி செய்தாள் என்கிறது இந்தப்புராணம்.

பிற புராணங்கள்

Batrakaali4.jpg

தக்ஷன் தன்னை யாகத்திற்கு அழைக்காததால் சிவன் பார்வதி தேவியையும் யாகத்திற்கு செல்வதற்கு தடை கூறினார். சிவனின் சொல் கேட்காத பார்வதி தக்ஷனின் யாகத்திற்குச் சென்றாள். தக்ஷன் பார்வதியை வரவேற்காமல் யாகத்தை நிகழ்த்தியதால் தந்தையின் மீது கோபம் கொண்ட பார்வதி மீண்டும் கைலாயம் திரும்பினாள். பார்வதியின் முகம் வாடியிருப்பதைக் கண்டு நடந்ததறிந்த சிவன் பார்வதியின் மேல் கோபம் கொண்டார். தேவியை கைலாயம் விட்டு நீங்கும் படி கூறினார். சிவனின் மீது கோபம் கொண்ட பார்வதி பூலோகம் வந்து சிவனை நோக்கி தவமிருந்தாள். சிவன் தன்னை வந்து அழைக்கும் வரை பூமி நீங்க மாட்டேன் என்ற சபதமும் ஏற்றாள். தவத்தின் கோரத்தால் பார்வதி உக்கரம் கொண்டு பத்ரகாளியாக மாறினாள். பத்ரகாளியின் உக்கரம் தாங்க முடியாமல் பூமியில் அனைவரும் சிவனை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலுக்கு பணிந்த சிவன் பூலோகம் வந்து பத்ரகாளியை நடன போட்டிக்கு அழைத்தார். இருவரும் சமமாக ஆடிக் கொண்டிருந்த போது சிவனின் காதிலிருந்த குண்டலம் கீழே விழுந்தது. சிவன் தன் ஆட்டத்தை நிறுத்தாமல் வலது காலால் குண்டலத்தை எடுத்து ஊர்த்துவ நிலையில் குண்டலத்தை மாட்டினார். பிற ஆடவர் முன் ஊர்த்துவ தாண்டவம் ஆட முடியாது பத்ரகாளி சிவன் முன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள்.

சைவம்

திருகோணமலை எல்லைக் காளி

சைவ மரபில் பத்ரகாளி சக்தியின் முப்பத்திரண்டு வடிவங்களுள் ஒன்றாக கருதப்படுகிறாள். சத்சாஹஸ்ர சம்கிதத்தில் ருத்ரகாளி எனக் குறிப்பிடப்படுகிறாள். தாந்திரீக மரபில் சக்தியின் ஒவ்வொரு வடிவமும் ஸ்ரீ சக்கரத்தின் பதினாறு பகுதியில் ஒன்றாக கருதப்படுகிறது. சக்தியின் ஒவ்வொரு வடிவத்திற்கு ஒரு அமைப்பும், ஒரு மிருக வாகனமும் உள்ளது.

சாக்தம்

சாக்த மரபு: சிவன் மேல் நிற்கும் காளி சிற்பம்

சாக்த மரபில் பத்ரகாளி தக்ஷனின் ஒன்பது பிள்ளைகளில் ஒருத்தி. தென்கிழக்கு திசையின் கடவுளாகவும் பத்ரகாளி குறிப்பிடப்படுகிறாள். பத்ரகாளி மூன்று கண்களும், இரண்டு கரங்களும் (ஒன்றில் திரிசூலம், மற்றொன்றில் மண்டையோடு) ஆயுதங்கள் ஏந்திய வண்ணம் காகத்தின் மீது அமர்ந்து தென்கிழக்கு திசையின் கடவுளாக இருக்கிறாள். தாந்திரீக மரபில் பத்ரகாளிக்கு நவராத்திரி விசேஷ திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கல்கத்தாவிலுள்ள காளி கோவில் நவராத்திரி திருவிழா இந்தியாவில் பெரிதாக நிகழும் திருவிழாக்களில் ஒன்று.

சிறு தெய்வம்

காளி செப்பு சிற்பம்

தமிழகத்தில் பத்ரகாளியை சிறு தெய்வ மரபிலும் வழிபடுகின்றனர். ஆனால் பத்ரகாளி குறிப்பிட்ட சாதியின் கடவுளாக இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூரில் கம்பர் இனத்தவர்கள் பூஜை நிகழ்த்துகின்றனர். இங்கே மான் திருவிழாவும் நடைபெறுகிறது. உன்னம்குளத்தில் நாடார் இனத்தவர் பூஜை செய்கின்றனர். சரக்கல் புதூரில் அந்தணர் பூஜை செய்யும் மரபு உள்ளது. பரக்கோட்டில் போத்தி பூஜை செய்கிறார்.

கொங்கு மண்டலத்தில் அந்தியூர், ஈரோடு பகுதிகளில் சிங்க வாகனத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் வடக்குத்தி நாடார்கள், தெட்சண மாற நாடார்கள் பூஜை நிகழ்த்துகின்றனர். பங்குனி மாதம் கடைசி செவ்வாய், வெள்ளிகளில் பூஜை நிகழ்த்துவர். முளைப்பாரி, மாவிளக்கு, சக்திக்கடா, படையல் எனக் கொண்டாடுவர். குடும்ப நிகழ்ச்சிகளையும் அப்போது தான் முடிவு செய்வர்.

சிற்ப சாஸ்திரம்

BadrakaLi7.jpg

பார்வதி தேவியின் ஒரு வடிவமாக கருதப்படும் பத்ரகாளி பதினெட்டு கைகள் கொண்டவள். அவற்றில் அக்ஷமாலை, திரிசூலம், கட்கம் (வாள்), சந்திரன், பாணம், தனுஷ் (வில்), சங்கு, பத்மம், உடுக்கை, வேள்வி கரண்டி, கமண்டலம், தண்டம், சக்தி, அக்னி, கிருஷ்ணாஜினம்(கறுப்பு மானின் தோல்), நீர் என பதினாறு கைகளில் ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும். மீதியுள்ள இரு கைகளில் அபய முத்திரையும், கலத்தையும் தாங்கி இருக்கும். பத்ரகாளி நான்கு சிம்மம் பூட்டி ரதத்தின் மேலிருப்பாள். பத்ரகாளி தேரில் மேல் போரிடத் தயாராக நின்றிருக்கும் கோலம் 'ஆளிதாசனா'[1]

பத்ரகாளி மந்திரம்

ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி
மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ

பத்ரகாளி பாட்டு

பத்ரகாளி பாட்டு கேரளாவில் உள்ள நாட்டுப்புற பாடல். பத்ரகாளியை புகழ்ந்து பாடும் இப்பாடல்கள் கேரள கோவில்களில் விழா நாட்களில் பாடப்படுகிறது. கேரளத்தில் சர்க்காரா, கொடுங்கல்லூர், ஆற்றிங்கல், செட்டிகுளங்கரா, திருமந்தம்குன்னு, சோற்றானிக்கரை ஆகிய இடங்களில் காளி கோவில்கள் உள்ளன.

உசாத்துணை

  • புராணக் கலைக்களஞ்சியம், வெட்டம் மாணி
  • Elements of Hindu Iconography - T.A. Gopinatha Rao
  • Bhadrakali, Bhadrakālī, Bhadra-kali: 24 definitions, wisdomlib.org
  • நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம், அம்மன் முதல் விருமாண்டி வரை, பேரா. முனைவர். சு. சண்முகசுந்தரம்

அடிக்குறிப்புகள்

  1. இடது காலை மடக்கி, வலது காலை நீட்டி சாய்வாக இருக்கும் நிலை. இந்நிலை போர், ரௌத்திர சமயங்களில் தெய்வங்களால் நிகழ்த்தப்படுவது. திரிபுராந்தகர், சம்காரமூர்த்தி போன்ற சிவ வடிவங்களும், நரசிம்ம அவதாரத்தில் விஷ்ணுவும் இந்நிலையில் இருப்பர். பத்ரகாளி தன் சிம்ம வாகனத்தில் கோபத்துடன் செல்லும் போது இந்நிலையில் இருப்பாள்.


✅Finalised Page