under review

சித்தாமூர் சமணக் கோயில்கள்

From Tamil Wiki
பார்சுவநாதர் கோயில் பொதுத்தோற்றம்

சித்தாமூர் கோயில்கள் (மலை நாதர், பார்சுவநாதர்) (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமைந்த சமணக் கோயில். தமிழகத்தில் வாழும் திகம்பரப் பிரிவு சமணர்களுக்குத் தலைமைப்பீடமாகிய மடத்தினையும், மலைநாதர் கோயில், பார்சுவநாதர் கோயில் என இரு கோயில்களைக் கொண்டது.

இடம்

செஞ்சியிலிருந்து பத்து கிலோமீட்டர் கிழக்கில் மேல் சித்தாமூர் கிராமம் உள்ளது. இங்கு மலைநாதர் கோயில், பார்சுவநாதர் கோயில் என இரண்டு கோயில்களும், சமண மடமும் உள்ளது.

வரலாறு

மலைநாதர் கோயில் பொ.யு. 9-ம் நூற்றாண்டிலும், பார்சுவநாதர் கோயில் பொ.யு. 12-ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டது.

சித்தமூர் கோயில் தூண்கள்

கல்வெட்டுக்கள்

கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன. மலைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது, பொ.யு. 888-ல் பொறிக்கப்பட்ட முதலாம் ஆதித்தச் சோழனுடைய கல்வெட்டு. பார்சுவநாதர் கோயிலில் நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட தமிழ், கன்னட வரிவடிவக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மலைநாதர் கோயில்

மலை நாதர் கோயில் கருவறை, முகமண்டபம் அதற்கு மேற்கில் மற்றொரு மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது. இவற்றைச் சுற்றித் திருமதிலும், அதன்கிழக்குப் பகுதியில் கோபுரமும் உள்ளது. கருவறையில் இயற்கையாக உள்ள பாறையின் முகப்பில் பார்சுவநாதர், பாகுபலி, நேமிநாதர், ஆதிநாதர் ஆகிய நான்கு தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பாறைச் சிற்பத்தொகுதியை உள்ளடக்கியவாறு பிற்காலத்தில் கருவறை, மண்டபம் முதலியவை தோற்றுவிக்கப்பட்டது. பொ.யு. 12-ம் நூற்றாண்டில் இதற்கு அடுத்தாற்போன்று பார்சுவநாதர் கோயில் தனியாகக் கட்டப்பட்டதிலிருந்து அக்கோயில் அதிக முக்கியத்துவம் பெறலாயிற்று. பொ.யு. 19-ம் நூற்றாண்டில் மலைநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்டு தற்போதைய கட்டட அமைப்புகளைக் கொண்டு விளங்குகிறது.

சித்தாமூர் தீர்த்தங்கரர்

கல்வெட்டுச் செய்திகள்

மலைநாதர் கோயிலில் காலத்தால் முந்திய சாசனம் முதலாவது ஆதித்தசோழனின் பதினேழாவது ஆட்சியாண்டினைச் (பொ.யு. 888) சார்ந்தது.

  • இதில் காட்டாம் பள்ளியாகிய இக்கோயிலிலுள்ள ஓத்துரைக்கும் மண்டபத்தில் தினமும் விளக்கொன்று இடுவதற்காகச் சோழமண்டலத்தைச் சார்ந்த தென் கரைக்குளமங்கல நாட்டுப்பிரிவிலுள்ள புத்தாம்பூரில் வாழ்ந்த மதியன் அறிந்திகை தானம் வழங்கியுள்ளார். கல்வெட்டு கூறும் ஓத்துரைக்கும் மண்டபம் சமண சமயக் கோட்பாடுகளையும், அறவுரைகளையும் உரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த தானம் ஏதோ ஒரு காரணத்தினால் தடைபெற்றமையால், முதலாம் ஆதித்தசோழனது மனைவியாகிய காடவர் கோன்பாவை அதனை மீண்டும் ஏற்பாடு செய்திருக்கும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
சித்தாமூர் கோமதீஸ்வரர்

பார்சுவநாதர் கோயில்

சிங்கபுரி பார்சுவநாதர் கோயில் கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம், நேமிநாதர் கருவறை, தருமதேவி கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டது. வடபுறத்தில் பிரம்மதேவர், கணதரர், சரஸ்வதி, பத்மாவதி, சுவாலமாலினி ஆகியோருக்கு சிறிய கருவறைகள் உள்ளது. நேமிநாதர் கருவறையை ஒட்டி சித்திரகூடமண்டபமும், அதனையடுத்து அலங்கார மண்டபமும் உள்ளது. மானஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை கிழக்குப்பகுதியில் உள்ளது. இவையனைத்தையும் சுற்றி திருச்சுற்று மதிலும், அதன் கிழக்குப்புறத்தில் கோபுரமும் உள்ளன.

தற்போதுள்ள இக்கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவை பொ.யு. 16-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. எஞ்சியவை அனைத்தும் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தேர்வடிவ மண்டபத்திற்கு சற்று தொலைவில் தேர்முட்டி மண்டபம் உள்ளது. சித்தாமூரில் நடைபெறும் தேர்த்திருவிழாவின்போது தீர்த்தங்கரர் திருவுருவங்களைத் தேரினில் நிறுவுவதற்கேற்ற வகையில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மூலவராகிய பார்சுவ நாதர், தனிக்கருவறையில் இடம் பெற்றுள்ள நேமிநாதர், சித்திரமண்டபத்தை ஒட்டி நிறுவப்பட்டுள்ள பாகுபலி ஆகிய சிலைகள் உள்ளன. கருவறையில் மூலவராகத் திகழும் பார்சுவ தேவர் சிற்பம் ஏறத்தாழ பத்து அடி உயரத்தில், அலங்காரபிரபையின் நடுவே அமர்ந்த கோலத்தில் உள்ளது. பிரபையில் 23 மூன்று தீர்த்தங்கரரின் சிற்றுருவங்களும், அடிப்பகுதியில் தரணேந்திர யக்ஷன், பத்மாவதி யக்ஷி ஆகியோரது சிற்பங்களும் உள்ளன.

மேல்சித்தாமூர் தீர்த்தங்கரர்

கல்வெட்டுச் செய்திகள்

பார்சுவநாதர் கோயிலுக்குச் சோழர் ஆட்சியிலும், விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாகிய நாயக்கர்கள் ஆட்சியிலும் தானங்கள் வழங்கப்பட்டுள்ளது.

  • சோழ அரசர்களுள் விக்கிரம சோழனாட்சியில் (பொ.யு. 1136) நெமிலி, கொள்ளாறு, வீரணாமூர், விழுக்கம், அருகாவூர், தொண்டூர், விடால், நெற்குணம், சோமாசி, வலத்தி, மலையனூர், வல்லம், அத்திப்பாக்கம், தாயனூர், எய்யில் முதலிய பல்வேறு ஊர்களில் இக்கோயிலுக்குப் பள்ளிச்சந்த நிலங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
  • இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (பொ.யு. 1148) சித்தாமூர் சர்வமானியமாக சிங்கபுரி நாதர் கோயிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் இராசாதிராசசோழனுக்குட்பட்டு ஆட்சி செய்த செங்கேணி சம்புவராயனும் நிலங்களைத் தானமாகக் கொடுத்துள்ளார்.
  • விஜயநகர மன்னனான விஷ்ணுதேவராயர் (கிருஷ்ணதேவராயர்) ஆட்சியின் போது சிங்கபுரிநாதர் கோயில் வழிபாட்டுச் செலவிற்காகவும், திருவிழாச்செலவிற்காகவும் சித்தாமூர் குளத்திற்கு கிழக்கிலுள்ள 91 குழிபரப்புடைய நிலமும், மலையனார் (மலை நாதர்) கோயில் வழி பாட்டுச் செலவிற்கான 30 குழி நிலமும் பள்ளிச்சந்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பொ.யு. 16-ம் நூற்றாண்டில் அச்சுதப்ப நாயக்கர், வேங்கடபதி தேவராயர் முதலிய பிரதிநிதிகள் செஞ்சியைந் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தபோதும் இக்கோயில் பல்வேறு வகையான தானங்களை பெற்றுள்ளது.

இக்கோயிலின் கோபுரம் பொ.யு. 1869-ம் ஆண்டு அப்போதைய மடாதிபதிகளாகிய அபிநவ ஆதிசேனபட்டார் பொதுமக்களிடமிருந்து பெற்ற பணத்தினால் கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள பல சாசனங்கள் இக்கோயில் நெடுங்காலமாக நல்ல நிலையிலிருந்ததையும், பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் பெற்றதையும் கூறுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page