under review

திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி

From Tamil Wiki
திறக்கோல்

திறக்கோல் கங்கரையப் பெரும்பள்ளி (திறக்கோயில்) (பொ.யு. 8 -ம் நூற்றாண்டு) வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சமணத்தலம். இங்கே முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு உள்ளது.

இடம்

வட ஆர்க்காடு மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து ஏறத்தாழ பதினைந்து கிலோ மீட்டர் தென் மேற்கிலுள்ள தலம் திறக்கோல். இவ்வூரில் மக்கள் வாழும் பகுதியை அடுத்துக் காணப்படும் மலையில் இயற்கையாய் அமைந்த குகைகள் மூன்று உள்ளன. இவையே பொ.யு. 8-ம் நூற்றாண்டில் சமணப் பள்ளியாகத் திகழ்ந்தவையாகும். இந்த காலக்கட்டத்தில் இப்பள்ளிக்கு சற்றுத் தொலைவிலுள்ள பாறையில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அருகே கட்டடக் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது.துறுகல் என்ற சொல்லில் இருந்து இந்த ஊர் பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. திறக்கோயில் என சில நூல்களில் உள்ளது. திறம் + கோல் என பொருள்கொண்டால் அறிவை விளக்கும் தலைமையிடம் என பொருள் வருகிறது..

குகைகள்

திறக்கோல்

இங்குள்ள குகைப்பாழிகளில் துறவியர் உறைவதற்கென கற்படுக்கைகள் இல்லை. இயற்கையான பாறைப் பரப்பினைத்தான் படுக்கைகளாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். குகைகளின் உட்பகுதியில் தீர்த்தங்கரர் திருவுருவங்களும் செதுக்கப்படவில்லை. மாறாக இந்த குகைகளுக்குச் சிறிது தொலைவில் ஏறத்தாழ இருபத்தைந்து அடி உயரமுள்ள தனிப்பாறை ஒன்றின் முன்புறத்தில் மூன்று தொகுதிகளாகச் சிற்பங்கள் உள்ளன.

சிற்பங்கள்

திறக்கோல்- சந்திரநாதர்
பார்ஸ்வநாதர்

முகப்பின் நடுப்பகுதியில் பார்சுவ நாதர் தாமரை மலரிலான பீடத்தில் நின்றவாறு காட்சியளிக்கிறார். இவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த வண்ணம் உள்ளது பாம்பின் உட்பகுதி வளைந்து வளைந்து பார்சுவ தேவரின் பின்புறம் கீழ் நோக்கிச் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இத்தீர்த்தங்கரரின் வலதுபுறம் மேற்பகுதியில் கமடன் என்னும் தேவன் பாறை ஒன்றைத் தன் கரங்களில் தூக்க பார்ஸ்வநாதரைத் தாக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கிறான். பார்ஸ்வநாதரின் வலது புறம் அவரது யக்ஷனாகிய தரணேந்திரன் மண்டியிட்டு வணங்குவதாகக் காட்சியளிக்கிறான். அவரது இடது புறம் பத்மாவதி யக்ஷி நீண்ட குடையொன்றினை பார்ஸ்வதேவரது தலைக்கு மேலே பாதுகாப்பாகப் பிடித்தவாறு திகழ்கிறாள். ஐந்து தலை நாகமும், யஷி தாங்கிய குடையும் அவரது தலைக்கு மேலாக இடம் பெற்றிருக்கின்றன. ஆடை, அலங்காரங்கள் அதிகமின்றி இயற்கையான எழிலுருவாய் காணப்படும் யக்ஷன், யக்ஷி, கமடன் ஆகியோரது திருவுருவங்கள் கி.பி. 8-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றன.

திறக்கோல்- மகாவீரர்

சந்திர நாதர்

பார்ஸ்வதேவர் சிற்பத் தொகுதிக்கு வலது புறத்தில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் தீர்த்தங்கரர் திருவுருவத்தைக் காணலாம். சிங்க உருவங்களைக் கொண்ட பீடத்தின் மீது தியானத்தி லிருக்கும் இவரது தலைக்குப் பின்புறத்தில் நெருப்புச் சுவாலையுடன் கூடிய வட்டவடிவ பிரபையும், அதற்கு மேல் முக்குடையும் வடிக்கப் பெற்றிருக்கின்றன. இவரது தோள்களுக்கு இணையாக சாமரம் வீசுவோர் இருவர் சிறிய புடைப்புச் சிற்பங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றனர். இந்த சிற்பத்தின் அடிப்பகுதியில் தாமரை மலர் போன்ற சிறிய பீடத்தில் இளம் பிறை வடிவும் பிற்காலத்தில் மெல்லியதாக வரையப்பட்டிருக்கிறது. இளம் பிறைச் சந்திரன் சந்திர நாத தீர்த்தங்கரரது அடையாளம்.

மகாவீரர்

திறக்கோல்- பார்ஸ்வநாதர்

பாறையின் தடுவிலுள்ள பார்ஸ்வ நாதரது இடது புறத்தில் மற்றொரு தீர்த்தங்கரர் சிற்பம் தியானத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறது. சிங்க வடிவ அமைப்புகளைக் கொண்ட பீடத்தில் விற்றிருக்கும் இந்த தீர்த்தங்கரர் சிற்பத்திலும் சுவாலையுடன் கூடிய வட்டவடிவ பிரபை, முக்குடை முதலியன இடம் பெற்றிருக்கின்றன. இவரது இருபுறமும் சாமரம் வீசுவோர் இருவர் சிறிய அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் இலாஞ்சனை எதுவும் பொறிக்கப்படவில்லை. மாடம் போன்ற சிறிய பள்ளம் ஒன்று மட்டும் பாறையில் வெட்டப் பட்டிருக்கிறது. இலாஞ்சனை எதுவும் பொறிக்கப்படாத போதிலும், இத்தீர்த்தங்கரர் மகாவீரரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் பொயு. 8-ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டவை என்பவை அவற்றின் பாணியே தெளிவுபடுத்துகிறது. பொயு. 8-ம் நூற்றாண்டில் இங்கு பல்லவர் ஆட்சி நிலவி வந்தமையால் பல்லவ மன்னன் ஒருவனது ஆட்சியின் போது தான் இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த மன்னன் காலத்தில், குறிப்பாக எந்த ஆண்டில் இவை செதுக்கப் பட்டன என்பதை வரையறை செய்வதற்குப் போதிய சான்றுகளில்லை.

திறக்கோல் பழைய படிகளும் புதிய படிகளும்

கல்வெட்டுக்கள்

திறக்கோல்- ரிஷபநாதர்

தீர்த்தங்கரர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ள பாறையில் பொ.யு. 10, 11-ம் நூற்றாண்டுகளைச் சார்ந்த நான்கு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இரு சாசனங்கள் பரகேசரிவர்மன் என்னும் பட்டப் பெயர் கொண்ட சோழ மன்னனது காலத்தில் பொறிக்கப்பட்டவையாகும் மிக்கவாறும் இந்த பரகேசரிவர்மன் பொ.யு. 907-லிருந்து 953 வரை அரசு புரிந்த முதற்பராந்தச் சோழனாக இருக்கலாம். இங்குள்ள முதலாவது சாசனம் இந்த அரசனது மூன்றாவது ஆட்சியாண்டில், அதாவது பொ.யு. 910-ல், பொறிக்கப்பட்டிருக்கலாம். இந்த கல்வெட்டு தண்டாபுரத்திலுள்ள ஜின பள்ளியில் விளக்கெரிப்பதற்கென நெய் கொடுக்கும் வகையில் நெல்வேலியைச் சார்ந்த எறநந்தி என்பவர் சில ஆடுகளைத் தானமாகக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. எறநந்தி என்பவருக்கு நரதொங்கபல்லவரையர் என்னும் மற்றொரு பெயரும் இருந்திருக்கிறது. இவரது சொந்த ஊராகிய நெல்வேலி சோழ மண்டலத்தின் உட்பிரிவாகிய பனை நாட்டைச் சார்ந்திருந்த சிற்றூர். திறக்கோலின் பண்டைய பெயர் தண்டாபுரமாகும். இது வெண்குன்றக் கோட்டத்தில் பொன்னூர் நாடு என்னும் பிரிவில் உட்பட்டது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொன்னூர் நாடு என்பது வந்தவாசி தாலுகாவில் குந்து நாதர் கோயிலைக் கொண்ட பொன்னூர். சோழ நாட்டைச் சார்ந்த எற நந்தி தொண்டை நாட்டிலுள்ள திறக்கோல் பள்ளியில் திருவிளக்கேற்றுவதற்காகத் தானம் அளித்திருப்பது குறிப்பிடத் தக்கது..

பரகேசரிவர்மனது பன்னிரண்டாவது ஆட்சியாண்டுக் (பொ.யு. 919) கல்வெட்டு கனகவீரசித்தடிகள் என்பவர் பள்ளிக்கு நெல்தானம் செய்ததாகக் கூறுகிறது. சிதைந்துள்ள இச்சாசனம் விடேல் விடுகு செம்பொத்திலாடனார் எனப்பெயர் கொண்ட குணப்பெருமானார் என்பவரின் மைந்தனாகிய செம்பியன் செம்பொத்திலாடனார் என்பவரது பெயரையும் குறிப்பிடுகிறது. இவர் இங்குள்ள பள்ளியுடன் அல்லது அதற்கு வழங்கப்பட்ட தானத்துடன் ஏதாவது ஒருவகையில் தொடர்பு உடையவராக இருக்க வேண்டும்.

அடுத்துள்ள சாசனமும் மிகவும் அழிந்த நிலையிலேயே உள்ளது. இருப்பினும் இதிலிருந்து ஒரு விளக்கெரிப்பதற்கு பொன் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியினை மட்டும் அறிய வருகிறோம் பெரும்பாலும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்கள் முன்பு தினமும் விளக்கேற்றுவதற்காகத் தான் பொன் தானமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

பாறையின் மேற்குப் பகுதியில் சோழப் பெருவேந்தனாகிய முதலாம் இராஜராஜனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் (பொ.யு. 1007) வரையப்பட்ட சாசனம் இடம் பெற்றிருக்கிறது. இதுவும் சிதைந்திருப்பதால் இதன் முழுமையான செய்தியினை அறிவதற்கில்லை. எனினும் இது கங்கரையன் என்பவர் இராஜகேசரிபுரம் என்னும் இத்தலத்திலுள்ள கங்க சூரப்பெரும் பள்ளிக்கு ஏதோ ஒரு தானம் செய்தது பற்றிக் குறிப்பிடுகிறது. இது மட்டுமின்றி இந்த இராஜகேசரிபுரத்திலுள்ள மைசுத்தப் பெரும் பள்ளிக்குரிய பள்ளிச் சந்த நிலங்கள் திருவிடக்கழி என்ற ஊரிலிருந்ததாகவும் கூறு கின்றது.

பொ.யு. 10-ம் நூற்றாண்டில் தண்டாபுரம் எனப்பெயர் பெற்றிருந்த இத்தலத்திற்கு இராஜகேசரி இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அம்மன்னனது பட்டப்பெயரை அடிப்படையாகக் கொண்டு இராஜகேசரிபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முன்பே இங்கிருந்த குகைப்பள்ளிக்கு கங்கரையன் தானம் வழங்கியதால் அதற்கு கங்கசூரப் பெரும் பள்ளி (கங்கரையப் பெரும் பள்ளி என இருக்க வேண்டும்) என்று பெயர் சூட்டப் பெற்றிருக்கிறது. இதுவன்றி இங்கு மைசுத்தப் பள்ளி ஒன்றும் இருந்ததாக அறிய வருகிறது. இந்த பள்ளி இங்குள்ள கட்டடக் கோயிலைத்தான் குறிக்கிறது. தற்போதுள்ள கட்டடக்கோயில் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் கலைப்பாணி மாறுபட்டுக்காணப்படுகிறது. பொ.யு. 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய கட்டடக்கோயில் ஒன்று எழுப்பப்பட்டு, அது மைசுத்தப்பெரும் பள்ளி என்னும் பெயரில் இருக்கிறது. மகாவீரரை மூலஸ்தானத்தில் கொண்டு விளங்கிய இக்கோயில் பொ.யு. 13-ம் நூற்றாண்டிலும், அதற்குப் பின்பும் சிறந்து விளங்கியிருப்பதை இங்குள்ள சாசனங்கள் அறிவுறுத்துகின்றன (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை


✅Finalised Page