under review

நிரல்நிறை அணி

From Tamil Wiki

நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள்

கொள்ளுமாறு அமையும். சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி.

தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

நிரல் நிறுத்து இயற்றுதல் நிரல்நிறை அணியே (தண்டி 67)

என வகுக்கிறது.

எடுத்துக்காட்டுகள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளதால் இது நிரல்நிறை அணி ஆகும்.

வேயின்குழலோடு வீணை முதலா மனிதர்
வாயிலும் கையிலும் வாசிக்கும் பல்கருவி (பாரதியார்)

வேயின்குழல், வீணை இவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றை வாசிக்கும் வாய், கை முதலியவற்றை அடுத்த வரியில் இணைத்து பொருள் கொள்வதால் இது நிரல்நிறை அணியாகும்.

நிரல்நிறை அணியின் வகைகள்

நிரல்நிறை அணி நேர் நிரல்நிறை அணி, எதிர் நிரல்நிறை அணி என இரு வகைப்படும்.

நேர் நிரல்நிறை அணி

சொல்லையும் அச்சொல் கொண்டு முடியும் பொருளையும் முறைமாறாமல் வரிசையாக நிறுத்துதல் நேர் நிரல்நிறை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு

காரிகை மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால்,
வார்புருவத்தால், இடையால், வாய்த்தளிரால் -நேர்தொலைந்த
கொல்லி, வடிநெடுவேல், கோங்கு அரும்பு, வில்கரும்பு,
வல்லி,கவிர்மென் மலர்

பொருள்

மகளிருடைய மென்மையான சொல்லாலும், கண்ணாலும், ஒளி வீசும் முலையாலும், நீண்ட புருவத்தாலும், இடையாலும், வாயாகிய தளிராலும் முறையே, கொல்லி என்னும் பண்ணும், கூர்மை பொருந்திய நீண்ட வேலும், கோங்கினது அரும்பும், மன்மதனது கரும்பு வில்லும், பூங்கொடியும், மென்மையான முருக்க மலரும் அழகு இழந்தன.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் பெண்களின் மென்மொழி, கண், முலை, புருவம், இடை, வாய் ஆகிய சொற்களை வரிசையாக நிறுத்தி, பின் இரண்டு அடிகளில் அவற்றால் அழகு இழந்து போன கொல்லிப்பண், வேல், கோங்கு அரும்பு, கரும்புவில், பூங்கொடி, முருக்க மலர் ஆகிய தொடர்புடைய பொருள்களை அதேவரிசையில் வைத்திருப்பதைக் காணலாம். மென்மொழியால் கொல்லிப் பண்ணும், கண்ணால் வேலும், முலையால் கோங்கு அரும்பும், புருவத்தால் கரும்பு வில்லும், இடையால் பூங்கொடியும் , வாய்த்தளிரால் முருக்க மலரும் என ஒன்றுக்கொன்று நேராக நிறுத்திப் பொருள் கொள்ளுமாறு அமைத்தமையால் இது நேர் நிரல்நிறை அணி ஆயிற்று.

எதிர் நிரல்நிறை அணி

சொல்லையும் அது கொண்டு முடியும் பொருளையும் முறையாக இல்லாமல் எதிராக நிறுத்தல், எதிர் நிரல்நிறை அணி.

விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர் (திருக்குறள் 490)

பொருள்

கற்றவரே மனிதராகக் கொள்ளப்படுவர் அவருடன் ஒப்பு நோக்க கல்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பாவர்.

விலங்கு, மக்கள் என்ற சொற்களுக்கு ஏற்புடைய கல்லாதவர், கற்றோர் என்று சொற்களை வரிசைப்பட நிறுத்தாது வரிசை மாற்றிக் கூறியுள்ளமையால் இது எதிர் நிரல் நிறை அணி.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து (திருக்குறள் 1183)

பொருள்

(தலைவி கூற்று) துன்பத்தையும் பசலை நிறத்தையும் எனக்குத் தந்துவிட்டு அவற்றிற்குப் பதிலாக என் அழகையும் நாணத்தையும் அவர் கொண்டு போய்விட்டாரே!

சாயல், நாண் என்ற சொற்களுக்கு ஏற்ப பசலை, நோய் என்ற சொற்களை வரிசைப்படக் கூறாமல் முறைமாற்றி அமைத்துள்ளமையால் எதிர் நிரல் நிறை அணி.

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்-நிரல்நிறையணி

திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள்-முனைவர் துரையரசன்


✅Finalised Page