under review

சி. தாமோதரம்பிள்ளை

From Tamil Wiki

To read the article in English: C. Thamotharam Pillai. ‎

சி. தாமோதரம்பிள்ளை (1863-1921) ஈழத்து தமிழ் சைவ அறிஞர், ஆசிரியர், சைவ மத சொற்பொழிவாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சி. தாமோதரம்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் சின்னத்தம்பியார்-அன்னம்மையார் இணையருக்கு 1863-ல் பிறந்தார். ஐந்தாம் வயதில் சைவப்பிரகாச வித்தியா சாலையில் ஆறுமுக நாவலரால் ஏடு தொடங்கப்பட்டது. செந்திநாதையர், இளையதம்பி உபாத்தியாயர் ஆகியோரிடம் நன்னூல், திருக்குறள், அந்தாதிகள், திருக்கோவையார், யாப்பருங்கலக்காரிகை முதலான பல நூல்களை முறையாகக் கற்றார். வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் வாரந்தோறும் நடைபெற்றுவந்த சைவப் பிரசங்கங்களைக் கேட்டு வளர்ந்தார்.

ஆசிரியப்பணி

சி. தாமோதரம்பிள்ளை 1879-ல் குடும்பத்துடன் சிதம்பரத்தில் தங்கினார். சிதம்பரத்தில் ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிதம்பரத்திற்கு அருகிலுள்ள உடையூர்க் கிராமத்தில் சொந்தமாக ஒரு பாடசாலையை நிறுவி நடத்தினார்.

ஆன்மிக வாழ்க்கை

சி. தாமோதரம்பிள்ளை சென்னையில் நடத்தப்பட்டு வந்த ஶ்ரீநிவாச சாஸ்திரியாரைத் துணைத்தலைவராகக் கொண்ட "இந்துலகுலேக சங்கம்" (இந்து டிகாக்ட் சொசைட்டி) சைவசமயத்தினை வளர்ப்பதற்கும் கிறிஸ்துவ சமயம் பரவாதபடி தடுப்பதற்கும் நடத்திவந்த பணிகளில் ஈடுபாடு கொண்டார். அச்சங்கத்தின் சார்பில் சென்னை தொடங்கித் திருநெல்வேலி வரையுள்ள ஊர்கள் எல்லாவற்றுக்கும் சென்று சமயப் பிரசங்கங்கள் செய்தார். தேவகோட்டையில் தங்கியிருந்து செட்டிமார்களுக்குச் சிவஞானபோதம் முதலிய நூல்களைப் பாடம் சொன்னார். நீண்ட காலத்தின் பின் இலங்கைக்குத் திரும்பினார். கொழும்பில் தங்கியிருந்து சைவப்பணி ஆற்றினார். கொழும்பு விவேகானந்த சபையின் பிரசாரகராக இருந்து சைவ சமய விரிவுரைகள் செய்தார். இங்கு தங்கியிருந்துகொண்டு காலி, கண்டி, குருநாகல் முதலிய இடங்களுக்கும் சென்று விரிவுரைகள் ஆற்றினார். பின்னர் யாழ்பாணத்துக்குச் சென்று கரவெட்டி வதிரி என்னும் ஊரில் சைவ விரிவுரைகள் நிகழ்த்தினார். அங்கு குழந்தைகள் கல்வி பயில சைவ ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். அப்பாடசாலை இன்று விக்கினேசுவரக் கல்லூரியாக உள்ளது.

இதழியல்

சென்னையில் சபாபதி நாவலர் நிறுவி நடத்தி வந்த சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலையில் அவர் பிரசுரித்து வந்த “ஞானமிர்தம்" என்னும் பத்திரிகைக்கு சி. தாமோதரம்பிள்ளை ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்தார். அக்காலத்தில் சமய ஆக்கம் கருதி ’விஜயத் துவஜம்’ என்னும் பத்திரிகை ஒன்றை நடத்தினார். இந்தப் பத்திரிகை பாளையங்கோட்டையில் அ. சங்கரலிங்கம் பிள்ளை அளித்த நிதியுதவி கொண்டு நடத்தப்பட்டது. சைவசமய ஆக்கங்கருதி “ஞானசித்தி" என்னும் பெயருடன் ஒரு மாத வெளியீட்டினை நடத்தி வந்தார். இவ்வெளியீடு சி. தாமோதரம்பிள்ளை காலமானபின் அவரது தம்பி சி. நாகலிங்கபிள்ளை அவர்களால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வந்தது.

இலக்கிய வாழ்க்கை

சி. தாமோதரம்பிள்ளை சைவம் சார்ந்த பல நூல்களை எழுதினார்.

மறைவு

சி. தாமோதரம்பிள்ளை 1921-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • சந்தியாவந்தன ரகசியம்
  • சைவசிரார்த்த ரகசியம்
  • சிவஞான சித்தியார் உரை
  • கதிர்காம புராண வசனம்
  • சைவசித்தாந்த சாரமான மரபு
  • கடம்பவனம் இரத்தினாசலம்
  • மரகதாசலம்
  • தல மான்மியங்கள் (1881)

உசாத்துணை


✅Finalised Page