under review

கார்த்திக் புகழேந்தி

From Tamil Wiki

To read the article in English: Karthick Pugazhendhi. ‎

கார்த்திக் புகழேந்தி- நன்றி பெ.ஹரிகிருஷ்ணன்
கார்த்திக் புகழேந்தி- கி.ராவுடன்
வண்ணதாசன், அகரமுதல்வனுடன்
தொ.பரமசிவனுடன்

கார்த்திக் புகழேந்தி(பிறப்பு: 1989) எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார்.

பிறப்பு,கல்வி

கார்த்திக் புகழேந்தி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், 1989-ம் ஆண்டு, திரு.முருகன்- திருமதி.பூங்கோதை தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உயர்நிலைக் கல்வியைப் பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

தனி வாழ்க்கை

கோவையில் ஏழாண்டுகள் விற்பனைத்துறையில் பணியாற்றிய கார்த்திக் புகழேந்தி பின்னர் நாகர்கோவில், திருநெல்வேலி சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் ஏ.டி.எம் காவலர் உட்பட பலவகையான வேலைகளைப் பார்த்தபின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணையில் மனைவி சுபா தேவநாதன், மகன் அகரமுதல்வனுடன் வசித்துவருகிறார்.

ஆய்வுப்பணி

நா.வானமாமலை, எஸ்.எஸ்.போத்தையா ஆகியோரின் நாட்டாரியல் ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட கார்த்திக் புகழேந்தி நாட்டாரியல் மீது ஈடுபாடு கொண்டார். நெல்லையின் வெவ்வேறு மனிதர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கதைகளாகப் பதிவுசெய்து வந்தார். நாட்டாரியல் ஆய்வாளர் கழனியூரன் அறிமுகம் உருவாகியதும் அவர் வழியாக கி.ராஜநாராயணன் நடத்திவந்த கதைசொல்லி இதழில் பணியாற்றவும், நாட்டாரியல் குறிப்புகளைப் பதிவுசெய்யவும் தொடங்கினார். அவை ’ஊருக்குச் செல்லும் வழி’ 'அங்காளம்’ என்னும் தொகுதிகளளாக் வெளிவந்துள்ளன.

இதழியல்

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆசிரியராக வெளியிட்ட, 'கதைசொல்லி' நாட்டுப்புற சிற்றிதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ஜன்னல், புதிய தலைமுறை, தினமலர், நூல்வெளி (இணைய இதழ்) ஆகிய இதழ்களில் பணியாற்றியிருக்கிறார்.

அமைப்புச்செயல்பாடுகள்

கார்த்திக் புகழேந்தி இடதுசாரிப்பார்வை கொண்டவர். ப.ஜீவானந்தம் மீதுள்ள பற்றினால் 'ஜீவா படைப்பகம்’ எனும் பதிப்பகத்தைத் தொடங்கி, 2015-ம் ஆண்டு முதல் நூல்களை வெளியிடுகிறார்.2015-ல் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது கார்த்திக் புகழேந்தி ஆற்றிய சேவைகளைப் பாராட்டி கல்கி டிரஸ்ட் இவருக்கு 'லோக சம்ரக்‌ஷக்-2015’ விருது அளித்தது.

இலக்கிய வாழ்க்கை

2011 முதல் தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவரும் கார்த்திக் புகழேந்தியின் முதல் சிறுகதை அந்திமழை இதழில் வெளியானது. மலைகள், அகநாழிகை, கதைசொல்லி, ஜன்னல், தி இந்து தமிழ், நூலகம் பேசுகிறது, தினமணி, தினமலர், ஜன்னல், கணையாழி, காக்கைச் சிறகினிலே, தென்றல் (வட அமெரிக்கா), சிலம்பு, தட்ஸ் தமிழ், ஹெரிடேஜர் ஆகிய அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகின. 2014-ல் 'வற்றாநதி' என்னும் பெயரில் கார்த்திக் புகழேந்தியின் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. ஊர் ஊராகச் செல்லும் விற்பனை முகவர் வாழ்க்கையே தன்னுடைய இலக்கியத்திற்கான அடிப்படைகளை அளிப்பதாகவும், அப்போது சந்திக்கும் மனிதர்களை அவர்களின் மொழியிலேயே எழுதிப் பதிவுசெய்வதே தன் எழுத்து என்றும் கூறுகிறார். "நான் எழுதிக்குவிக்கிறது வாழ்க்கையைத்தான். நான் வாழ்ந்த, கண்ட, கேட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்வதுதான் என் அறம். அதில் நான் மட்டும் இல்லை. நான் இல்லாமலும் இல்லை" என்று கூறுகிறார்.

கார்த்திக் புகழேந்தி

எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தொகுத்து, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஒன்பது இந்திய மொழிகளில் வெளியிட்ட, 'நவலோகன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்-2016’ நூலில் கார்த்திக் புகழேந்தி எழுதிய 'வெட்டும்பெருமாள்’ சிறுகதை தேர்வுசெய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தேரோட்டம் குறித்த கார்த்திக் புகழேந்தியின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

விருதுகள்

  • புதிய தலைமுறை ஆண்டிதழில் 2017-ம் ஆண்டின் இளம் படைப்பாளி எனப் பாராட்டை நல்கியுள்ளது.
  • 2021-ம் ஆண்டின் முத்தமிழ் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் இலக்கிய விருது வற்றாநதி சிறுகதை நூலுக்காக வழங்கப்பட்டது

இலக்கிய இடம்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் "இளம் தலைமுறை சிறுகதையின் புதியமுகம்" என இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளார். கார்த்திக் புகழேந்தியின் புனைவுகள் மண்ணில் வேரூன்றி நிற்பன . மண்ணின் மனிதர்களை வெறுமனே புனிதப்படுத்தாமல் அவர்களிடம் இருக்கும் சத்தியத்தையும் கீழ்மைகளையும் துரோகத்தையும் வஞ்சகத்தையும் வெஞ்சினத்தையும் அதனதன் குருதியூற்றிலிருந்து வெளிப்படுத்துகிறார். மொழியையும் மண்ணையும் தன் கதைகூறும் விதத்தால் குழைத்து, இவர் உருவாக்கும் அகவுலகம் வாசகனுள் ஆழமாய்ப் பதியும் வலிமை கொண்டது என்று எழுத்தாளர் அகரமுதல்வன் குறிப்பிடுகின்றார்.

நூல்கள்

சிறுகதை

  • வற்றாநதி (2014) -அகநாழிகை பதிப்பக வெளியீடு
  • ஆரஞ்சு முட்டாய் (2015) ஜீவா படைப்பகம்
  • அவளும் நானும் அலையும் கடலும் (2017)யாவரும் பதிப்பக வெளியீடு
  • வெஞ்சினம் (2022) ஆகுதி வெளியீடு

கட்டுரை

  • ஊருக்குச் செல்லும் வழி -கட்டுரைத் தொகுப்பு ( 2016 )வாசகசாலை
  • அங்காளம் -ஆய்வுக் கட்டுரைகள் (2018 )யாவரும் பதிப்பக வெளியீடு
  • நற்திருநாடே (2020) யாவரும் பதிப்பக வெளியீடு
  • இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம் (2022)யாவரும் பதிப்பக வெளியீடு)

உசாத்துணை


✅Finalised Page