தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராஜராஜேச்சுரம்)
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரின் அருகிலுள்ள தாராசுரம் பேரூரில் அமைந்த சிவன் கோவில். மூலவர் ஐராவதீசுவரர். இக்கோவிலை இரண்டாம் இராஜராஜன் பொ.யு. 1146 - 1163 ஆண்டுகளில் கட்டினார். தற்போது ஐராவதீசுவரர் கோவில் யுனெஸ்கோவின் உலகமரபுச் சின்னமாக (World Heritage Site) உள்ளது.
இடம்
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு தென்மேற்கில் உள்ள அரிசிலாற்றின் கரையில் அமைந்த தாராசுரம் ஊரில் உள்ளது. அரிசிலாற்றின் கரையில் இந்தியத் தொல்லியல் துறை அமைத்த புல்வெளி நடுவே கோவில் அமைந்துள்ளது. ஐராவதீசுவரர் கோவிலில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி என தனித்தனி மதில்கள் கொண்டது.
உலக மரபுச் சின்னம்
ஐராவதீசுவரர் கோவில் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சோழர் காலத்தில் பொ.யு. 10 முதல் 12 வரை கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழீச்சுரம், ஐராவதீசுவர கோவில் மூன்றும் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக உள்ளன.
பெயர்
சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலைக் கட்டினார். பொ.யு. 1146 - 1163 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் இக்கோவில் கட்டப்பட்டது. இரண்டாம் ராஜராஜன் தான் கட்டிய கோவிலுக்கு இராசராசேச்சரம் எனப் பெயரிட்டான். இதனை கோவிலில் உள்ள மதிலில் திருபுவன சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் கல்வெட்டு உறுதி செய்கிறது. அதே மதிலில் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஆலயத்தை ராஜராஜ ஈஸ்வரம் எனக் குறிக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீவல்லபனின் கல்வெட்டு ’ராராசுரம் உடைய நாயனார்’ என ஆலய மூலவர் பெயரைச் சுட்டுகிறது. "ராசராசயீச்சரம் என்பதை சுருக்கி ராராசுரம் என அழைக்கும் வழக்கம் பாண்டியர் காலம் முதல் இருந்ததாக இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது" என முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். ராராசுரம் என்றழைக்கப்பட்ட ஆலயம் காலப்போக்கில் ’தாராசுரம்’ என மருவியது. பின் ராராசுரம் என்றழைக்கப்பட்ட ஊரின் பெயரும் 'தாராசுரம்’ என மாறியது. பொ.யு. 15-ம் நூற்றாண்டிற்குப் பின் எழுதப்பட்ட கும்பகோணப்புராணம் போன்ற நூல்கள் பஞ்சகுரோச தலங்களுள் ஒன்றாக தாராசுரம் கோவிலைக் குறிக்கின்றன. தாராசுரன் என்ற அசுரனை கோவிலோடு தொடர்பு படுத்தி பிற்கால புராணங்களும் எழுதப்பட்டன. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை இக்கோவிலில் உள்ள சிவனை பூஜை செய்ததால் மூலவர் 'ஐராவதீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றார் என சரஸ்வதி மஹால் நூலக சமஸ்கிருத சுவடி (ஐராவதீஸ்வரமான்மியம்) கூறுகின்றது.
கோவில் அமைப்பு
சிவன் கோவிலின் பொது அமைப்பாக சிவன் சன்னதி கிழக்கு முகமாகவும், தேவி சன்னதி சிவனுக்கு இடதுபுறம் தெற்கு முகமாகவும் அமைந்திருக்கும். தாராசுரம் கோவிலில் சிவன் மற்றும் அம்மன் சன்னதி கிழக்கு முகமாக அமைந்தது. சிவன் சன்னதிக்கு தனி மதில் சுவரும், தேவியின் சன்னதிக்கு தனி மதில் சுவரும் கொண்டது. ஆலயத்திற்கு நேர் எதிர் கிழக்கு திசையில் கோவிலின் திருக்குளம் உள்ளது. ஆலயத்தின் முதல் பகுதியாக சிவன் சன்னதிக்கு நேராக ராஜ கோபுரம் இருந்தது. கோபுரத்தின் மேற்தளங்கள் இடிந்துவிட்டதால் இப்போது கல்ஹாரம் மட்டும் உள்ளது. ஐராவதீஸ்வரர் கோவில் மதிலின் கிழக்குப்பக்கம் மூன்று நிலைகளுடன் சிறிய கோபுரம் உள்ளது. கோபுர வாயிலுக்கு வெளியே பலி பீடமும் இடப மண்டபமும் உள்ளன. மதிலின் வடக்கு, தெற்கு பகுதிகளிலும் வாயில்கள் உள்ளன. ஆனால் கோபுர அமைப்புகள் இல்லை. கோவிலின் உட்புறம் மதிலோடு இணைந்து திருச்சுற்று மாளிகை உள்ளது. திருச்சுற்றுமாளிகையில் பல சிற்றாலயங்கள் உள்ளன.
மூலவர் ஐராவதீஸ்வரர் கோவில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் கொண்டது. விமானத்தின் வடக்கு பக்கம் சண்டிகேஸ்வரர் ஆலயம் உள்ளது.
தேவி சன்னதிக்கு எனத் தனி கோபுர அமைப்பு இல்லை. சிவன் சன்னதிக்கு உள்ளது போல் மதில்களில் சுற்று மாளிகையும் இல்லை. அம்மன் சன்னதி சாலாகார ஸ்ரீவிமானம், அர்த்தமண்டபம், இடைநாழி மகாமண்டபம், முகமண்டபம் கொண்டது.
மூலவர் சன்னதிக்கும், மதிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சில மண்டபங்கள் இருந்து பின்னாளில் அழிந்துவிட்டன. அதில் செய்த அகழ்வாய்வில் சில மண்டபங்களின் அடித்தளங்கள் மட்டும் வெளிப்பட்டன.
கிழக்கு ராஜகோபுரம்
கிழக்கு ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்ட கோவிலின் பெரிய கோபுரமாக இருந்துள்ளது. பின்னாளில் மேற்தளங்கள் முழுவதும் சிதைந்து தற்போது கல்ஹாரம் மட்டும் உள்ளது. சிதம்பரம் ராஜகோபுரத்தைப் போல் அதே அமைப்புடன் செய்தது இக்கோபுரம். கோஷ்ட வர்க்கத்துடன், உபபீடம், அதிஷ்டானம், வேதிகை, பித்தி, போதிகை, பிரஸ்தரம் தில்லை கோபுரம் போல் இங்கும் உள்ளன.உபபீடக் கோஷ்டங்களில் தெய்வங்களின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு திசையில் 14 தெய்வ உருவங்களும், மேற்கு திசையில் 14 தெய்வ உருவங்களும் இடம்பெற்றுள்ளன. வடக்கு மற்றும் தென் திசையில் 9 தெய்வ உருவங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தின் அதிஷ்டான வர்க்கத்திலும் கல்வெட்டில் பெயர்களுடன் தெய்வ உருவங்கள் காணப்படுகின்றன. இதில் சில சிற்பங்கள் அழிந்து தஞ்சைக் கலைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
மேல்தளங்கள் செங்கல் கட்டுமானங்களாக இருந்ததால் அவை இயற்கையில் எளிதில் அழிந்துவிட்டதாக முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
பலிபீடமும் ரிஷபக் கொட்டிலும்
இரண்டாம் ராஜகோபுரத்திற்கு முன் பலிபீடமும், ரிஷபக் கொட்டிலும் உள்ளது. வெள்ள பாதிப்புகளால் மண்மேடாகி தற்போது நிலத்திற்கு ஐந்து அடி கீழே உள்ளது. பலிபீடம் உபபீடமும், அதிஷ்டானமும் கொண்டுள்ளன. இதன் தென்புறம் பலியிடுவதற்கான பூசகர் ஏறிச்செல்லும் ஏணிபடி உள்ளது. கிழக்கு பகுதியில் விநாயர் சிலை ஒன்றுள்ளது. இதற்கு முன்பு கிழக்கு பக்கம் சிறுமண்டபம் ஒன்றை பின்னாளில் இணைத்துள்ளனர். உயர்ந்த மேடை மீது அமைந்த பலிபீடம் தாமரை பீடவடிவில் உள்ளது. ரிஷபக் கொட்டில் என்னும் இடபமண்டபம் பலீபடத்தின் அருகில் அமைந்துள்ளது. சிம்ம அலங்காரம் கொண்ட உபபீடம், பத்மம், திரிபட்ட குமுதம், யாளம் ஆகிய வரிகளுடன் இரு தூண்கள் கொண்டு உள்ள ரிஷபம் கோவிலை நோக்கிய வண்ணம் அமர்ந்துள்ளது.
இரண்டாம் ராஜகோபுரம்
இரண்டாம் ராஜகோபுரம் மதிலின் கிழக்கு வாயிலாக உள்ளது. இக்கோபுரம் மூன்று (திரிதள) நிலைகளைக் கொண்டது. உபபீடம், அதிஷ்டானம், கால்கள் ஆகியவற்றுடன் பித்தி, போதிகை, கபோதகம், பிரஸ்தரம் ஆகியவை அலங்காரத்துடன் அமையபெற்றுள்ளன. மேலே கிரீவம், சிகரம் உள்ளன. சிகரத்தின் மேல் இருபுறமும் கீர்த்தி முகங்களும், ஐந்து ஸ்தூபிகளும் உள்ளன. கோபுரத்தில் திண்ணை அமைப்புகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு தூண்களும் இடம்பெற்றுள்ளன
மதிலும் சுற்றுமாளிகையும்
மதிலோடு இரண்டாம் ராஜகோபுரமும், சுற்று மாளிகையும் இணைந்து காணப்படுகின்றன. திருச்சுற்றுமாளிகையின் தெற்கு பக்கத்தின் ஒரு பகுதி இடிபாட்டில் சிக்கியதால் மண்டபக் கூரையின்றிக் காணப்படுகிறது. கோபுரத்தின் தென்புறம் ஒரு மண்டபமும், சிற்றாலயமும் உள்ளது. இம்மண்டபம் சிறுத்தொண்டர் வரலாற்றைச் சித்தரிக்கும் மண்டபமாக உள்ளது.
சுற்றுமாளிகையின் மேற்கு பக்கம் ஆறு சிற்றாலயங்களும், இரண்டு பெரிய மண்டபப் பகுதிகளும் உள்ளன. சிற்றாலயங்களில் தெய்வங்களின் திருமேனி இருந்து பின்னாளில் இடம்பெயர்ந்திருக்கிறது. அவை தற்போது தஞ்சைக் கலைக் கூடத்தில் உள்ளன. வடக்கு பக்கம் நான்கு சிற்றாலயங்களும், நடராசர் மண்டபமும் உள்ளது. வடபுற சுற்றுமாளிகையில் ஓதுவார்களின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்களும் உள்ளன. மதிலின் தென் திசையில் சிறிய வாயிலும், வட பக்கம் சிறிய வாயிலும் உள்ளன.
சுற்று மாளிகையின் அடித்தளத்தில் சிற்பக் காட்சிகள் தொடர் உள்ளன. நடராஜர் மண்டபம், கங்காளர் மண்டபங்களில் அழகிய சிற்பப் படைப்புகள் உள்ளன.
விமானமும் மண்டபங்களும்
ஸ்ரீவிமானமும் அதனுடன் அமைந்த அர்த்தமண்டபம், இடைநாழி, மகாமண்டபம் என எல்லாம் ஒரே கட்டுமான அமைப்பாகத் திகழ்கின்றன. உபபீடம், அதிஷ்டானம், வேதிகை பித்தி, கால்கள், கபோதகம், பிரஸ்தரம், சாலை, கூடு ஆகியவை கொண்ட பஞ்சதள விமானம் உள்ளது. விமானத்தின் வெளிப்புறம் பதினைந்து கோஷ்டங்கள் உள்ளன. கும்ப பஞ்சர அலங்காரம் விமானத்தின் பித்தியில் மட்டும் உள்ளது. விருத்த சிகரம் நான்கு திசைகளிலும் நாசி, ஸ்தூபித்தறியுடன் காணப்படுகிறது. விமானத்தின் முதல் தளத்தில் அர்த்தமண்டபத்திற்கு மேலாக ஒரு மண்டபம் உள்ளது. அதிலுள்ள கோஷ்டங்களில் ஏழு நதி தெய்வங்களின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. இடைநாழியின் தெற்கு, வடக்கு பக்க வாயில்களை ஒட்டி படிக்கட்டுகள் உள்ளன. அர்த்தமண்டபத்தின் வடபகுதியில் ஒரு நீண்ட அறை உள்ளது. இடைநாழியில் நான்கு தூண்கள் உள்ளன. இடைநாழிக்கும், முகமண்டபத்திற்கும் இடையே மகாமண்டபம் உள்ளது. இம்மண்டபம் நாற்பத்தி மூன்று தூண்கள் கொண்டது. இவற்றில் எட்டு தூண்கள் சுவருடன் புதைந்து அரைத்தூண்களாகக் காட்சி தருகின்றன. இம்மண்டபத்தின் தெற்கு மற்றும் வடக்கு பக்கத்தில் சில சிறிய அறைகள் உள்ளன. மகாமண்டப சுவரின் வெளிப்புறம் பன்னிரெண்டு தேவகோஷ்டங்கள் உள்ளன.
ஆலயத்தின் முகமண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்றழைக்கப்படுகிறது. இம்மண்டபத்தின் தென்புறம் தேர்மண்டபம் போல் அமைப்பு கொண்டது. இதில் கிழக்கு, மேற்கு பகுதியில் மண்டபத்திற்கு ஏறிச்செல்ல படியமைப்புகள் உள்ளன. இதுவே கோவிலுள் செல்ல அமைந்த பிரதான வழி. இம்மண்டபத்தில் எண்பத்தி மூன்று தூண்கள் உள்ளன. மண்டபத்தின் உள்ளே வடக்கு பக்கம் அம்மனுக்கென ஒரு சிற்றாலயம் உள்ளது. இதில் மொத்தம் இருபத்திரெண்டு கோஷ்டங்கள் உள்ளன. மண்டபத்தின் விதானம் முழுவதும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
அம்மன் கோவில்
தனி மதில்களுடன் சிவன் கோவிலுக்கு இடப்பக்கம் அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கருவறை அர்த்தமண்டபம், இடைநாழி, மகாமண்டபம், முகமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. விமானம் மூன்று தள அமைப்புக் கொண்டது. முகமண்டபம் சுவர்களின்றி தூண்களாலே தாங்கப்பெற்று திகழ்கின்றன. இதில் முப்பத்தி இரண்டு தூண்கள் உள்ளன.
கோஷ்ட சிற்பங்கள்
விமானத்தின் முன்புள்ள மகாமண்டபம், முகமண்டபத்தின் வெளிச்சுவரில் இருபத்தொம்பது தேவகோஷ்டங்கள் உள்ளன. விமானத்தின் வெளிச்சுவரில் பதினைந்து தேவகோஷ்டங்களும் இரண்டு சுவர்ச் சிற்பங்களும் உள்ளன. இவை அனைத்திலும் உள்ள தெய்வ சிற்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது பதினெட்டு கோஷ்டங்களில் மட்டுமே கற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் ஒன்பது கோஷ்டங்களில் பிற்காலச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுவர் சிற்பங்களாக கிராதார்ஜூனர் கதையும், இராவணன் கயிலையை தூக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. கீழ்காணும் சிற்பங்கள் தற்போது கோஷ்டங்களில் காணக்கிடைக்கின்றன.
- பத்மநிதி
- அர்த்தநாரி சூரியன்
- நாகராஜர்
- அகத்தியர்
- உபமன்னிய முனி
- அகோரமூர்த்தி
- அகோர பைரவர் (அரவு ஆடலோன்)
- சரபமூர்த்தி
- கிராதார்ஜூனர் கதைச் சிற்பக்காட்சி
- பிக்ஷாடணர்
- கணபதி
- அக்னி
- இயமன்
- தட்சிணாமூர்த்தி
- நிருதி
- வருணன்
- இலிங்கோத்பவமூர்த்தி
- வாயு
- குபேரன்
- பிரமன்
- ஈசானன்
- இந்திரன்
- மகிஷாசுரமத்தினி
- இராவணானுக்கிரகமூர்த்தி
- இராஜராஜேஸ்வரி
- திரிபுராந்தகர்
- கரி உரித்த பெருமாள்
- கங்காள மூர்த்தி
- பைரவர்
- தன்வந்திரி
- அதிசண்டிகேஸ்வரர்
- சங்கநிதி
திருத்தொண்டர் புராணத் தொடர் சிற்பங்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோவிலில் தேவாசிரியமண்டபத்தில் அமர்ந்து பதிகமாகப் பாடிய திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி 90 பாடல்களாக திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றினார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் 13 சருக்கங்களையும், 4286 பாடல்களையும் உடைய திருத்தொண்டர் புராணம் என்னும் நூலை இயற்றினார். இதனை இரண்டாம் குலோத்துங்கன் ஆதரவோடு தில்லையில் அரங்கேற்றம் செய்தார். (பார்க்க: பெரியபுராணம்)
இரண்டாம் ராஜராஜ சோழன் தான் கட்டிய தாராசுரம் கோவிலில் பெரியபுராணத்தின் காட்சி சிற்பத் தொகைகள் இடம்பெற விரும்பினார். சேக்கிழாரின் வழிகாட்டலிலும், ஒட்டக்கூத்தரின் உறுதுணையும் கோவிலில் சிற்பங்கள் அமைய உதவின.
திருக்கோவிலின் முகமண்டபத்தில் (இராஜகம்பீரன் திருமண்டபம்) உள்ள உபபீடத்திற்கு மேலாக அமைந்துள்ள அதிஷ்டானத்தில் குமுதவரிக்கு மேலாகக் கண்டபாத வரியில் கீழ்த்திசை வாயிலுக்கு எதிரே இடப்பக்கமாகத் தொடங்கி அடுத்து உள்ள மண்டபங்களிலும், கருவறை சுவற்றின் மூன்று பக்கங்களிலும் தொடர்ந்து வடதிசையில் சண்டிகேஸ்வரர் ஆலயத்திற்கு எதிர்ப்புறம் உள்ள முதலைவாய்ப் பிள்ளைக் காட்சி வரையிலும் தொடர் சிற்பக்காட்சிகளை அமைத்துள்ளனர். அறுபத்தி மூன்று நாயனார்களின் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பிற சிற்பங்கள்
- மேலே குறிப்பிட்டவற்றை தவிர ராஜகம்பீரன் திருமண்டபத்திலும் (முகமண்டபம்), சிறுத்தொண்டர் திருமண்டபத்திலும், கங்காளமூர்த்தி மண்டபத்திலும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
- விமான மண்டபத்தின் மேற்தளத்தில் ஏழு நதி தெய்வங்களும் கயிலைக் காட்சியும் இடம்பெற்றுள்ளன.
- ஓதுவார் நூற்றெண்மர் சிற்பங்கள் வடபுறத்தில் உள்ள திருச்சுற்றுமாளிகையின் சுவரில் அமைந்துள்ளது.
- தலைக்கோல், மாணிக்கம் பெற்ற ஆடற்கலை கலைக் காட்டும் சிற்பங்களும், பிற நாட்டிய சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
- தமிழகக் கட்டடக் கலையின் வெளிப்பாடாக அமைந்த மாளிகைகள், கோவில்கள், மண்டபங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பினை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளது.
- இவ்வாலயத்தின் வழிபாட்டில் பதினைந்து செப்புத் திருமேனிகள் உள்ளன. இந்திய தொல்லியல் துறை திருப்பணிகளுக்காக சுற்றுமாளிகையின் கீழ்ப்புற பகுதியைப் பிரித்த போது மூன்று செப்பு சிலைகளும், மேற்கு பகுதியில் 19 செப்பு சிலைகளும் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உசாத்துணை
- தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சுரம்), குடவாயில் பாலசுப்ரமணியன்.
நன்றி: குடவாயில் பாலசுப்ரமணியன், அகரம் பதிப்பகம்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Jun-2023, 09:36:40 IST