under review

தெமுவான்

From Tamil Wiki
நன்றி: thevibes

தெமுவான் பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் மலாயு ப்ரோதோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வாழிடம்

தெமுவான் பழங்குடி மக்கள் சிலாங்கூர், மலாக்கா, பஹாங், மற்றும் ஜொகூர் மாநிலங்களில் வசிக்கின்றனர்.

மொழி

தெமுவான் பழங்குடியினர் பேசும் மொழியைத் தெமுவான் மொழி என்றழைப்பர். தெமுவான் மொழி ஆஸ்த்ரோ-ஆசிய மொழி குடும்பத்தைச் சேரும். தெமுவான் பழங்குடியினர் தெமுவான் மொழியை ரோமன் எழுத்தில் எழுதி வருகின்றனர். தெமுவான் பழங்குடியினர் மலாய் மொழியிலும் பேசுவர்.

பின்னனி

தெமுவான் பழங்குடியினர் பாசன நெல்லைப் பயிரிட்டு வந்தனர். தெமுவான் நெல் வயல்களை அதிகரிக்க அக்கம் பக்கம் இருந்த மலாய் குடியினர்கள் தெமுவான் நெல் வயல்களைப் பெயர் மாற்றம் செய்துக் கொண்டனர். தெமுவான் மக்களில் சிலரே இப்போது நெல் பயிரிட்டு வருகின்றனர்.

சமூக படிநிலை

Social class of TEMUAN.png

தெமுவான் பழங்குடியினரை பாத்தின் தலைமை தாங்குவார். பாத்தின் என்றால் தலைவர் அல்லது பிரதிநிதி. பாத்தின் பரம்பரை ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பாத்தின் சடங்கு சம்பிரதாயத்தில் பரந்த அனுபவமும் கல்வியும் உடையவராக இருப்பார். பாத்தின் தவறுகள் செய்தால், பெரூட் (Perut) பாத்தினைப் பதவியிலிருந்து நீக்கலாம். பாத்தினுக்கு ஜுருகெரா (Jurukerah), ஜெனாங் (Jenang) எனும் இரு ஆலோசகர்கள். ஆலோசகர்கள் எனும் அமைப்பை ஜவாத்தான் மெந்தரி (Jawataan Menteri) என அழைப்பர். ஜவாத்தான் மெந்தரிக்குச் சடங்குகளில் தேர்ந்த கல்வி இருக்கும். பாத்தின் இறந்தால், ஜுருகெரா முறையான சடங்குகளை நிகழ்த்தி அடக்கம் செய்வார். பாத்தினுக்குக் கீழ் தொக் ஜெனாங் என்பவர் சடங்குகளை வழிநடத்துவார். தொக் ஜெனாங் ‘கெத்துவா லெம்பாக அடாட்’ எனும் சடங்குகளின் தலைவர். தொக் ஜெனாங்கிற்கும் பாத்தேனுக்கும் சடங்குகளில் புலமை இருக்கும். ஆனால், தொக் ஜெனாங்கால் பாத்தினைப் போல தண்டனைகளைக் கொடுக்க முடியாது. தெமுவான் பழங்குடியில் திருமண நடத்துனராக தொக் ஜெனாங் தனித்துவம் பெறுள்ளார்.

பங்லீமா என்பவர் தெமுவான் பழங்குடியின் நலனை ஆதரிப்பவர். பாத்தின் பங்லீமாவை லெம்பாக அடடாட்டிடமிருந்து ஆலோசித்தபின் தேர்ந்தெடுப்பார். பெமாங்கு என்பவர் பாத்தேனின் கட்டளைக்கிணங்க குற்றவாளிக்குத் தண்டனைகளை நிறைவேற்றுபவர். பெமாங்குவைப் பாத்தின் தேர்ந்தெடுப்பார்.

சமூதாய நெறிமுறை

தெமுவான் பழங்குடியினர் தாய் வழி சமூதாய நெறிகளைக் கடைபிடிக்கின்றனர். இந்த நெறி, நெகிரி செம்பிலானின் அடாட் பெர்பாத்தேக்கு (Adat Perpatih) இணையானதாகும்.

நம்பிக்கைகள்

தெமுவான் பழங்குடியினர் ஆன்மவாதம் மரபை பின்பற்றுபவர்கள். தெமுவான் பழங்குடிக்கு இயற்கை, கல்லறை, பேய்களின் மீது நம்பிக்கை உள்ளது. இவர்கள் பேய்களை ஹந்து என்றழைக்கின்றனர். இந்த ஹந்துவானது பெரிய பாறைகள், ஆறுகள், உயரமான மரங்கள் மற்றும் மலைகளை வசிப்பிடமாக் கொண்டதென நம்புகின்றனர். தெமுவான் பழங்குடியினர் நம்பும் ‘மலைகளின் அரசர்’ சிலாங்கூர்-நெகிரி செம்பிலானின் புனிதமான எல்லையில் வசிப்பதாக நம்புகின்றனர். தெமுவான் பழங்குடியின் புராணக் கதைகளில் வெள்ள பேரிடர் மனித குலத்தை அழித்தது. அந்தப் பேரிடரில் தெமுவான் மூதாதையர்கள் மலைகளின் அரசர் தங்கியிருக்கும் மலையில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைத்தரெனவும் நம்புகின்றனர். தெமுவான் பழங்குயினர் மூதாதையரின் வாக்கு, நடத்தை, வாழ்கை வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள். தெமுவான் பழங்குடிகளில் சிலர் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளனர்.

பண்பாடு

உடைகள்

தெமுவான் ஆண்கள் தெராப் (Terap) மரத்திலிருந்து மெல்லிய மரப்பட்டைகளை உரித்தெடுத்து, வெட்டி உடைகளைச் செய்துக்கொள்வர். [அறிவியல் பெயர்: Artocarpus odoratissimus] தெராப் மட்டையில் செய்த உடை காயேன் சாவாட் (Kain Cawat), எனும் கச்சை. தெமுவான் பெண்களின் பாரம்பரிய ஆடைக்குரிய மூலப்பொருள் பனை, மெங்குவாங்,. தேங்காய் இலை. தெமுவான் பழங்குடியின் பாரம்பரிய நடனமான கொங்-கொங், சேவாங் போது பாரம்பரிய ஆடைகளை உடுத்துவர். தெமுவான் பெண்களுக்கான பாரம்பரிய உடைகளில் நுணுக்கமான பின்னல் கலை இருக்கும். தெமுவான் பின்னலை, நாகா பூஜாங் (Naga Bujang), செலெம்பாங் (Selempang), ஜாரி லீபான் (Jari Lipan) அடங்கும்.

பண்டிகைகள்
பழம் திருவிழா

தெமுவான் மக்கள் பழங்களைக் கொண்டாடுவதற்காக ஒரு நடன விழாவை நடத்துவர். மலேசியாவின் பழம் பருவம் ஜூனிலிருந்து ஆகஸ்டாகும். பழங்களுக்குரிய நடன விழா அக்டோபரில் நடைபெறும். தெமுவான் பழங்குடி உழைத்து பழங்களைச் சேகரித்ததைக் கொண்டாடுவதற்கும், அடுத்த பழ விளைச்சலை அதிகரிக்க வேண்டுவதற்கும் பழங்களுக்குரிய நடன விழாவை கொண்டாடுகின்றனர்.

தெமாருக் நாள்

தெமுவான் மக்கள் தெமாருக் நாளை ‘டத்தோவின் மரியாதைக்குரிய நாளாகக் கருதுகின்றனர். தெமுவான் பழங்குடியின் நம்பிக்கைபடி டத்தோ எனும் ஆன்மா ஒரு காவல் தெய்வம்.

விருந்தினர் உபசரிப்பு

தெமுவான் பழங்குடியில் விருத்தினரை உபசரிக்கும் வழக்கம் விழாவுக்கு ஒப்பானதாகும். விருந்தினரை இசையுடனும், நடனங்களுடனும் உபசரிப்பர்.

இசைக்கருவி
பேதோங் மூங்கில் [அறிவியல் பெயர்: Dendrocalamus asper] [நன்றி: Bambu Batu
மஹாங் மரம் [அறிவியல் பெயர்: macaranga]

தெமுவான் பழங்குடியினர் கொங்-கொங், துங்-துங், கெங்-கோங், கெராந்திங் எனும் மூங்கில் கீத்தார், மூங்கில் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பர். தெமுவான் பழங்குடியினர் இசைக்கருவிகளை பேதோங் மூங்கிலாலும், மஹாங் மரத்தாலும் [அறிவியல் பெயர்: macaranga] செய்வர்.

நடனம்

தெமுவான் பழங்குடியினர் கொங்-கொங் (Gong-Gong), சேவாங் (Sewang), சியாமான் துங்கால் (Seaman Tunggal), கப்பால் தெர்பாங் (Kapal Terbang), மெங்கூதிப் பூஹ் (Mengutip Buah), லீமாவ் மானிஸ் (Limau Manis), லம்பாக் (Lambak) போன்ற நடனங்களை ஆடுவர். செவாங் நடனத்தில் பதிநான்கு நடன கர்த்தா, ஏழு இசை வாசிப்பாளர்கள், ஒரு பாடகர் இருப்பார். தெமுவான் சமூகத்தில் சேவாங் நடனம் இறந்தவரின் ஆன்மாவை ஆற்றுப்படுத்துவதற்காகவும் ஆன்மீக மனசிக்கலுக்கு மருந்தாகவும் அமைகிறது.

சடங்கு

திருமணம்

இளம் தெமுவான் ஆடவர் தனது திருமண விருப்பத்தை வீட்டில் சொல்வார். அவரின் தந்தையார் பெண் வீட்டாரிடம் பெண் கேட்பார். இரு குடும்பங்களும் சம்மதித்தால் நிச்சய நாள் தீர்மானிக்கப்படும். நிச்சயதார்த்தத்தன்று மணமகளுக்கு மணமகன் மோதிரம், உடை, அலங்காரப் பொருட்களைத் தருவார். மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொள்வர். மணமகளுக்குத் திருமணமாகாத அக்காள் இருந்தால், அவருக்கும் மணமகளுக்குச் செய்த சீரை மணமகன் செய்ய வேண்டும். நிச்சயநாளின் இறுதியில் திருமண நாள் முடிவெடுக்கப்படும். திருமண நாளன்று பரிசத்தில் ஜுரு கெரா திருமண சடங்கை நிகழ்த்துவார். பரிசம் முடிந்தவுடன் மணமக்கள் ஒருவருக்கொருவர் நாசி கெபால் ஊட்டிக்கொள்வர். மணமக்கள் உணவருந்திய பின், வெற்றிலை சாப்பிடும் சடங்கும், புகையிலை பிடிக்கும் சடங்கும் நடைபெறும். திருமணம் நிகழ்ந்தபின், வீட்டுக்கு பெரியவர் புதுமணத் தம்பதிகளுக்கு மண வாழ்கைக்கான அறிவுரைகளைச் சொல்வார்.

விலக்கு

தெமுவான் கர்ப்பிணி பெண்கள் வீடு கட்டும் வேலை, ஆற்றைக் கடந்து செல்லுதல், வேட்டையாடுதல், வன விலங்குகளை வளர்த்தல், தோட்டத்தை எரித்தல், ஆமைகளைப் பிடித்தல், ஆமைகளைச் சாப்பிடுதல் கூடாது. தெமுவான் கர்ப்பிணிகள் விலக்குகளை மீறினால் பிறக்கும் குழந்தைக்கு உடல் ரீதியில் குறைகள் இருக்குமென நம்புகின்றனர்.

பிறப்பு
மெங்குவாங் இலைகள் [நன்றி: anajingga

பிடான் எனப்படும் மருத்துவச்சி கர்ப்பிணி பெண்ணுக்குத் துணையாக இருப்பார். குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்படும். ஒருவேளை குழந்தை பிரசவிக்கும்போது தாயின் இரத்தம் தரையில் கொட்டினால், இரத்தம் சொட்டிய இடத்திலிருக்கும் மண்ணைக் குழி தோண்டி புதைப்பர். தோண்டிய குழியைச் சமமாக்கியப் பின், தரையின் மேலே ‘மெங்குவாங் இலையை வைப்பர். இப்படி செய்தால், பேய்கள் தாயையும் சேயையும் தொந்தரவு செய்யாது என நம்புகின்றனர்.

இறப்பு

தெமுவான் சமூகத்தில் ஒருவர் இறப்பு செய்தியைக் கேட்டால், இறந்தவரின் வீட்டிற்குச் சென்று சிறு நன்கொடையைத் தருவார். தெமுவான் சமூகத்தில் ஒருவர் இறந்தால், மொத்த தோட்ட மக்களும் ஒன்று கூடி அடக்கம் செய்வர். ஒன்றிணைந்து செய்தால், இயற்கை பேரிடர்களைத் தவிர்க்கலாம் என்று நம்புகின்றனர். சடலத்தை விலங்குகள் கடக்காமல் பார்த்துக்கொள்வர். அடக்கம் செய்து முடிக்கும் வரை யாரும் உணவருந்த கூடாது. தெமுவான் சிறுவர்களின் காது மடல்களில் சுண்ணாம்பு அல்லது கருந்துணியின் சாம்பலைத் தடவுவர். இதனால் இறந்த ஆன்மா அலைந்து மற்றவரைத் தொந்தரவு செய்யாதென நம்புகின்றனர்.

இறந்தவரைக் குளிப்பாட்டி, வெண்பருத்தி துணியில் சுற்றுவர். அடக்கம் செய்யும் போது, எவரும் அதிகமாகப் பேசக்கூடாது. ‘பாங்கோன் (Bangun) என்று சொல்லவே கூடாது. பாங்கோன் என்றால் மலாய் மொழியில் எழுந்திரு என்று பொருள். பாங்கோன் என்று சொன்னால், இறந்தவரின் ஆவி எழுந்து மற்றவரைத் தொந்தரவு செய்யும் என நம்புகின்றனர். மயானத்திற்கு சடலத்துடன் இறந்தவரின் உறவினர்கள் செல்வர்.

லியாங் லஹாட் (Liang Lahad) எனப்படும் சவக்குழியில் கெமென்யான் எனும் ஊதுபத்தி ஏழு முறை ஏற்றப்படும். இந்தச் சடங்கு முடியும் வரை ஜம்பி செராபா (Jampi Serapah) எனும் அடக்கம் செய்யும் மந்திரத்தை உச்சரிப்பர். இப்படி செய்வதால், இறந்தவர் பூலாவ் புஹ (Pulau Buah), பழத்தீவு எனும் மகிழ்ச்சிமிக்க இடத்தைச் சேருவார் என்று நம்புகின்றனர். சடலத்தை சவக்குழிக்குள் இறக்கியவுடன், குழியை மூட வேண்டும். குழியை மூட வேர்கள் படிந்திருக்காத தூய்மையான மண்ணைப் பயன்படுத்த வேண்டும். மண்ணைச் சமன் செய்ய பயன்படுத்திய மண்வெட்டியை சமாதியின் மீது ஏழு முறை தட்டுவர். சமாதியில் கெமென்யான் எரிக்கப்படும்.

சமாதியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன் செராய் புல்லைச் சமாதியில் பரப்பி வைப்பர். செராய் புல்லை வைப்பவர் உடனே வீடு திரும்ப முடியாது. அவர் தன்னை மற்ற தெமுவான் மக்களிடமிருந்து மறைத்துக்கொள்வார். தன்னை மறைத்துக்கொள்வதால், கெட்ட சக்திகளிடமிருந்து தன்னையும் மற்றவரையும் காப்பாற்றிக் கொள்வார். சமாதியிலிருந்து வீடு திரும்பியவர்கள் அரிசி ஊறவைத்த தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து மாலையில் சமாதியின் மீது அகல்விளக்கு ஏற்றப்படும்.

இறந்தவரின் ஆவிக்கு மூன்றாம் நாள் அவர் வாழ்ந்த வீட்டின் வெளியில் இலையில் படையலிடப்படும். இறப்பு நிகழ்ந்து ஏழாம் நாளன்று, இறந்தவரின் குடும்பத்தார் சமாதிக்குச் சென்று படையலிடுவர். சமாதியில் வைத்த படையலுக்கு ஏழு முறை புகைகாட்டப்படும். இறப்பு நிகழ்ந்து, நூறாவது நாளில் ‘ஹரி நாவுக் தானா’ (Hari Nauk Tanah) கொண்டாடப்படும். நாவுக் தானா நாள் இறந்தவருக்கான நினைவேந்தலாகும்.

உசாத்துணை


✅Finalised Page