under review

ஜப்பானியர் ‘லாக்கப்பில்’ ஏழு தினங்கள்

From Tamil Wiki
நூல் அட்டை

ஜப்பானியர் ‘லாக்கப்பில்’ ஏழு தினங்கள் (1946 ) மலாயாவில் இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் எழுத்தாளர் சி. வீ. குப்புசாமி ஜப்பானிய இராணுவத்தால் சிறையினுள் அடைக்கப்பட்ட நேரடி அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளார். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் இருண்ட காலம் என ஆய்வாளர்களால் வரையறை செய்யப்பட்ட இந்தக் காலக்கட்டத்தில் இவரின் படைப்பு மலேசிய தமிழ் இலக்கியத்திற்குப் புத்துணர்ச்சியளிக்கும் நூலாக அமைந்தது.

நூல் உருவான பின்னணி

புதுமலர்ச்சி பிரசுராலயம் 1946-ல் சி. வீ. குப்புசாமியிடம் அவரது ஜப்பானிய காவல் முகாமில் இருந்த சம்பவங்களை ஆவணப்படுத்த கோரியிருந்தனர். அதற்கிணங்க, ஜப்பானிய கடுங்கோல் ஆட்சிக்கு நிதர்சன பதிவாக சி.வி. குப்புசாமியின் சிறை - சித்திரவதை அனுப கட்டுரை நூலாக எழுதியுள்ளார்.

உள்ளடக்கம்

இந்த நூல் மொத்தம் 10 பாகங்களைக் கொண்டது. முதல் எட்டு பாகம் சிறை அனுபவங்களையும் இறுதி இரண்டு பாகம் ஜப்பானிய திமிராட்சியையும் சிறைபட்ட காரணத்தையும் துல்லியமான விவரணைகளுடன் பதிவு செய்துள்ளது.

இரகசிய போலீசின் லட்சணமும் தடியடி தர்பாரும் - 25.2.1943

வியாழக்கிழமை பிற்பகலில், காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சி.வீ. குப்புசாமியிடம் பத்திரிகையைப் பற்றி பேச வேண்டுமென இரு ஜப்பானியர்கள் அவரைச் சந்தித்தனர். ஜப்பானியருக்கு விரோதமாக ஏதும் எழுதியுள்ளாரா என்ற தீவிர விசாரணை செய்தனர்; அடித்தனர்.

'லாக்கப்’ - 25.2.1943

சி. வீ. குப்புசாமி, சிறையினுள் இருக்கும் மற்ற கைதிகளைப் பார்த்து, அணுகி அவர்களின் சிறையினுள் அடைக்கப்பட்ட காரணங்களையும் அடைக்கப்பட்டிருக்கும் காலத்தையும் அவர்கள் பட்ட துன்பங்களையும் கேட்டு அறிந்துக்கொண்டார். மேலும் அங்குள்ள உணவு பழக்கத்தையும் விரிவாக பதிவு செய்துள்ளார். குப்புசாமி எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தார்.

இரண்டாம் நாள் - 26.2.1943

ஜப்பானிய சிப்பாய்கள், கைதிகளிடம் உணவு கொடுக்கும் முறையும் உணவின் புலனனுபவமும், கைதிகளின் பசிப்பிணியும் இப்பகுதியில் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது நாளும் சி. வீ. குப்புசாமி உணவுண்ணாமல் பிடிவாதமாக இருப்பது பதிவாகியுள்ளது.

மூன்றாம் நாள் - 27.2.1943

ஜப்பானியர்களுக்கு எதிராக அவதூறு எழுதியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதை அறிந்தார். குற்றத்தை அவர் மறுக்கவும் கசையடி, மின்சார சக்தியைப் பிடிக்க செய்வதும், வாய் வழியாக தண்ணீர்க் குழாயிலிருந்து வயிற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது என வதை பட்டார். அன்றும் உணவை உட்கொள்ளாமல் பட்டினியாக உறங்கினார்.

நான்காம் நாள் - 28.2.1943

சி. வீ. குப்புசாமி பிரிட்டிஷ் உளவாளி என்றும், ஜப்பானியருக்கு எதிராக வதந்திகளைக் கிளப்புவர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டார். அவர் அத்தனையும் பொய், தான் எழுதியதை ஜப்பானிய தணிக்கையாளர்களால் கவனிக்கப்பட்ட பின்னரே பிரசூரமாகிறதென வாதிட்டார். பிரம்படிகளும், குத்துகளும், மின்சாரக் கம்பிகளில் தொங்கவிடுவதுமென ஜப்பானியர்கள் சி. வீ. குப்புசாமியின் மேல் வன்முறையைப் பிரயோகித்தனர். தனது உண்மையை நிலைபடுத்து அன்றும் பட்டினி கிடந்தார்.

ஐந்தாம் நாள் - 1.3.1943

அன்றைய விசாரணையில் இராணுவம் தங்கள் பக்கம் சாட்சி இருப்பதாகக் கூறியது. அந்தச் சாட்சி ஒரு வகுப்புவாத போர்வையைப் போர்த்திக் கொண்டு வம்பு செய்யும், ஏழைகளின் பணத்தை சுரண்டும், பின் ஜப்பானிய இராணுவ காவலுக்கு [எம்.பி] உளவு சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர் என அறிந்தார். அவருக்கும் சி.வீ.குப்புசாமிக்கும் அரசியல் கருத்து வேறுபாடு உள்ளதையும் குறிப்பிட்டார்.

ஆறாம் நாள் - 2.3.1943

விசாரணையை நயமாகத் தொடங்கிய ஜப்பானியர்கள் பின்னர் வன்முறையைப் பிரயோகிக்கித்தனர். ஒரு கடிதத்தில் ஆசிரியரின் பெருவிரல் குறியைப் பெற்றுக்கொண்டனர். அன்றைய நாளின் தண்டனைகள் மற்ற நாட்களை விட கொடுரமாக இருந்ததாகக் குப்புசாமி பதிவு செய்துள்ளார்.

ஏழாம் நாள் - 3.3.1943

சி. வீ. குப்புசாமி குற்றவாளி அல்ல என நிரூபணம் ஆகிறது. அவர் விடுவிக்கப்படுகிறார். நடந்த தவறுக்கு ஜப்பானிய இராணுவம் மன்னிப்புக் கேட்கிறது.

சிறைப்பட்டதன் காரணமும் விடுதலையும்

சி. வீ. குப்புசாமி

ஆசிரியர் கைது செய்யப்பட்டது, ஜப்பானியர் ஆட்சி மலாயாவில் சரிந்துக்கொண்டிருந்த காலம். சாமானிய மக்கள் ஜப்பானியரின் திமிராட்சியை நன்கு உணர்ந்து அவர்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திய காலம். பலர் ஜப்பானியரிகளின் ஒற்றர்களாக செயல்பட்ட காலம். அப்படி ஒரு ஒற்றனின் பொய்யால் சி.வீ.குப்புசாமி கைது செய்யப்பட்டார்.

இலக்கிய மதிப்பீடு

இந்நூல் சுய அனுபவமாக இருந்தாலும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களின் கோர முகத்தைக் காட்டும் ஆவணமாகத் திகழ்கிறது. ஜப்பானிய சிறை தண்டனைகளான சவர்க்கார தண்ணீரை கொடுத்து 'உண்மையை’ வரவழைக்கும் விசாரணை, மின்கம்பி பிடிக்கும் விசாரணை, சிறையினுள் மனித தன்மையின்றி நடந்துக்கொள்ளும் விதம், தலைகளைச் சீவி நடு வீதியில் வைக்கும் கொடூரம் என பலவற்றை சி. வீ. குப்புசாமி தன் நேரடி அனுபவத்தில் நுணுக்கமாகச் சித்தரித்துள்ளார். எனவே, இது நாவல் கொடுக்கும் அனுபவத்திற்கு நெருக்கமாக உள்ளது.

உசாத்துணை