under review

கோலாட்டம்

From Tamil Wiki
கோலாட்டம்

நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்திற்கும் இசைக்கும் ஏற்றவாறு தட்டி ஆடப்படுவது கோலாட்டம். கோலாட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் மிகவும் கோலாகலமாக நிகழும் நிகழ்த்துக் கலை ஆகும். இதனை 'வசந்த கால விளையாட்டு’ என்றும் கூறுவர். கோலாட்டம் ஆடும் பெண்களின் கைகளில் வைத்திருக்கும் இரண்டு கோல்களை ஒன்றுடன் ஒன்று மோதி ஒலியெழுப்பி ஆடுவர்.

நடைபெறும் முறை

கோல்களைக் கையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் அனைத்தும் கோலாட்டம் என்ற பொதுபெயரில் தமிழகத்தில் அழைக்கப்படுவதில்லை. கோல்களைக் கையில் வைத்து ஆடும் ஆட்டம் வேறு பலவும் தமிழகத்தில் உள்ளன. தெய்வமுற்று ஆடும் சாமியாடிகளுள் சிலர் கைகளில் பிரம்பினை வைத்துக் கொண்டு ஆடுவர். சிலம்பாட்டம், பொடிக்கழி ஆட்டம், கழியலாட்டம், வைந்தானை போன்ற ஆட்டங்களில் கோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் கோலாட்டம் என்னும் நிகழ்த்துக்கலை கைகளில் கோல்களைக் கொண்டு பெண்கள் மட்டும் ஆடும் குழு நடனமாகும்.

தமிழகத்தின் சில இடங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து கோலாட்டம் ஆடுகின்றனர். கோலாட்டத்திற்கென்று தனியாக பாடல்கள் உள்ளன. மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் பாடலின் முடிவில் துரிதகதியுடன் முடிவுறும். இக்குழுவினர் எல்லோரும் அடவு வைத்து ஆடுவதற்கு நன்கு பயிற்சி பெற்றிருப்பர். கண்ணன் பிறப்பன்று கோலாட்டம் ஆடுவது தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கமாக உள்ளது.

கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையான கோலாட்டங்கள் தமிழகத்தில் வழக்கில் உள்ளன. இவற்றை ஆட்ட வகைகள் எனச் சொல்வாரும் உண்டு.

அரசு விழாக்கள், கல்விக் கூட விழாக்கள் போன்ற பொதுநிகழ்ச்சியில் புதிதாகப் பாடல்கள் கட்டி சமூகப் பணியாளர்களும், மாணவர்களும் கோலாட்டம் நிகழ்த்துகின்றனர்.

புராணக் கதைகள்

கோலாட்டம்

கோலாட்டக் கலையோடு தொடர்புடைய சில புராணக் கதைகள் தமிழக மக்களிடையே வழக்கில் உள்ளன.

தேவர்களுக்கும் பந்தாசூரனுக்கும் இடையே கடும் போர் நடந்தது. தேவர்களின் வெற்றியை உறுதி செய்ய பார்வதிதேவி ஒன்பது நாள் கடும் தவமிருந்தாள். தவித்தின் கடுமையால் அவள் உடலில் ஏற்பட்ட வெப்பம் காரணமாகத் தேவியின் முகம் அழகிழந்து கருமை நிறமாகிவிட்டது. சிவ பெருமானால் கூட அந்தக் கருமை நிறத்தை மாற்ற இயலவில்லை. பார்வதிதேவியின் தோழிகள் வருத்தமுற்று நந்திதேவரின் அருள் வேண்டி அவர் முன் கோலாட்டம் ஆடினர். அவ்வாறு அவர்கள் ஆடும்போதே பார்வதியின் முகத்தில் உள்ள கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து முகம் பொலிவு பெற்றது.

கேரளத்தை ஒட்டிய தமிழ்நாட்டுப் பகுதியில் மார்கழி திருவாதிரை நாளில் கோலாட்டம் நிகழ்த்தப்படுகிறது. அதற்குரிய புராணக் கதை, "பார்வதிதேவி சிவபெருமான் திருமணம் செய்துக்கொள்ள உடலை வருத்திக் கடும் தவமிருந்தாள். அவளது தவத்தைக் கண்ட சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்தார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் உடைய நாளில் சிவன் தோன்றி வாக்களித்ததால் திருமணம் ஆகாத பெண்களும், திருமணம் ஆன பெண்களும் கூடி சமயச் சடங்காகக் கோலாட்டம் ஆடுகின்றனர்". "திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டுமென்றும், திருமணம் ஆன பெண்கள் வளமான வாழ்க்கை வேண்டுமென்றும் கோலாட்டம் ஆடுகின்றனர்" என இதனை நேரில் சென்று ஆய்வு செய்த முனைவர் அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

திருவாதிரை நாளில் கோலாட்டம் நடைபெறுவதற்கு வேறொரு கதையும் வழங்கப்படுகிறது, "பார்வதிதேவியின் மேல் சிவன் காதல் கொள்வதற்காக மன்மதன் தன் மலர் அம்புகளை சிவன் மீது தொடுத்தான். சினங்கொண்ட சிவன் மன்மதனை தன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார். மன்மதனின் மனைவி ரதி தன் கணவனின் பிரிவால் துயருற்றாள். ரதியின் துயரத்தைக் கண்ட பார்வதிதேவி அவள் மேல் இறக்கமுற்று, அவள் கணவன் விரைவில் திரும்பி வருவான் என்று அருள் வழங்கினாள். பார்வதி மார்கழி மாதம் திருவாதிரை நாளில் அருள் வழங்கியதால் அந்நாளின் கொண்டாட்டமாக கோலாட்டம் ஆடப்படுகிறது".

காணிக்காரர்களின் கோலாட்டம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள பொதிகை மலையின் மேற்குப்புறமும், கிழக்குப்புறமும், தென்புறமும் அமைந்த பகுதியில் காணிக்காரர்கள் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். குமரி மாவட்டத்திலும் கீரிப்பாறை, குலசேகரம் போன்ற பகுதியிலுள்ள மலைகளிலும் காணிக்காரர்கள் வாழ்கின்றனர்.

இக்காணிக்காரர்கள் ஒருவகையான கோலாட்ட நிகழ்ச்சியை நடத்துகின்றனர். ஓணப் பண்டிகை, கார்த்திகைக் கொடுதி (தங்களால் வணங்கப்படும் தெய்வங்களுக்கு விழா எடுப்பது) போன்ற காணிக்காரர் கொண்டாடும் விழாக்களிலும், திருமண நிகழ்வுகளிலும் கோலாட்டம் நிகழ்த்துவது இம்மக்களின் வழக்கம்.

முதலில் கேரளத்திலும், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாழும் காணிக்காரர்களிடம் மட்டுமே வழக்கில் இருந்த இக்கோலாட்டக் கலை பின்னாளில் பாபநாசம் மலைப்பகுதியிலும் பரவியது.

ஓணம் பண்டிகையின் போது கோலாட்டம் பெரிய அளவில் நிகழ்த்தப்படும். 'மூட்டுக்காணி’ (தலைவர்) விருப்பப்பட்டால் காணிக்காரர் குடியிருப்பின் பொதுவிடத்தில் கோலாட்டம் நிகழ்வதுமுண்டு. சில குடியிருப்புகளில் கிறித்துவக் குருமார்கள் மறைப்பணி செய்தபோது காணிக்காரர் மொழியில் பாடப்பட்ட கோலாட்டப் பாடல்கள் தமிழ்மொழியில் இயற்றப்பட்டன. கிறித்தவச் சமயப் பாடல்களும் கோலாட்டத்தின் போது பாடப்படுகின்றன.

பிற பகுதியில் உள்ள கோலாட்டக் கலைக்கு மாறாக இங்கே திருமணமாகாத ஆண்களால் மட்டுமே இக்கலை நிகழ்த்தப்படுகிறது. சில இடங்களில் சிறுமியரும், பெண்களும் நிகழ்த்துவதும் வழக்கில் உள்ளது. இங்கே ஒற்றைக் கம்பைக் கொண்டடிப்பது, இரண்டு கம்பு கொண்டு அடிப்பது என இரு வகையாகக் கோலாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒரு கம்பில் கயிறு கட்டிக் கொண்டு ஒவ்வொருவரும் குறிப்பிட்ட முறையில் ஆடிக் கயிற்றினைப் பின்னலாக்கிப் பின் அதனைப் பிரித்தெடுக்கும் ஆட்ட முறையையும் இவர்கள் நிகழ்த்திக் காட்டுகின்றனர்.

கொரண்டிக் கம்பு, கன்னங் கயிஞ்சிக் கம்பு, சீதவெற்றக் கம்பு ஆகியவற்றையே கோலாட்டத்திற்குரிய கம்புகளாகப் பயன்படுத்தி வந்தனர். இக்கம்புகள் பளபளப்பானவை; அடிக்கும் போது கணீரென ஒலியெழுப்புபவை. இக்கம்புகள் அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே கிட்டுகின்றன. இம்மக்கள் அடர்ந்த காட்டுப் பகுதியை விட்டு காடற்ற பகுதியில் குடியேறி விட்டதால் கையில் கிடைக்கும் ஏதேனும் கோலாட்டக் கம்பைக் கொண்டே கோலாட்டத்தை நிகழ்த்துகின்றனர்.

இதனைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் "ஆசான்" எனப்படுவார். கற்றுக் கொடுக்கும் ஆசான் இறந்தால் அவரது மாணவர்கள் அவருடைய பிண ஊர்வலத்தில் கோலாட்டத்தை நிகழ்த்திச் செல்வர். பிற சாதியினருடைய கோயில் விழாக்களிலும் காணிக்காரர்கள் கோலாட்டம் நிகழ்த்துவதுண்டு.

காணிக்காரர்கள் தாங்கள் பாடும் கோலாட்டப் பாடல்களில் தாங்கள் வாழ்ந்த அடர்ந்த காட்டின் செழிப்பு, தாவரங்கள், விலங்குகள், தாங்கள் வணங்கும் தெய்வங்கள் போன்றவற்றை இசையுடன் நிகழ்த்துவர்.

'உடுக்கை கட்டை’ என்ற கோலிசைக் கருவி கோலாட்டத்திற்குரிய பின்னணி இசைக்கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இது உடும்புத் தோலினால் செய்யப்படுவது. வனத்துறையின் கட்டுப்பாட்டினால் உடும்பு பிடிக்க இயலாததால் உடுக்கைக் கட்டை இசைக்கருவியும் செய்யப்படுவதில்லை. அதன் பின் செண்டை மேளம் காணிக்காரர்களின் கோலாட்டத்திற்கு பின்னணி இசைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

நிகழ்த்துபவர்கள்

இந்நிகழ்த்துக் கலையை பொதுவாக பெண்கள் கூடி குழு நடனமாக நிகழ்த்துகின்றனர். சில இடங்களில் ஆண்களும், பெண்களும் கூடி நிகழ்த்துவது உண்டு.

அலங்காரம்

இக்கலையில் பல வண்ணங்களால் ஆன கோல்களைப் பயன்படுத்துகின்றனர்.

நிகழும் ஊர்கள்

கோலாட்டம் தமிழக மக்களிடையே பிரபலமாக உள்ள நிகழ்த்துக் கலை ஆகும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்

காணொளி


✅Finalised Page