காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள்
- கண்ணப்ப என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்ணப்ப (பெயர் பட்டியல்)
- சுவாமிகள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமிகள் (பெயர் பட்டியல்)
காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் (மறைவு 1961) இந்து யோகி. சென்னையை அடுத்த காவாங்கரை என்னும் ஊரில் சமாதியானவர். சட்டி சித்தர், மௌன குரு என்றும் அழைக்கப்பட்டார்.
வரலாறு
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் ஆடையின்றி அலைந்துகொண்டிருந்த இவரை மக்கள் துரத்தியதனால் புழல் பகுதியிலுள்ள காவாங்கரை என்னும் இடத்துக்கு வந்தார். காவாங்கரையைச் சேர்ந்த சித்ராம்பாள் என்பவர் ஒரு வேட்டியை எடுத்து வந்து அவரது இடுப்பில் கட்டிவி்ட்டார். பின்னர் அவரது தாடியையும் சடை முடியையும் மழிப்பதற்கு ஏற்பாடுசெய்தார்.
அப்போது முதல் காவாங்கரையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு கையில் சட்டி மற்றொரு கையில் தடியுடன் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். அதனால் அவரைச் சட்டிச் சாமி என்று மக்கள் அழைத்தனர். அவருக்கு உடை வழங்கிய சித்ராம்பாளும் அவருடைய கணவரும் ‘கண்ணா’ என்று அன்புடன் அழைத்ததால் கண்ணப்பசாமி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
தொன்மங்கள்
காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் அவர் உடலில் நறுமணம் வீசியதாகவும், அவர் பலருடைய நோய்களையும் இடர்களையும் தீர்த்ததாகவும் நம்பப்படுகிறது. இவர் புகைக்கும் வழக்கம் கொண்டவர். அந்தப்புகை பலருடைய நோய்களை குணப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது
வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணையா பாகவதர் என்பவர் நள்ளிரவு 12 மணிக்குச் சாமிகளைப் பார்க்கச் சென்றார். அப்போது சாமிகளின் அவயங்கள் அனைத்தும் தனித்தனியாகக் கிடந்ததைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்டார் எனப்படுகிறது. இப்படி உடலுறுப்புகளைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டு யோகம் செய்வதை ‘சொரூப சித்து’ என்றும் ‘நவ கண்ட சித்து’ என்றும் போகர் குறிப்பிடுகிறார்.
மறைவு
1961-ம் ஆண்டு பிலவ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சோமவாரம், அஸ்த நட்சத்திரத்தில் மறைந்தார்
சமாதி
புழல் அருகே காவாங்கரையில் கண்ணப்ப சுவாமிகளின் சமாதி ஓர் ஆலயமாக வழிபடப்படுகிறது. அங்கே சிவலிங்கமும், அவருடைய சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
உசாத்துணை
- காவாங்கரை கண்ணப்பசுவாமிகள். தினமலர்
- சட்டி சித்தர் என்னும் கண்ணப்ப சுவாமிகள்
- சித்தர்கள் அறிவோம் காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள்
- காவங்கரை கண்ணப்ப சுவாமிகள். காணொளி
- காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் குருபூஜை விழா காணொளி
- காவாங்கரை கண்ணப்ப சுவாமிகளின் அதிசயங்கள் காணொளி
- காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் சமாதி காணொளி
- கண்ணப்ப சுவாமிகள் காணொளி
- சித்தர்கள் திருவடி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Sep-2022, 23:22:41 IST