ந.ச. பொன்னம்பலப் பிள்ளை
- பொன்னம்பலம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பொன்னம்பலம் (பெயர் பட்டியல்)
ந.ச. பொன்னம்பலப் பிள்ளை (1836-1902) ஈழத்து தமிழறிஞர், ஆசிரியர், உரையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
ந.ச. பொன்னம்பலப் பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் சரவண முத்துப்பிள்ளைக்கு 1836-ல் பிறந்தார். தாய் ஆறுமுக நாவலரின் சகோதரி. இளமைக் காலத்தில் நல்லூர் கார்த்திகேய உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். ஆறுமுக நாவலரிடம் நீண்ட காலம் கற்றார்.
ஆசிரியப்பணி
யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசிரியராகவும், பரிபாலகராகவும் பணியாற்றினார். இந்தியா, இலங்கையிலிருந்து மாணவர்கள் பலர் இவரிடம் கல்வி கற்றனர். தேவகோட்டை வேதாரணியம் முதலிய இடங்களிலும் சிறிது காலம் இவர் தங்கி வாழ்ந்தார். தெருக்கள், திண்ணைகள், குளக்கட்டுகள், மரநிழல்கள் என்று எங்கு வேண்டுமானாலும் பாடம் நடத்துவார். வேதாரணியத்தில் வாழ்ந்தபோது நற்றிணை உரையாசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சிலப்பதிகாரம் முதலான நூல்களில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களை இவரிடம் கேட்டுத் தெளிந்தாரென நற்றிணை நூல் அறிமுகத்தில் உள்ளது.
மாணவர்கள்
- வைத்தியலிங்க பிள்ளை
- பொன்ணுேதுவார்
- சுப்பிரமணிய ஒதுவார்
- சொக்கலிங்சஞ் செட்டியார்
- குமாரசுவாமித் தம்பிரான் ஆதியானேர்
- ம.க. வேற்பிள்ளை
- சி. சுவாமிநாத பண்டிதர்
- சி. பொன்னுத்துரை ஐயர்
- ச. பொன்னம்பலப் பிள்ளை
- ச. சபாரத்தின முதலியார்
- சோமாஸ்கந்த பண்டிதர்
- சிவகுருநாத பிள்ளை
- வ. தம்பு
- சி. கணேசையர்
இலக்கிய வாழ்க்கை
ந.ச. பொன்னம்பலப் பிள்ளை தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, இராமாயணம் பாரதம் முதலிய இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கவிதைகள் எழுதினார். புராணங்களுக்குப் பொருள் கூறும் விரிவுரைகள் செய்தார். பல நூல்களுக்கு உரைகள் எழுதி வெளியிட்டார். பாரதத்தில் சில பருவங்களுக்கும், மயூரகிரிப் புராணத்துக்கும் விரிவான உரை எழுதினார். அரசகேசரி தமிழில் மொழிபெயர்த்து இயற்றிய 'ரகுவம்சம் 'என்னும் நூலை முதன் முதலாக பரிசோதித்து அச்சேற்றினார். சீவக சிந்தாமணியை முதன் முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்ட உ.வே. சாமிநாதையர் அதன் ஒரு பிரதியைப் பொன்னம்பலபிள்ளைக்கு அனுப்பி அதனை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என பண்டிதமணி கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
நினைவு
- கொழும்பு கம்பன் கழகம் ஆண்டுதோறும் ’வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை’ விருது வழங்குகிறது.
மறைவு
ந.ச. பொன்னம்பலப் பிள்ளை 1902-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- நீதிவெண்பா (1927)
- பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணச் சுருக்கம்
- சூடாமணி நிகண்டு (பதினொராவது மூலமுமுரையும், பன்னிரண்டாவது மூலமும்)
- சூடாமணி நிகண்டு (மூலமும் உரையும்)
- சைவசமய நெறி
- ஸ்ரீராமநாத மான்மியம்
- திருவாலவாயுடையார் திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்கள் அடங்கிய பதினொராந்திருமுறை
- திருத்தொண்டர் புராணச் சுருக்கம் (முதற் பாகம்)
- பாலபாடம் (முதல் புத்தகம்)
- தேவாரத்திரட்டு (அகத்தியர்)
- பாலபாடம் (இரண்டாம் புத்தகம்)
- பாலபாடம் (நான்காம் புத்தகம்)
- கந்தபுராணம் அசுர காண்டம் (சிவாசாரிய சுவாமிகள்)
- மார்க்கண்டேயப்படல (மூலமும் உரையும்)
- சிவாலய தரிசன விதி (1914)
- திருப்பாடற்றிரட்டு (பட்டணத்துப்பிள்ளையார்) (1914)
- ரகுவம்சம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jan-2023, 18:14:24 IST