under review

சக்கையாட்டம்

From Tamil Wiki

To read the article in English: Chakkai Attam. ‎

சக்கையாட்டம் பயிற்சி

இந்நிகழ்த்துக் கலை நான்கு தேக்கு மரத்துண்டுகளை விரல்களுக்கிடையே வைத்துக் கொண்டு அடித்து, ஒலி எழுப்பியபடி ஆடும் ஆட்டம் என்பதால் சக்கையாட்டம் எனப்படுகிறது. சக்கை என்ற மரத்துண்டுகளை அடித்து ஆடுவதால் சக்கையாட்டம். இக்கலை சக்கை குச்சி ஆட்டம் என்றும் அழைக்கப்படும்.

நடைபெறும் முறை

சக்கையாட்டத்தில் ஆண் கலைஞர்கள் மட்டுமே பங்கு கொள்கின்றனர்.பின்னாளில் பெண்களும் இதில் பங்கு கொள்கின்றனர். இதில் 8 முதல் 12 கலைஞர்கள் இருப்பர். இந்த ஆட்டத்திற்குரிய இசைக்கருவியான சக்கை குச்சி தேக்கு மரத்தால் ஆனதாக இருக்கும். ஒரு ஆட்டக்காரர் நான்கு சக்கை குச்சிகளை வைத்திருப்பார். நூலால் பிணைக்கப்பட்டிருக்கும் சக்கை குச்சியை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு அடிப்பர்.

சக்கை குச்சியுடன் சேர்ந்து குந்தளம், ஜால்ராவும் இசைக்கப்படும். இந்நிகழ்த்துக் கலையில் பாடப்படும் பாடல்கள் புராணக்கதைகள் தொடர்புடையதாய் அமையும். சில கலைஞர்கள் தேசப் பக்திப் பாடல்களையும், நீதிப் பாடல்களையும் பாடுகின்றனர்.

எட்டு முதல் பன்னிரெண்டு கலைஞர்கள் கூடி வட்ட வடிவமாகவோ அல்லது இணைக் கோடாகவோ நின்று இதனை நிகழ்த்துவர். ஆட்டம் வட்ட வடிவில் இருந்தால் முதல் பாட்டுக்காரர் நடுவில் நின்று பாடுவார். அவர் தான் அந்த குழுவின் ஆசிரியர். இணை கோட்டு ஆட்டமாக இருந்தால் ஆசிரியர் முன்பகுதியில் நிற்பார். இவர் பாடலை முதலில் தொடங்கிய பின் மற்றவர்களும் தொடர்ந்து பாடி ஆடுவர்.

சக்கை குச்சி வடிவம்

ஒரு சக்கை 16 செண்டிமீட்டர் நீளமும், 2 செண்டிமீட்டர் அகலமும் கொண்டது. நான்கு சக்கை துண்டுகளையும் மெல்லிய நூலால் பிணைத்து கைவிரல்களுக்கிடையே வைத்துக் கொண்டு சக்கையை அடிப்பர்.

நிகழ்த்துபவர்கள்

இதனை ஆண் கலைஞர்கள் மட்டுமே நிகழ்த்துகின்றனர்.அண்மையில் பெண்களும் இதில் பங்கு கொள்கின்றனர்.

அலங்காரம்

ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். அரைக்கால் சட்டை, தோளில் சதுரமான துண்டு, தலையில் தலைப்பாகை, தோள் பட்டை நுனியில் குஞ்சம் என இவர்களின் ஆடை ஒப்பனை அமையும். இவை பெரும்பாலும் ஒரே வண்ணத்தில் அமையாமல் பல்வேறு வண்ணங்களில் அமையும் படி பார்த்துக் கொள்வர்.

நிகழும் ஊர்கள்

இந்த ஆட்டம் பாண்டிசேரி, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் அல்லது முருகன் கோவிலின் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. விழாக்களில் இடம்பெறும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இக்கலைக்கான நேரம் தீர்மானிக்கப்படுகிறது.

நடைபெறும் இடம்

இது மாரியம்மன் மற்றும் முருகன் கோவிலின் பெரிய அல்லது சிறிய விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இந்தக் கலை கோவிலின் முன்னால் உள்ள திடலில் நிகழ்த்தப்படும்.

உசாத்துணை

காணொளி


✅Finalised Page