under review

குறத்திக்களி

From Tamil Wiki

To read the article in English: Kuraththikali. ‎

குறத்திக்களி

குறவன், குறத்தி இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடல், பாட்டு, ஆட்டம் கலந்த நிகழ்ச்சி குறத்திக்களி ஆகும். இந்நிகழ்த்துக் கலையில் குறத்தி முக்கிய கதாப்பாத்திரமாகையால் இது குறத்தி நிகழ்த்தும் களி என்ற அர்த்தத்தில் விளங்குகிறது. இந்தக் கலை தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் நிகழ்த்தப்படுகிறது.

நடைபெறும் முறை

குறத்திக்களி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு பகுதிகளில் உள்ள நாட்டார் தெய்வ கோவில்களிலும், பிற கோவில்களிலும் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பொழுதுபோக்கு நிகழ்வாக நடைபெறுகிறது.

இந்தக் கலைக்குரிய பாடல்கள் வாய்மொழி வடிவில் உள்ளன. குறவஞ்சி இலக்கியத்துடன் தொடர்புடையது இந்த குறத்திப் பாட்டு. குறத்தி வேடமணிந்திருக்கும் ஆண் மலையை விட்டு இறங்கி வருவதில் இருந்து கதை தொடங்கும். குறத்தி மலையை விட்டு சமவெளிக்கு வந்து ஜமீன்தாரைப் பார்க்கிறாள். ஜமீன் அவளின் மலை அனுபவத்தைக் கேட்கிறார். ஜமீன் கேட்டதற்கு இணங்க குறத்தி அவள் வாழும் மலை பற்றியும், அங்குள்ள வளம் பற்றியும் பாடுவாள். அவர்கள் வாழ்க்கை பற்றிய சுவையான தகவல்களைச் சொல்லிக் கொண்டே வருவாள்.

அவள் பாடி முடிக்கும் போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கையில் பந்தத்துடன் குறவன் வெளிப்படுவான். அவன் ஜமீன்தாரையும், குறத்தியையும் ஒரு சேர கண்டதும் சந்தேகப்படுகிறான். அதே நேரத்தில் குறத்தியை கண்டது மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த குறவன் பாடத் தொடங்குவான்.

அவன் வாழும் மலையைப் பற்றி பாடி முடித்ததும், ஜமீன் குறவனை பாம்பாட்டும் வித்தையைக் காட்டச் சொல்வார். அவன் மகுடியை எடுத்து வாசிப்பான். குறவன் வாசித்துக் கொண்டிருக்கும் போதே பாம்பு அவனைக் கொத்திவிடும். மண்ணில் சாய்ந்த குறவனை நோக்கி குறத்தி ஓடுவாள். அவன் வாயில் பச்சிலை மூலிகையைப் பிழிந்து அவள் விடுவாள். குறத்தி கொடுத்த பச்சிலையால் குறவன் பிழைத்துக் கொள்வான்.

குறவன் திரும்ப உயிர் பெற்றது குறத்தியை சந்தேகப்பட்டதற்காக நாணத்தோடு பாடுவான். இறுதியாக குறவனும், குறத்தியும் சேர்ந்து கும்மியடிப்பார்கள். கும்மியோடு இந்த நிகழ்ச்சி முடியும். இக்கலை மிகச்சிலராலே இன்று நிகழ்த்தப்படுகிறது.

நிகழ்த்துபவர்கள்

  • குறத்தி - முக்கிய கதாப்பாத்திரமான குறத்தி, தன் மலைவளம் குறித்து பாடுவாள்
  • குறவன் - குறத்தியை தேடி வரும் குறவன், ஜமீன் முன் மகுடியால் பாம்பாட்டுவான்
  • ஜமீன்தார் - குறவன், குறத்தி கதையை கேட்பார்

அலங்காரம்

குறவன் மகுடி ஊதுதல்

இந்நிகழ்த்துக்கலைக்கான அலங்காரம் விசேஷமாக செய்யப்படுகிறது. இதில் குறத்தி பாத்திரத்தையும் ஆணே வேடமிட்டு நடிக்கிறார்.

குறத்தி நரிக்குறத்தி போல் பாவாடையும், ஒற்றை தாவணியும் அணிந்திருப்பார். கழுத்தில் பலவகை பாசி மணிகளை கோர்த்திருப்பார். குறவன் உடம்பில் சிவப்பு நிற முண்டா பணியன் அணிந்திருப்பார். இடையில் கட்டம் போட்ட பல வண்ணங்கள் கொண்ட லுங்கியை அணிந்திருப்பார். காலில் சலங்கையும், கழுத்தில் பூமாலையும் அணிந்து, கையில் வளையமிட்டு முகத்தில் கருப்பு வண்ணம் பூசியிருப்பார். கழுத்தில் பூமாலையுடன் பலவகையான பாசி மணிகளைப் போட்டிருப்பார்.

ஜமீன்தார் பட்டுச்சருகை வேட்டி கட்டி ஜிப்பா அணிந்திருப்பார்.

பின்பாட்டு இசைக்கருவிகள்

குறத்திக்களிக்குரிய பின்னணி இசைக் கருவிகள் உடுக்கு, தபேலா, ஆர்மோனியம், மகுடி ஆகியன.

நிகழும் ஊர்கள்

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் உள்ள கோவில் திருவிழாவின் பகுதியாக நடைபெறும்

நடைபெறும் இடம்

  • கோவிலில் அமையப்பெற்றிருக்கும் மேடையே இதன் ஆடுகளம்

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்பு


✅Finalised Page