under review

செல்லன் கூட்டம்

From Tamil Wiki

செல்லன் கூட்டம் (செல்லன் குலம் ) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிக்குள் உள்ள உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று. செல்லன் என்பது பழைய பெயர்களில் ஒன்று.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு

கொங்குநாட்டில் அனுமன்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லன். அனுமதை என்றும் அனும நகர் என்றும் செல்லன் குலக் காணிப் பாடலில் கூறியிருப்பதை வைத்து அனுமன்பள்ளியே (அனுமதை) செல்லன் பிறந்த ஊர் என்று அறியப்படுகிறது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் இருப்புலி என்ற ஊரில் செல்லன் குலத்தை சேர்ந்த இளையாக் கவுண்டருக்கு ஏழு ஆண்மக்கள் பிறந்தனர்.அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் வெவ்வேறு ஊர்களில் குடியேறினர். இருப்புலியில் ஒருவர் தங்கிவிட்டார் .மற்றவர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையார், கோக்கலை, அனுமன்பள்ளி, எழுமாத்தூர், நஞ்சை இடையாறு ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஏழு பேரும் எழுகரைச் செல்லன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

செல்லன் குலத்தாரின் ஊர்களும் குலதெய்வங்களும் பின்வருமாறு:

  • அருள்மிகு அழகுநாச்சியம்மன் – பருத்திப்பள்ளி
  • அருள்மிகு அத்தாயியம்மன் – இருப்புலி
  • அருள்மிகு பெரிய அம்மன், சின்ன அம்மன் – அனுமன்பள்ளி
  • அருள்மிகு செல்லியம்மன் – கொன்னையாறு
  • அருள்மிகு கொன்காளியம்மன் - கோக்கலை
  • அருள்மிகு ராஜா சுவாமி, அருள்மிகு ராசாயி அம்மன் – நஞ்சை இடையார்
  • அருள்மிகு பொன்காளியம்மன் – எழுமாத்தூர்

பூந்துறை இணை நாடான பருத்திப்பள்ளி நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் செல்லன் குலத்தினர். ஆகவே `பருத்திப் பள்ளி நாடர்; என்ற பட்டம் பெற்றவர்கள் . ராசிபுரம் , திருச்செங்கோடு சாலையில் வையப்பமலையில் இருந்து எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில் திருமணி முத்து ஆற்றங்கரையில் பருத்திப்பள்ளி உள்ளது .

செல்லன் கூட்டத்தினர் திருச்செங்கோட்டில் மடமும், மண்டபமும் கட்டினர். 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தாராபுரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்கியதனால் கிருஷ்ணதேவராயர் இவர்களுக்கு முதலிக்காமிண்டன் பட்டமும் , பருத்திப்பள்ளி ஆட்சி அதிகாரத்தையும் நல்கினார் என இருப்பள்ளிப் பள்ளு கூறுகிறது . காளிப்பட்டி நந்தர் கோட்டத்தைக் கட்டியவர்கள் செல்லங்குலத்தார். காங்கேய நாட்டு வள்ளரை இவர்களின் இரண்டாம் காணி.

நல்லம்மாள் தொன்மம்

நல்லம்மாள் என்னும் பெண்ணின் சாபம் இக்குலத்துக்கு உண்டு என்றும் ஆகவே பெண்களுக்கு நல்லம்மாள் என்று பெயர் சூட்டுவதாகவும் ஒரு தொன்மம் உண்டு .(பார்க்க நல்லம்மாள்)

உசாத்துணை


✅Finalised Page