சாத்தூர் கந்தசாமி முதலியார்
- கந்தசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்தசாமி (பெயர் பட்டியல்)
- சாத்தூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாத்தூர் (பெயர் பட்டியல்)
கந்தசாமி முதலியார் (சாத்தூர் கந்தசாமி முதலியார், தூ.சு.கந்தசாமி முதலியார். டி.எஸ்.கந்தசாமி முதலியார்) (ஏப்ரல் 14, 1892 - ஜூன் 27, 1954) திருக்குறள் ஆராய்ச்சியாளர், சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளார்
பிறப்பு, கல்வி
தூ.சு.கந்தசாமி முதலியார் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாத்தூருக்கு அருகில் தூங்காரெட்டிப்பட்டி என்னும் ஊரில் ஏப்ரல் 14, 1892 அன்று சுப்ரமணிய முதலியார்-சுப்பம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இவர் தன்னுடைய ஊரில் இருந்த திண்ணைப்பள்ளியில் சில காலம் படித்தார். பின் திருமங்கலம் போர்டு பள்ளியிலும், சாத்தூர் ஏ.வி. பாடசாலையிலும் சில காலம் கல்வி கற்றார். இதன்பின் இவர் மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளி, பசுமலை அமெரிக்கன் கல்லூரி மற்றும் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியிலும் கல்வி கற்று 1917-ம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றார். இவருக்கு நல்ல குற்றாலலிங்கம் பிள்ளை, சோமசுந்தர பாரதி மற்றும் ந.மு வேங்கடசாமி நாட்டார் முதலியோர் தமிழாசிரியராக இருந்தனர்.
கல்விப்பணி
கந்தசாமி முதலியார் 1917-1918 ஆண்டுகளில் சிவகாசி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். பின் 1919-ம் ஆண்டு சட்டப்படிப்பில் வெற்றிப்பெற்று சாத்தூரில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக் குழுவின் பார்வையாளராகப் பணியாற்றினார்
வேங்கடசாமி நாட்டாருடன் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தார். அவர் சொற்பொழிவாற்றும் இடங்களுக்குச் சென்று, பார்த்து தன் சொற்பொழிவாற்றும் ஆற்றலை வளர்த்துகொண்டார். மேலும் சில வேலைகளில் வேங்கடசாமி அவர்கள் தாம் செல்லமுடியாத வகுப்புகளுக்கு கந்தசாமி முதலியாரை பாடம் எடுக்க அனுப்புவார் என்று சொல்லப்படுகிறது. கல்லூரியில் படிக்கும்போது சில செய்யுள்களை இயற்றி அவற்றிற்காக பரிசுகளும் பெற்றுள்ளார்.
இலக்கியவாழ்க்கை
திருக்குறளைப் பற்றி பல உரை நூல்களை கற்று நல்ல தேர்ச்சி அடைந்திருந்தார்.சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம் வெளியிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு இவர் எழுதிய முன்னுரை இவருடைய திருக்குறள் ஆராய்ச்சி பற்றி அனைவரும் அறிய வழிவகுத்தது.இவருடைய சொற்பொழிவுகள், உரையாடல்கள் மற்றும் கட்டுரைகள், சைவசித்தாந்தக் கருத்துகளையும், திருக்குறளில் உள்ள கருத்துகளையும் கொண்டிருந்தன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
தூ.சு.கந்தசாமி முதலியார் சில காலம் நீதிக்கட்சியில் சேர்ந்து பொதுவாழ்வில் ஈடுபட்டு பின் அதிலிருந்து வெளிவந்து விடுதலைப் போராட்டத்திலும், சாதி ஒழிப்பிலும் ஈடுபட்டார்.கூட்டுறவு பொருள்கூடம், வங்கி, சந்தைச் சங்கங்கள் நிறுவி உழைத்தார். சாத்தூர் நகராட்சித் தலைவராக இருமுறை சிறப்பாகச் செயல்பட்டார்
ஆன்மிகப்பணி
தூ,சு.கந்தசாமி முதலியார் திருப்பனந்தாள் மடத்தின் சார்பாக காசிப் பல்கலைகழகத்தில் ஒர் ஆண்டு காலம் சைவ சித்தாந்த விரிவுரையாளராக பணியாற்றினார்.
சென்னை சைவசித்தாந்த மகாசபையின் தலைவராக 1948 முதல் சில காலமும், தூத்துக்குடி சைவசித்தாந்த மகாசபையின் தலைவராக பலமுறையும் இருந்துள்ளார்.
தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கச்சார்பில் ஏப்ரல் 24, 1952 முதல் மே 20, 1952 வரை திருநெல்வேலி சிந்துபூந்துறை மடத்தில் நடந்த சிவஞானபோதச் சிற்றுரைச் சித்தாந்த வகுப்பை அறுபது மாணவர்களுக்கு நடத்தினார்.
மறைவு
இவர் சிலகாலம் நோய்மையில் இருந்து ஜூன் 27, 1954 அன்று மறைந்தார்.
இலக்கிய இடம்
தூ.சு.கந்தசாமி முதலியார் தமிழின் தொடக்ககால ஆய்வாளர்களில் ஒருவர். திருக்குறளை சைவநோக்கில் பொருள்கொள்ளும் முயற்சியில் அவருடைய பங்களிப்பும் உண்டு. சைவசித்தாந்த அறிஞராகவும் முக்கியமானவர்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:27 IST