under review

நூல் தேட்டம்

From Tamil Wiki
நூல் தேட்டம் முதல் தொகுதி

இருபது ஆண்டுகளாக நடராஜா செல்வராஜா (என்.செல்வராஜா)வின் தனிமனித முயற்சியாக ஈழத்தமிழ்த் தேசியத்தின் அறிவுலகத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் நூல்தேட்டம் மேற்கொண்டு வருகின்றது.

உலகளாவிய ரீதியில் வெளிவந்தகொண்டிருக்கும் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான நூல்விபரப்பட்டியலான நூல்தேட்டத்தின் முதலாவது தொகுதி 2002-ல் வெளிவந்தது. இதுவரையில் 15 தொகுதிகள் வெளிவந்துள்ளன. பதினாறாவது தொகுதி 2022-ல் வெளிவரவுள்ளது.

நூல்தேட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் 600 முதல் 700 பக்கங்கள் கொண்டது. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களினதும், வெளியீட்டாளர்களினதும் ஆயிரம் நூல்கள் பற்றிய அடிப்படை நூலியல் குறிப்புகளும் அதனையடுத்து நூல் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. தொடர் இலக்கங்கள் முதலாவது தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இத் தொகுதியில் இடம்பெறும் நூல் பதிவுகளுக்கு 15001இலிருந்து 16000வரை தொடரிலக்கமிடப்பட்டுள்ளது. 16,000 நூல்களை நேரில் பார்த்துக் குறிப்பெடுத்து, ஒழுங்கமைத்து, பதிவேற்றம் செய்துள்ளார் நூலகர் என்.செல்வராஜா.

தொகுப்பும் தவிர்ப்பும்

இது ஒரு தேர்ந்த நூற்பட்டியலன்று. இங்கு பட்டியலாக்கப்பட்டுள்ள தனி நூல்கள் (Monographs) எவையும் எவ்வித தரக்கட்டுப்பாட்டுக்கும் உட்படவில்லை. இன்று பார்வையிடக்கூடிய ஈழத்துத் தமிழ் நுல்கள் அனைத்தையும், ஒரு தொகுதிக்கு 1000 நூல்கள் என்ற எண்ணிக்கையில் பட்டியலிடுவதே நூல்தேட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். வெளியீட்டின் பௌதிகத் தன்மை கருதி சில பிரசுரங்கள் நூல்தேட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. துண்டுப் பிரசுரங்கள், வரைபடங்கள், அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், இறுவெட்டுகள் என்பன இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.

NTEng-1.jpg

பெரும்பான்மையான கல்வெட்டுகள், ஞாபகார்த்த மலர்கள், சஞ்சிகைகள், என்பனவும் இத்தொகுதியில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆயினும், தனி ஆவணமாகக் கருதும்வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகைகளின் சிறப்புமலர்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கல்வெட்டுக்களும், ஞாபகார்த்த மலர்களும் தனிநூலின் வகைக்குள் அடங்கக்கூடியதான கனதியான அம்சங்களுடன் வெளிவந்திருப்பதால் அவையும் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.15-வது தொகுதியிலிருந்து சில மின்நூல்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நூல்தேட்டத் தொகுதிகளில்; தொகுக்கப்பட்டுள்ள நூல்கள் எவ்வித கால எல்லைகளுக்கும் வரையறுக்கப்படவில்லை. ஒரு நூலின் பின்னைய பதிப்புகள் வெளிவரும்போது அவை புதுக்கியோ, சுருக்கியோ, வெளிவரும் வாய்ப்பிருப்பதாலும், முற்றிலும் வேறான நூலியல் தகவல்களை அவை கொண்டிருப்பதாலும் குறித்தவொரு நூலின் பல்வேறு பதிப்புகளும் இங்கு ஒரே பதிவிலக்கத்தின் கீழ் இடம்பெறுகின்றன. முன்னைய பதிவிலக்கத்தைப் பெற்ற மீள்பதிப்புக்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

பதிவுகளின் ஒழுங்கமைப்பு

நூல்தேட்டம் ஒரு உசாத்துணை நூலாகும். ஒரு நூலைப் பற்றிய நூலியல் தகவல்களைக் குறுகிய நேரத்தில் வாசகர் கண்டறிய வகைசெய்யும் வண்ணம் இத்தொகுதி மூன்று பிரிவாகப் பதியப்பட்டுள்ளது.

முதற்பிரிவில், நூல் பற்றிய பிரதான பதிவுகள் பாடஒழுங்கில் வகைப்படுத்தப்பட்டு தொடரெண்கள் மூலம் அடையாளமிடப்பட்டுள்ளன. பாடவாரியாக ஒரு நூலைத்தேடும் வாசகர் இப்பிரிவின் மூலம் பயனடைவர்.

இரண்டாவது பிரிவு, தலைப்பு வழிகாட்டியாகும்.

முதற்பகுதியில் நூல்கள் பாடவாரியாக முதலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, பின்னர்; அகரவரிசையில் காணப்படுவதால் ஒரு நூலின் தலைப்பைக் கொண்டு நூலைத் தேடவிழையும் வாசகர் இரண்டாவது பிரிவில் அகரவரிசையில் காணப்படும் தலைப்பு வழிகாட்டியின் வாயிலாக நூலின் தொடர் இலக்கத்தைக் கண்டறிந்து முதற்பகுதியில் உள்ள பிரதான பதிவைப் பார்வையிட முடியும். இங்கு தலைப்புக்கள் அகரவரிசை எழுத்தொழுங்கில் அல்லாது சொல்லொழுங்கிலேயே அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.

ஆசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மூல ஆசிரியர் ஆகியோரின் விபரங்களைக்கொண்டு ஒரு நூலைத்தேடும் வாசகர் மூன்றாவது பிரிவின் மூலம் பயனடைவர். இங்கு ஆசிரியர் அகர வரிசையில் நூல்களின் தொடர் எண்களைக் கண்டறிந்து அதன் மூலம் தான் தேடும் நூலைச் சென்றடைய முடியும். ஆசிரியர் அகரவரிசையில் புனைபெயர்களும் இடம்பெறுகின்றன. ஓரு நூலாசிரியர் இயற்பெயரிலும் புனைபெயரிலும் நூல்களை எழுதுவதால் புனைபெயரின் கீழ் நூலைத்தேடும் வாசகர் ஆசிரியரின் இயற்பெயரிலும் அவற்றைத் தேட உதவும் வகையில், வழிகாட்டி அம்சங்கள் தேவை கருதிச் சேர்க்கப்பட்டுள்ளன. இரு ஆசிரியர்கள் ஒரே புனைபெயரில் வலம் வருவதையும் இங்கு காணமுடிவதால் புனைபெயரில் நூலைத்தேடும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். வாசகரின் தேடுகை நேரத்தை குறைக்கும் வகையில் புனைபெயரிலும் இயற்பெயரிலும் எழுதும் ஆசிரியரின் பிரபல்யமான ஒரு பெயரின்கீழ் மட்டும் இயன்றவரை அவரது நூல்களின் தொடர் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன.

நூலியல் பதிவுகள்

நூல் தேட்டம் 15வது தொகுப்பு

பிரதான பகுதியில் நூல் பற்றிய தகவல் மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. முதற்பகுதியில் நூலின் தலைப்பு, உப தலைப்பு, அந்நூலின் ஆக்கத்துக்கு அதிகாரபூர்வ உரித்துடைய ஆசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் விபரங்கள், வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம், ஆகியனவும் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்ட நூலின் குறித்த பதிப்பிற்கான அச்சகத்தின் விபரமும் தரப்பட்டுள்ளன. கிடைக்கப்பெறுமிடத்து சர்வதேச தராதர நூல் எண்களும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன. ஆசிரியர் பற்றிய தகவலில் ஆசிரியரின் இயற்பெயர், புனை பெயர் பற்றிய குறிப்புகளும் அறியமுடிந்தால் தரப்பட்டுள்ளன. பதிவுக்குள்ளாகும் நூலின் உரித்தாளர் மூலநூலாசிரியராக இல்லாதவிடத்து, அவரின் பங்களிப்புப் பற்றிய தகவல் அவரது பெயரையடுத்து அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலின் வெளியீட்டாளர் பற்றிய தகவல் குறிப்பில் வெளியீட்டாளரின் இயங்குதளம், வெளியீட்டகத்தின் பெயர், முகவரி என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு வெளியீட்டகம் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியிருக்கும் வேளை, பதிவுக்குள்ளாகும் நூலில், குறிப்பாக ஒரு இயங்குதளத்தை மட்டும் வெளிப்படுத்தியிருந்தாலன்றி, பதிவுத்தேவை கருதி, நூல் அச்சிடப்பட்ட நாட்டில் உள்ள வெளியீட்டகத்தின் கிளை அமைந்த ஊரே அதன் இயங்குதளமாகப் பதியப்பட்டுள்ளது. ஆசிரியரே வெளியீட்டாளராகவும் இருக்கும்போது, நூலில் காணும் ஆசிரியரின் முகவரி வெளியீட்டக முகவரியாகக் கொள்ளப்பட்டுள்ளது.

நூலின் பதிப்பு விபரத்தில், பதிவுக்குப் பெறப்பட்ட நூலின் பதிப்பு விபரமும், அப்பதிப்பு வெளியிடப்பட்ட திகதியும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நூல் முதற்பதிப்பு அல்லாதவிடத்து முன்னைய பதிப்புகள் பற்றிய திகதி விபரங்களும் நூலில் தரப்பட்டவாறாகப் பதியப்பட்டுள்ளன. சில வெளியீட்டாளர்கள், மறுபதிப்பு நூல்களையும் முதற்பதிப்பாகக் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வெளியீட்டாளரின் முதற் பதிப்பாகவே அது கொள்ளப்பட வேண்டியுள்ளது.

நூலின் அச்சக விபரம் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. இந்த விபரம் பதிவுக்குரிய நூலின் குறித்த பதிப்புக்கு மட்டும் உரியதாகும் என்பதும் கவனத்துக்குரியது.

நூலியல் பதிவின் இரண்டாவது பகுதியாக அமைவது நூலின் பௌதீகத் தகவல்களாகும். இதில் நூலின் பக்கங்கள், சிறப்பம்சங்கள், விலை, அளவு, தராதர எண் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

நூலின் பக்கங்கள் மூன்று வகையில் குறிப்பிடப்படுகின்றன. அவை ரோமன் இலக்கமிடப்பட்ட பக்கங்கள், இலக்கமிடப்படாத பக்கங்கள், அரேபிய இலக்கமிடப்பட்ட பக்கங்கள் என்பனவாகும். ரோமன் இலக்கமும், அரேபிய இலக்கமும் இடப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை அவ்வவ்விலக்கங்களாலேயே சுட்டப்பட்டுள்ளன. இலக்கமிடப்படாத பக்கங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. (உதாரணம்: VII> (12), 243 பக்கம்). பெரும்பான்மையான தமிழ் நூல்களில் முகவுரைப் பக்கங்கள் இலக்கமிடப்படாவிடினும் அவை பின்னர் அரேபிய இலக்கங்களாகத் தொடர்கின்றன. அத்தருணங்களில் அவை அரேபிய இலக்கமிடப்பட்ட பக்கங்களாகவே கருதப்பட்டுள்ளன.

பக்கங்கள் பற்றிய குறிப்பை அடுத்து அமைவது சிறப்பம்சங்களாகும். இங்கு வரைபடங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள் பற்றிய குறிப்புகள் காணப்படும். விலை விபரம் காலவரையறைக்குட்பட்டதாக அமைவதாயினும் வரலாற்றுத்தேவை கருதி மட்டுமே நூல்தேட்டத்தில்; அவை சேர்க்கப்பட்டுள்ளது. நூலில் குறிப்பிடப்படும் விலை அந்நாட்டு நாணய அலகின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவுக்கு மாத்திரம் நாடு குறிப்பிடப்படவில்லை. இது ஒரு வர்த்தக நூற்பட்டியல் இல்லையென்பதால் தேவைப்படுமிடத்து நூலின் தற்போதைய விலை பற்றிய தகவலை அதன் விற்பனையாளர்களிடமே வாசகர் உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

நூலின் பௌதீக விபரங்களில் அடுத்ததாக வருவது, நூலின் அளவாகும். இது சதம மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரிவில் இறுதியாக அமைவது நூலுக்கான சர்வதேச தராதர நூல் எண் (International Standard Book Number) பற்றிய தகவலாகும். ஈழத்துத் தமிழ் நூல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய நூல்களே இவ்விலக்கத்தைத் தாங்கி வெளிவந்திருப்பினும் அதிகரித்து வரும் அதன் முக்கியத்துவம் கருதி இவ்விலக்கம் இப்பிரிவில் இடம்பெறுகின்றது. எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களின் பயன்பாடு கருதி ISBN பற்றிய விரிவான கட்டுரையொன்று முதலாவது தொகுதியில் xiv-xviii பக்கங்களில்; பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் இற்றைப்படுத்தப்பட்ட மீள்பதிப்பு, 'எங்கட புத்தகங்கள்" என்ற எமது காலாண்டுச் சஞ்சிகையின் (ஒக்டோபர் 2020) முதலாவது இதழிலும் இடம்பெற்றுள்ளது.

நூலியல் தகவலின் மூன்றாவது, இறுதிப்பிரிவு நூல்பற்றிய சுருக்கக் குறிப்பாகும். இது ஒரு திறனாய்வுக் குறிப்பாகவோ, விளம்பரமாகவோ அல்லாது நூலினதும் நூலாசிரியரினதும் சிறு அறிமுகமாக மாத்திரம் அமைவது குறிப்பிடத்தக்கது. அரியநூல்களின் வைப்பிடம் பற்றிய குறிப்பு 3வது தொகுதியிலிருந்து வழங்கப்படுகின்றது. உதாரணமாக பெறுதற்கரிய சில ஈழத்து நூல்கள் பிரித்தானிய நூலகங்களிலும், மலேயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறையிலும் காணமுடிந்தது. அவை பற்றிய இருப்பு விபரம் இப்பகுதியில் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன.

பகுப்பாக்கம்

இந்நூலின் பிரதான பகுதியில் நூல்கள் பாட ஒழுங்கில் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ள பாட ஒழுங்கு வரிசை, டூவியின் தசாம்சப்பகுப்பு முறையாகும். (Dewey Decimal Classification Scheme) தென்னாசியாவிலும் ஐரோப்பாவிலும் நூலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இப்பகுப்பு முறை தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமானதொன்றென்ற வகையில் இப்பகுப்பாக்கத்தைப் பின்பற்றத் தீர்மானித்தோம். இப்பகுப்பாக்கத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று பிராந்தியத் தேவைகருதி இப்பகுப்பு முறையில் தேவைப்படும் மாற்றத்தைப் புகுத்தமுடியும் என்பதாகும். ஈழத்துத் தமிழ்நூல்களின் பகுப்புத்தேவை கருதி இப்பகுப்பு முறை சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப்பகுப்பாக்கம் அறிவுத்தேட்டத்தை முதலில் பத்துப் பெரும்பிரிவுக்குள் அடக்குகின்றது. பின்னர் ஒவ்வொரு பெரும்பிரிவும் பத்து உபபிரிவுகளாகின்றன. அந்த உப பிரிவுகள் மேலும் பத்து உபபிரிவுகளாகின்றன. இத்தகைய ஒரு தசாம்சப்பகுப்பு முறை பற்றிய விரிவான விளக்கத்தை இங்கே தரமுடியாவிடினும் வாசகரின் தேவை கருதி இந்நூலில் பயன்படுத்தும் பகுப்புத் திட்டம் சுருக்கமாக இந்த அறிமுகப் பகுதியையடுத்துத் தரப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

பகுப்பாக்க ஒழுங்கில் இறுதிப்பிரிவாக அமைவது வரலாறாகும். இதில் பிரதேச வரலாற்றுடன், வாழ்க்கை வரலாற்று நூல்களும் ஞாபகார்த்த மலர்களும் இடம்பெறுகின்றன. பகுப்பாக்கத்தின் போது பன்முகத்தோற்றம் பெற்ற பெரியார்களின் வரலாற்று நூல்களைத் தரம்பிரிக்கும்போது பிரதான பதிவை ஏதாவது ஒரு பிரிவுக்குள் பதிய வேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டது. ஒருவரது ஆளுமை எத்துறையில் பிரகாசித்தது என்பதை விட குறிப்பிட்ட நூலில் அவரது பன்முகப்பட்ட ஆளுமையின் எப்பகுதி ஆய்வுக்கெடுக்கப்பட்டது என்ற அடிப்படையிலேயே அவரது நூலுக்கான பகுப்புப் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள்

இரண்டாம் தொகுதியிலிருந்து மேலதிக அம்சமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பகுதி இதுவாகும்;. இன்றைய ஈழத்து இனப்பிரச்சினையின் சர்வதேசமயப்படுத்தல் காரணமாக ஈழத் தமிழரல்லாத பன்நாட்டவர்களிடையே உருவாகிவரும் ஈழத்தமிழர்;சிக்கல் பற்றிய தேடலின் விளைவாக, தமிழகத்திலும் மலேசியாவிலும் ஐரோப்பாவிலும் ஈழத்தமிழர் பற்றிய நூல்களின் வரவு அதிகரித்திருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன்விளைவாக, நூல்தேட்டத்தில் இவ்வாக்கங்களுக்கான ஆவணமாக்கலும் அவசியம் என்று கருதியதால், தனியானதொரு பிரிவாக அவை இடம்பெறுகின்றன.

முன்னைய பதிவுகளுக்கான மேலதிக தகவல்கள்

நூல்தேட்டம், ஈழத்தமிழரின் நூலியல் முயற்சிகளில், இயன்றவரை நிறைவான ஆவணமாக்கலையே மேற்கொள்ள விழைகின்றது. முன்னைய தொகுதியில் இடம்பெற்ற ஒரு நூல் திருத்திய மறுபதிப்பாக வெளியிடப்பட்டால், அதுபற்றிய தகவலும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பு முயற்சியின்போது முன்னைய பதிவுகளில் தவறுகள் நேர்ந்தால், அப்பதிவுகளின் திருத்திய வடிவமும் இப்பகுதியிலேயே இடம்பெறுகின்றன.

உசாத்துணை

இத்தொகுதி வர்த்தக நோக்கமற்றதொரு தனிமனித முயற்சியாகும்.

  • 2021 முதல் நூல்தேட்டத்தின் அனைத்துத் தொகுதிகளும் மின்நூல் வடிவில் noolthettam.com என்ற இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.


✅Finalised Page