under review

சந்தை காமிக்

From Tamil Wiki

சந்தையுடன் தொடர்புடைய நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால் இந்நிகழ்த்துக் கலை சந்தை காமிக் எனப்படுகிறது. இது கரகாட்டத்தின் துணை நிகழ்ச்சியாக மட்டுமே நிகழ்ந்தது. இந்நிகழ்ச்சி திருடன் கதை, நாலு பேர் ஆட்டம் என்ற பெயர்களிலும் வழங்கப்படுகிறது.

நடைபெறும் முறை

கரகாட்டக்காரர்களும், நையாண்டி மேளக் காரர்களும் ஓய்வெடுப்பதற்காக இடைநிகழ்ச்சியாக இந்த நாடகம் நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடகத்தில் இரண்டு விவசாயிகளும், இரண்டு திருடர்களும் பங்கு கொள்கின்றனர். விவசாயிகள் இருவரும் தலைப் பாகையுடனும், இடையில் வேட்டியுடனும் வருவர். திருடர்கள் உடம்பில் எண்ணெயும், கறுப்பு நிறமும் பூசியிருப்பர்.

இரண்டு விவசாயிகளும் பேசிக் கொண்டே நடப்பர். அந்த உரையாடலில் அவர்கள் சந்தைக்கு மாடு வாங்கச் செல்லும் செய்தி வெளிப்படும். மாட்டுச் சந்தையில் உள்ள ஏமாற்று, புரட்டு ஆகியவற்றை ஒரு விவசாயி விளக்கமாகச் சொல்வார். இவர்கள் பேசிக் கொண்டே செல்லும் போது, திருடர்கள் இருவரும் அவர்கள் பின்னால் பதுங்கிப் பதுங்கிச் செல்வர். விவசாயிகளின் பேச்சிலிருந்து அவர்கள் கையில் இருக்கும் பணம், வாங்க போகும் மாடு ஆகியவற்றைப் பற்றி அறிந்துக் கொள்வர்.

விவசாயிகள் மாடு வாங்கிக் கொண்டு திரும்பும் போது அவர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவர். அதன் பின் ஒன்றாக சேர்ந்து அவர்களை வழி மறிப்பார்கள். இதனிடையே மாடு தொடர்பான வர்ணனைப் பாடல்கள் பாடப்படும். இறுதியில் திருடர்கள் விவசாயிகளிடமிருந்து மாட்டைப் பறித்துக் கொண்டு செல்வார்கள்.

நான்கு பேரின் பாடல், உரையாடல் என இந்நிகழ்த்துக் கலை நகைச்சுவையுடன் அமைந்திருக்கும். இந்நிகழ்த்துக் கலை இன்று வழக்கில் இல்லை. இதனைப் பற்றிப் பல செய்திகளை கே.ஏ. குணசேகரன் தொகுத்துள்ளார். இவர் இக்கலை ராஜா ராணி ஆட்டத்தின் துணை ஆட்டமாக நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

நிகழ்த்துபவர்கள்

  • விவசாயி - இரண்டு பேர்
  • திருடர்கள் - இரண்டு பேர்

அலங்காரம்

விவசாயி நடிகர்கள் இரண்டு பேர் தலைப் பாகையுடனும், இடையில் வேட்டியுடனும் வருவர். திருடர்கள் உடம்பில் எண்ணெயும், கரும்பு நிறமும் பூசி வருவர்.

நிகழும் ஊர்கள்

இக்கலை மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் ஒரு நேர (காலை அல்லது மாலை) நிகழ்ச்சியாக நடைபெறும்.

நடைபெறும் இடம்

இக்கலை ஊரில் உள்ள நாட்டார் தெய்வக் கோவில் வளாகத்தில் விழாக்காலங்களில் நடைபெறும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்பு


✅Finalised Page