under review

தமிழ் நவீன நாடக வரலாறு

From Tamil Wiki

தமிழ் நவீன நாடக வரலாறு (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) தெருக்கூத்து ஆங்கிலேயர்களின் நாடக பாணியை உள்வாங்கிக் கொண்டதிலிருந்து ஆரம்பமாகிறது. புராணக் கதைகளையும் பழங்கதைகளையும் மாற்றி தற்காலக் கதையொன்றை நாடகமாக்கும் முயற்சி தோன்றிய காலம்.

தொடக்கம்

  • பொ.யு. 1870 முதல் தமிழ் நவீன நாடகத்தின் தொடக்க காலம் என வரையறுக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பம்பாயில் தோன்றி இந்தியா முழுவதும் நாடகம் நடத்திய பார்சி நாடகக் குழுக்களின் தாக்கமும், உரைநடை வளர்ச்சி, மேல்நாட்டு நாடகப் போக்கின் தாக்கம் ஆகியனவும் தமிழ் நாடகத்தைப் புதிய வடிவிற்குக் கொண்டு வந்தன. பார்சி இனத்தைச் சார்ந்த வணிகர்கள், ஆங்கில நாடக அரங்கிலிருந்து பெற்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலேயருக்காகவும் மத்தியதர வர்க்கத்துப் படித்த இந்தியர்களுக்காகவும் நாடகங்களை நடத்தினர்.
  • பம்மல் சம்பந்த முதலியாரின் வழிகாட்டி என்று சொல்லப்படும் தஞ்சை கோவிந்தசாமி ராவ், அரசு வேலையை உதறிவிட்டுப் பார்சி நாடக, பாணியில் நாடகங்களை நடத்தத் தொடங்கினார்.
  • ஆங்கிலக் கல்விக் கற்ற காசி விசுவநாத முதலியார் 1867-ல் 'டம்பாச்சாரி விலாசம்' என்ற முதல் சமூக நாடகத்தை அரங்காற்றுகை செய்தார். கண்ணகியின் கதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை. அங்கம், களம் என்ற பகுப்புகளின்றி ஒரே மூச்சாகக் கதை சொல்லப்பட்டது. அக்கால மரபுப்படி கட்டியங்காரன் கதை நிகழ்த்துவது போலவும் அமைக்கப்பட்டது. ஆனால் நாடகம் தெருக்கூத்து பாணியிலேயே அமைந்திருந்தது. இசை நாடகமாகவே இருந்தது.
  • 1877-ல் இராமசாமி ராஜா கண்ணகி கதையை அடிப்படையாகக் கொண்டு 'பிரதாப சந்திர விலாசம்' என்ற நாடகத்தை உரைநடையில் எழுதி வெளியிட்டார். இசை நாடகமாக -ல்லாமல் இசையும் வசனமும் கலந்து இந்நாடகம் படைக்கப்பட்டது. இதில் நாடகப் பாத்திரங்கள், தெலுங்கர்களானால் தெலுங்கிலும் வடநாட்டவரானால் உருதுவிலும் மற்றவர் அவரவர் படிப்பு சாதி சமூகப்படிநிலை இவற்றிற்கேற்பப் பேசும் வேறுபட்ட பாணிகளில் வசனம் எழுதப்பட்டது.உரைநடை நாடகம் என்னும் புதிய நாடக அமைப்பு ஏற்பட்டது.
  • காசி விசுவநாத முதலியார்(அரசு அதிகாரி), ராமசாமி ராஜு( பாரிஸ்டர்) இருவரின் முயற்சி, படித்துப் பல்வேறு வேலைகளில் இருந்தவர்களை நாடகம் எழுதத்தூண்டியது.

இருபதாம் நூற்றாண்டு

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின் முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகள். நாடகக்கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையில் இருந்தே தொடங்கப்பட்டன. வேறு ஊர்களில் நாடகக் கம்பெனிகள் தொடங்குபவர்கள் கூட மதுரை என்றே போட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்குகள்
  • தமிழ்த் தெருக்கூத்துகளைப் புதுப்பித்தார்.
  • மற்ற நாடக ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருக்குறட்பாக்களைத் தம் நாடகங்களுள் புகுத்தினார்.
  • நாடகங்களை முறையாக ஒழுங்குபடுத்தி மேடையேற்றினார்.
  • பாரம்பரிய வட்ட அரங்கு என்பது ஒருபக்க அரங்காக வடிவமாக மாறியது.
  • எளிய மக்கள் பங்கேற்கும் அரங்கமாக வளர்ந்தது.
  • இசையை, கர்நாடக இசைக் கூறுகளை முதன்மைப்படுத்தி நாடகங்கள் நிகழ்ந்தன.
  • படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.
பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகப் போக்குகள்
  • பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றினார். தமிழ் நாடக நடிகர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல நிலையை ஏற்படுத்தினார்.
  • 1897-ல் பம்மல் சம்பந்த முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபையே தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடக சபை.
  • புராண நாடகச் செல்வாக்கை மீறி, புதுமுறை நாடகங்களை அரங்காற்றுகை செய்தார்.
  • உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார்.
  • நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியினை அமைத்துப் பேசும் மொழி நடையைக் கையாண்டார்.
  • இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலரின் நாடகப் போக்குகள்
  • தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் 1920-ல் பால மனோகர நாடக சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கினார்.
  • காந்திய இயக்கம் தொடர்பான நாடகங்களை உருவாக்கினார். மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அரங்காற்றுகை செய்தார்.
  • பாடல் என்னும் நிகழ்த்து வடிவத்திலிருந்து, புனைக் கதைகளைப் போலப் பேசும் மரபு சார்ந்த நாடகங்களை உருவாக்கினார்.
  • வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற துப்பறியும் கதாசிரியர்களைப் பின்பற்றித் துப்பறியும் நாடகங்களை மேடையேற்றினார்.
சி.கன்னையாவின் நாடகப் போக்குகள்
  • சி. கன்னையா. ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி ரங்கூன், யாழ்ப்பாணம் ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று நாடகங்களை நடத்தினார்.
  • 1915-ம் ஆண்டிலேயே கும்பகோணத்தில் காலை பத்து மணிக் காட்சியாக நாடகம் நடத்தினார்.
  • நீளம், அகலம், உயரம் என்னும் முப்பரிமாணம் கொண்ட காட்சி அமைப்புகளுடன் நாடக மேடை அமைத்தார்.
  • நிஜ குதிரை, தேர், யானை போன்றவற்றை மேடைக்கே கொண்டு வந்தார்.
  • புதுப்புது உடைகள், ஒளி அமைப்பில் எண்ணெய் விளக்குடன் கேஸ் விளக்குகளையும் பயன்படுத்தியது.
  • விரிவாக விளம்பரங்கள் செய்தல், ஒலிபெருக்கி -ல்லாத காலத்தில் முன் மேடையில் வரிசையாகப் பானைகளைக் கட்டி எதிரொலி கேட்கும் வண்ணம் செய்யும் உத்தியைக் கையாண்டார்.
பிற போக்குகள்
  • நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை மதுரை தேவி பால விநோத சங்கீத சபை என்னும் நாடகக் குழுவை 1933-ல் தொடங்கினார். இவருடைய ஐயப்பன் நாடகம்தான் தமிழகத்தில் ஐயப்ப பக்தி வளர ஒரு காரணமாக இருந்தது.
  • எம். கந்தசாமி முதலியார் நடிகராகத் தொடங்கி, பின் சிறந்த நாடக ஆசிரியராகவிளங்கினார். இவர் ஜே.ஆர்.ரங்கராஜுவின் ஐந்து புதினங்கள் உட்பட, பல புதினங்களை நாடகங்களாக்கினார். தமிழில் புதினங்களை நாடகமாக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
  • நாடக அரசி எனப்படும் கும்பகோணம் பாலாமணி அம்மாள், முதன் முதலாகப் பெண்களையே முழுக்க முழுக்க வைத்து பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி என்ற குழுவைத் தொடங்கினார். எழுபது பெண்கள் இதில் இருந்தனர். திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய நாடகப் பணி பாதிக்குமென்று இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதிருந்தார். சமுதாய சீர்திருத்த நாடகங்களை முதன் முதலில் நடத்தினார். பெட்ரோமாக்ஸ் விளக்கு இவர் நாடகத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பாஸ்கரதாஸ் கவிஞர், இசை அமைப்பாளர், நாடகப் பாவலர். இவர் தலைமையில் தமிழ் நாடக நடிகர் சங்கம் மதுரையில் 1920-ல் ஆரம்பிக்கப்பட்டது. தேச பக்தியையும், ஆங்கில அரசிற்கெதிரான கருத்துகளையும் தைரியமாக எடுத்துரைத்தார்.
  • விஸ்வநாததாஸ், தேசியம் கலந்த நாடகப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தான் நடித்து வந்த வள்ளி திருமணம், பவளக்கொடி, நல்லதங்காள் முதலான புராண நாடகங்களிலும் இந்திய நாட்டு விடுதலையை முழக்கும் பாடல்களைப் புகுத்திப் புரட்சிசெய்தார்.
  • டி.கே.ஷண்முகம் 1925-ல் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின் 1950-ல் டி.கே.எஸ். நாடகக் குழு தொடங்கப்பட்டது. அவருடைய நாடகங்கள் ஏதாவதொரு நீதியைப் புகட்டியது. வட்டப்புள்ளி விளக்கு, குறைப்பான் விளக்கு முதலியன இவர் நாடகத்திலேயே முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. இந்த விளக்குகள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டன. ஒளவையார் நாடகம் மூலம் ஒப்பனைத் திறத்திலும் புகழ் பெற்று விளங்கினார். மனிதன் நாடகத்திற்கு திரைப்படம் போலவே எழுத்துகளைக் காண்பித்தனர்.
  • என்.எஸ். கிருஷ்ணன் சிறு வயது முதலே பல நாடகக் குழுக்களில் நடித்தார். 1944-ல் என்.எஸ்.கே நாடகக் குழுவைத் தொடங்கினார். பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுடன் நல்லதம்பி, கிந்தனார் போன்ற நாடகங்கள் உருவாக்கப்பட்டன.
  • சுயமரியாதைக் கொள்கைகளுடன் திராவிட இயக்கத்தினர் நாடகங்கள் எழுதினர். அறிஞர் அண்ணா 1934-ல் 'சந்திரோதயம்' என்ற நாடகத்தை அரங்காற்றுகை செய்தார். தொடர்ந்து நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி எனப் பல நாடகங்களை எழுதினார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் நாடகம் மூலம் அலசியது இவருடைய தனித்த போக்கு.
  • தூக்குமேடை நாடகம் மூலம் அறிமுகமான கருணாநிதி, நச்சுக் கோப்பை, மந்திரி குமாரி, வெள்ளிக்கிழமை, மணிமகுடம், போர் வாள் எனப் பல நாடகங்களைப் படைத்தார். அடுக்கு மொழியிலும், அனல் தெறிக்கப் பேசுவதிலும் இவருடைய நாடகப் பாத்திரங்கள் தனித்த போக்குகளைப் பெற்றிருந்தது.
  • எஸ்.வி.சகஸ்ரநாமம் 1952-ல் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவை ஆரம்பித்தார். அதன் மூலம் மேடையேறிய நாடகம் தாகூரின் கதையைத் தழுவிய 'கண்கள்'. இந்த நாடகம் தமிழ் நாடகமேடைக்கு ஒரு திருப்பு முனையாக, கதை - காட்சி - நடிப்பு யாவற்றிலுமே மாறுதலை ஏற்படுத்தியது. பல மேனாட்டுக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு நாடகமாக நடிக்கப்பட்டன. வானவில் என்னும் நாடகம் சுழலும் மேடை அமைத்து நடிக்கப்பட்டது. தீவிர இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்களான பி.எஸ்.ராமையா, தி.ஜானகிராமன் போன்றோர் கதைகளும் நாடகங்களாக்கப்பட்டன. எஸ்.வி.சகஸ்ரநாமம் நாடகப் பட்டறை நடத்திப் பலருக்கு நாடகப் பயிற்சியும் அளித்தார்.

1980-களுக்குப் பிறகு

  • காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் பயிற்சிப் பட்டறைகள் (1977), பாதல் சர்க்கார் நாடகப் பட்டறைகள் (1980) ஆகியவற்றின் தாக்கம் தமிழ் நாடகவியலாளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • நவீன நாடகங்கள் சில அரங்குகளிலும், அரங்கத்தைப் புறக்கணித்து மக்களிடையேயும் நடத்தப் பட்டன.
  • பெண்கள் நாடகத்தில் முழு ஈடுபாட்டுடன் நுழைய ஆரம்பித்த காலம்.
  • கதைக் கருக்கள், களங்கள் மாற்றம் பெற்றன.
  • நாடகப் பயிற்சிப் பட்டறைகளின் காலம் ஆரம்பமானது. தேசிய நாடகப்பள்ளியில் கற்று வந்த சே. ராமானுஜம் அவர்களின் தன்முனைப்பால் காந்தி கிராமம் கலாச்சார ‘அகாதமி’ சார்பில் முதல் பயிற்சிப்பட்டறை ஜூன் 20, 1977-ல் நடந்தது. இப்பட்டறையின் இயக்குனர் காஷ்மீரத்துக்காரரான பன்ஸிகௌல். 1980-க்குள் நடந்த மூன்று பயிற்சிப் பட்டறைகளும் தமிழில் நவீன நாடக முயற்சிகள், நாடகக் குழுக்கள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது.
  • 1977-ல் கூத்துப்பட்டறை என்கிற முழுநேர நாடக இயக்கம் ந. முத்துசாமி மற்றும் பிரக்ஞை வீராசாமி போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.
  • 1978-ல் மதுரை நிஜநாடக இயக்கம், சென்னை பரிக்ஷா, வீதிநாடக இயக்கம் ஆகிய குழுக்கள் உருவாயின.
  • 1984-ல் நிஜநாடக இயக்கத்தின் ‘துர்க்கிர அவலம்’ நாடகம் தென்மண்டல நாடக விழாவில் கலந்துகொண்டு பிறமொழி நாடகங்களுடன் போட்டியிட்டு தேசிய நாடக விழாவிற்குத் தேர்வு செய்யப்பெறுகையில் ‘தமிழ் நாடகம்’ என்பதான கருத்துருவின் தேவை உணரப் பட்டதாக பேரா.மு.இராமசுவாமி குறிப்பிடுகிறார்.
போக்குகள்
  • பேராசிரியர் சே.இராமானுஜம் 'புறஞ்சேரி', 'வெறியாட்டம்', 'நாற்காலிக்காரர்','அண்டொர்ரா', 'செம்பவளக்காளி', 'தங்கக் குடம்' போன்ற தமிழ் நாடகங்களோடு மலையாள நாடகங்களையும் இயக்கி அரங்காற்றுகை செய்தார். நாடக உருவாக்கம், பயிற்சிப் பட்டறை, சொற்பொழிவு ஆகியவற்றின் மூலம் நவீன நாடகங்களுக்கு பங்களித்தார்.
  • ந. முத்துசாமி எழுத்து இலக்கியப் பத்திரிக்கையோடு தன்னை இணைத்துக் கொண்டு, நவீன கதை, கவிதையில் தீவிரமாய்ச் செயல்பட்டவர். 'நடை' பத்திரிகையில் நாடகங்கள் மற்றும் நாடகம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். 'காலம் காலமாக' என்பதில் தொடங்கி 'தெனாலிராமன்' வரை இவரது பல நாடகங்கள் முக்கியமானவை. இவரது சுவரொட்டி தமிழின் சிறந்த நவீன நாடகமாக உள்ளது. இவரது முழு நேர நாடகக் குழுவான கூத்துப் பட்டறை தேசிய அளவில் முக்கியமான நாடகக் குழுக்களில் ஒன்று.
  • பிரளயன் தமிழக வீதி நாடகத்தில் குறிப்பிடத் தக்கவர். மக்களோடு இணைந்து, சமூகக் கருத்துகளை நாடகக் கலை மூலம் கொண்டு சென்றார். சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர். 'நாங்கள் வருகிறோம்', 'முற்றுப்புள்ளி', 'பெண்' இவருடைய முக்கிய நாடகங்கள். அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும் இவரது பங்கு கணிசமாக உள்ளது. பிரெஞ்சு நாவலான குட்டி இளவரசன் என்ற கதையை நாடகமாக்கினார்.
  • மு. இராமசாமி தமிழ் நவீன நாடக அரங்கில் முதன்மை நிலைச் செயல்பாட்டாளர்களுள் முதன்மையானவர். மதுரையில் நிஜ நாடகக் குழுவைத் தொடங்கினார். இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி நடத்திய முதல் தென்மண்டல நாடக விழாவில் தனது 'துர்க்கிர அவலம் நாடகம்' தேசிய நாடக விழாவிற்கும் தேர்வாகியது. 'தோழர் பெரியார்' என்ற நாடகம் தமிழகத்தில் பல இடங்களிலும் நிகழ்த்தப்பட்டது. தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறைத் தலைவராக உள்ளார்.
  • வ. ஆறுமுகம் புதுவை ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் பயிற்றுனர். 'பிரளயம்', 'சுவரொட்டிகள்', 'கோயில்' ஆகிய நாடகங்களை இயக்கினார். இவரின் 'கருஞ்சுழி' என்ற நாடகம் மண்டல நாடக விழா (விஜயவாடா), தேசிய நாடக விழா (புதுதில்லி) ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் பிறமொழி நாடகங்களை விட முதன்மை பெற்று, தமிழ் நாடக அரங்கிற்கு எனத் தனியொரு மதிப்பைப் பெற்றுத் தந்தது.
  • வேலு. சரவணன் ஆழி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். சிறுவர்களுக்கான நாடக அரங்கு பற்றிய சிந்தனையுள்ளவர். கிராமம், கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கினார். இவருடைய 'கடல் பூதம்', 'குதூகல வேட்டை' என்னும் இரு சிறுவர் நாடகங்களும் இரண்டாயிரம் தடவைக்கு மேல் மேடையேறியுள்ளன.
  • கே.ஏ.குணசேகரன் தன்னானே நாடகக் குழு மூலம் நாடகங்களைத் தயாரித்து அரங்காற்றுகை செய்தார். நாட்டுப்புறப் பாட்டு, தலித் நாடகங்களில் ஆர்வமுள்ளவர். கிராமப்புறங்களில் நாடகப் பட்டறைகள் மூலம் விழிப்புணர்வு நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார். இவரின்'பலியாடுகள்' என்ற தலித் நாடகம் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page