under review

ஜஹாய்

From Tamil Wiki
Indexja.jpg

ஜஹாய் இனக்குழு தீபகற்ப மலேசியாவின் நெக்ரிதோ பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த இனக்குழு.

வாழிடம்

Jahai .jpg

ஜஹாய் பழங்குடியினர் பேராக் மாநிலத்தில் பானோன், தியாங் நதி, தெமெங்கோர் அணையிலும், கிளந்தானில் ருவால், ஜேலி நதிகள் போன்ற நீர் நிலைகளின் அருகிலிம் வசிக்கின்றனர். ஜஹாய் பழங்குடியினர் நாடோடியாக வாழ்பவர்கள். இவர்கள் மரணம், நோய், சண்டைகள், உணவுத் தேவை ஆகியவற்றால் நாடோடியாக வாழ்கின்றனர்.

தொழில்

ஜஹாய் ஆண்கள் காட்டிலிருந்து மனௌவ் மூங்கில், கஹாரூ, மூலிகைகள், பெதாய் மற்றும் தேன் சேகரிப்பர். ஜஹாய் ஆண்கள் மீன் பிடித்தல், மான், ரோ மான் (Roe deer) மற்றும் பேட்ஜர்கள் (Badgers) போன்ற விலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவற்றிலும் ஈடுபடுவர். ஜஹாய் ஆண்கள் ஜூலை மாதத்தில் மட்டுமே வேட்டையாடுவர். தற்சமயம் ஜஹாய் பழங்குடியினர் ரப்பர், பனை மரக் காடுகளிலும் வேலை செய்கின்றனர்.

சமூக படிநிலை

ஜாஹய் பழங்குடியின் தலைவர் தொக் பாத்தின். தொக் பாத்தின் தோட்ட வேலைகளையும், பள்ளிகளின் கட்டமைப்பையும் கண்காணிப்பார். தொக் பாத்தின் ஜஹாய் சமூக பிரச்சனைகளான மது, திருட்டு போன்றவற்றிற்கு தீர்வு சொல்லும் பொறுப்புடையவர்.

சமூகம்

ஜஹாய் பழங்குடி சமூகத்தின் பெண்கள் தாயாக, மனைவியாக குழந்தைகளின் பராமரிப்பாளராக இருப்பர். ஜஹாய் ஆண்கள் குடும்பத் தலைவர்களாக, தந்தைகளாக, கணவர்களாக, குடும்பத்திற்காக உணவு தேடுபவர்களாக விளங்குகின்றனர். ஜஹாய் ஆண்கள் அரிதாகவே குழந்தைகளைப் பராமரிப்பர். ஜஹாய் சமூகத்தில் பாகப்பிரிவினை இருபாலருக்கும் உரியது.

நம்பிக்கைகள்

ஜஹாய் பழங்குடியினர் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுபவர்கள். இவர்களைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களுக்கும் ஆவிகள் இருப்பதாக நம்புகின்றனர். இந்த ஆவிகள் ஜஹாய் மக்களின் வாழ்கையைப் பாதிக்கலாம் என நம்புகின்றனர். ஜஹய் மக்கள் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான நல்லிணக்கமே மனித செழிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமென நினைக்கின்றனர்.

‘காரேய்’

காரேய் என்பது ஜஹாய் பழங்குடியினர் நம்பும் ஒர் ஆவி. இந்த ஆவி பூமியில் புலியின் வடிவத்தில் அவதரித்துள்ளதாக நம்புகின்றனர். ஜஹாய் பழங்குடியினர் காரேய் தங்களைக் கண்காணிக்குமென நம்புகின்றனர். ஜஹாய் பழங்குடிகள் காரேயைத் தவிர்க்க சுட்ட அல்லது உலர்ந்த நண்டின் வாடையைப் பயன்படுத்துவர். ஜாஹாய் மொழியில் நறுமணங்களுக்கும் நாற்றங்களுக்கும் தனி சொல்லாடல்கள் உள்ளன.

விலக்குகள்

ஜஹாய் பழங்குடியினரின் மூதாதையர்களின் வழிகாட்டல்கள், நெறிமுறைகள், நாட்டுப்புற வாழ்க்கை முறையின் மூலம் விலக்குகளை அறிந்து பின்பற்றி வருகின்றனர். இந்த விலக்குகளே பின்னர், ஜஹாய் பழங்குடியின் ஆளுமையையும் சமூக வாழ்க்கையையும் கட்டமைத்தது.

பொதுவான விலக்குகள்

ஜஹாய் மக்கள் பொழுது சாயும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற கூடாது. இதனால் ஜஹாய் மக்களின் வாழ்க்கையில் ஆவிகளின் குறுக்கீடு இருக்காது.

கர்ப்பிணி பெண்களுக்கான விலக்குகள்

ஜஹாய் கர்ப்பிணிப் பெண்கள் பொழுது சாயும் நேரத்தில் ஆற்றங்கரைக்குச் செல்ல கூடாது; காடுகளுக்கு செல்லவே கூடாது. இதனால் ஆவிகள் கர்ப்பிணி பெண்களைத் தொந்தரவு செய்யாது என நம்புகின்றனர். ஜஹாய் கர்ப்பிணி பெண்கள் குரங்கு இறைச்சியும், பன்றி இறைச்சியும் சாப்பிடக் கூடாது. இந்த இறைச்சிகளைச் சாப்பிட்டால், கருவில் இருக்கும் குழந்தையின் உடல் வெப்பமானதாக மாறும் என் நம்புகின்றனர். ஜஹாய் கர்ப்பிணிப் பெண்கள் வெகுதொலைவு நடக்க கூடாது.

குழந்தைகளுக்கான விலக்குகள்

குழந்தை பிறந்து ஆறு மாதங்களான பின், விருந்தும் சேவாங் சடங்கும் நடைபெறும். சேவாங் சடங்கு குழந்தைகளை ஆவிகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் செய்வதாகும். நான்கு வயதுக்கும் கீழான ஜஹாய் சிறுவர்கள் குரங்கு இறைச்சியும், பன்றி இறைச்சியும் சாப்பிடக் கூடாது. இதனால், கடும் காய்ச்சலைத் தவிர்க்கலாம் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

காடுகளில் விலக்குகள்

ஜஹாய் பழங்குடியினர் காடுகளில் இருக்கும்போது, கெட்ட எண்ணத்துடன் எதுவும் பேசவோ, எதையும் புகார் செய்யவோ கூடாது. காடுக்குள் நுழைவதற்கு முன் திட்டமிட்டவற்றை மட்டுமே காட்டில் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒருவர் காட்டில் தேன் தேடிச் சென்றால் தேனை மட்டுமே சேகரித்து வர வேண்டும்.

மேலும் இம்மக்கள் காட்டில் இருக்கும் பெரிய மரங்களை வெட்டக் கூடாது. காடுகளில் உள்ள முதிர்ந்த விளைபொருட்களை மட்டுமே சேகரிக்க வேண்டும் எனும் கட்டுப்பாடுகளைக் கொண்டவர்கள்.

புத்தகம்

  • Daftar Kata: Bahasa Melayu – Bahasa Orang Asli (BM - BOA) Siri 1 Dwibahasa Melayu/Negrito (Bateq/Jahai/Kensiu/Kentaq/Lanoh/Mendriq) (Mohd Sharifudin Yusop, Jabatan Kemajuan Orang Asli, 2011)
  • Traditional Knowledge of Jahai Tribeat Kampung Semelor, Gerik, Perak (Soijah Likin, Nazarudin Zainun and Faridah Binti Jaafar, USM)

உசாத்துணை

தாசிக் தெமெங்கோரில் ஜஹாய் மக்கள்

Jahai: A world of smells


✅Finalised Page