காடையூர் வெள்ளையம்மாள்
காடையூர் வெள்ளையம்மாள் ( பொ.யு. 17-ம் நூற்றாண்டு) கொங்குநாட்டின் நாட்டார் வாய்மொழி வரலாற்றில் பேசப்படும் வீரப்பெண்மணி,. காடையூரில் காடையீசுவரர் கோயிலில் வெள்ளையம்மாள் கோயில் உள்ளது.
(பார்க்க காடை கூட்டம்i)
வாய்மொழி வரலாறு
காடையூரின் பழையபெயர் நட்டூர். தொன்மக்கதைகளின்படி வடநாட்டு அரசனின் யானைப்படையை மக்கள் வேண்டிக்கொண்டபடி காடைக்குருவிகள் கொத்தி விரட்டியமையால் அப்பெயர் வந்தது. கொங்கு கவுண்டர்களில் காடை குலத்தவரின் ஊர் என்பதனாலும் அப்பெயர். காடையூரில் சேடகுலத்து நிலக்கிழாருக்கு வெள்ளையம்மாள் பிறந்தாள். உடல் முழுக்க நிறமிகள் இல்லாமல் வெள்ளையாக இருந்தமையால் அது தெய்வாம்சம் என அஞ்சி அவளை எவரும் மணக்க முன்வராத நிலையில் காங்கய நாட்டுக்கு மாட்டுப்பட்டியை ஓட்டிவந்த கருமாபுரம் பொருளந்தைகுல இளைஞனான காங்கேயன் வெள்ளையம்மாளை மணக்க முன்வந்தான். அவனுக்கு தன் சொத்தில் நான்கிலொரு பங்கை வெள்ளையம்மாளின் தந்தை வாக்களித்தார். வெள்ளையம்மாள் காங்கேயன் இணையருக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தனர்.
வெள்ளையம்மாளின் தந்தையும் தாயும் மறைந்தபின் அவளுடைய உடன்பிறந்தார் காங்கேயனுக்கு சொத்து பிரித்துக்கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் தங்கள் மனைவியரின் பேச்சைக் கேட்டு காங்கேயனை ஊர்சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வதாக கூட்டிச்சென்று கொன்றுவிட்டனர். விபச்சாரி என பழிசுமத்தி வெள்ளையம்மாளை ஊரைவிட்டு விலக்கி வைத்தனர். அதற்கு ஊராருக்கு கையூட்டு அளிக்கப்பட்டது. துயருடன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்ற வெள்ளையம்மாள் சாலையோரம் போக்கிடமில்லாமல் நின்றுகொண்டிருப்பதை அவ்வழியே வந்த இஸ்லாமிய சர்தார் பார்த்தார். அப்போது மதுரையை இஸ்லாமியர் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். சர்தாரிடம் நீதி வழங்கும் உரிமை இருந்தது. இரக்கப்பட்டு விசாரித்த சர்தாரிடம் வெள்ளையம்மாள் நடந்ததைச் சொன்னாள்.
சர்தார் வெள்ளையம்மாளை படைவீட்டில் வசதியாகத் தங்கச்செய்துவிட்டு கிராமத்துக்குச் சென்று விசாரித்தபோது ஊரார் வெள்ளையம்மாளின் தந்தை கால்பங்கு நிலம் அளிப்பதாகச் சொல்லவில்லை என்றும், வெள்ளையம்மாள் ஒழுக்கம் கெட்டவள் என்றும் ,அவள் கணவன் மனைவி நடத்தை சரியில்லாததானல் ஓடிவிட்டான் என்றும், ஆகவே ஊர்கூடி அவளை விலக்கம் செய்து துரத்திவிட்டதாகவும் சொன்னார்கள். வெள்ளையம்மாளை நேரில் வரவழைத்து சர்தார் விசாரித்தார். வெள்ளையம்மாள் அழுது புலம்பி ஆணையிட்டாலும் ஊரார் இரக்கம் காட்டவில்லை.
ஊர்ச்சபை வெள்ளையம்மாளுக்கு மூன்று சோதனைகளை வைத்தது. அவள் பச்சை மண்குடத்தில் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வரவேண்டும். அந்த நீரை மண்குதிரை மீது ஊற்றவேண்டும். அப்போது குதிரை உடல்விதிர்த்து கனைப்பொலி எழுப்பவேண்டும். கோயிலில் உள்ள வெடத்தலா மரத்தாலான கழுமடத்திற்கு நீரூற்றவேண்டும். அந்த மரத்தடி முளைத்து தழைக்கவேண்டும். இல்லையேல் வெள்ளையம்மாள் கழுவிலேறவேண்டும்.
வெள்ளையம்மாள் அதற்கு ஒப்புக்கொண்டாள். அது அவளைக் கொல்வதற்கான சூழ்ச்சி என சர்தார் எச்சரித்தார். ஆனால் வெள்ளையம்மாள் காடையீசுவரர் பங்கயச்செல்வி அருளால் தான் வெல்வேன் என சொல்லி அவரை ஆறுதல்படுத்தி ஆசோதனைகளில் வென்றாள். வெடத்தலா மரத்தாலான கழுக்குச்சி முளைத்தது. அதைக்கண்ட ஊரார் அஞ்சி ஓடினார்கள். அவள் தமையன்கள் முழுநிலத்தையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிட்டு ஊரைவிட்டுச் செல்வதாக ஒப்புக்கொண்டார்கள்.
வெள்ளையம்மாள் தன் மகன்களாக கழுவறஞ்ச காங்கேயன், சோமன் காங்கேயன், தடிக்காளி காங்கேயன், சேணியன் காங்கேயன் ஆகியோருடன் தந்தையின் நிலத்தை பெற்று வாழ்ந்தாள். அவள் வம்சத்தைச் சேர்ந்தவர்களே காடையூர் கட்டக்காரர் காங்கேய மன்றாடியார் குடியினர் என செ.இராசு குறிப்பிடுகிறார்.
காலம்
காடையூர் வெள்ளையம்மாள் கதையில் நவாபுகளின் ஆட்சிக்காலம் பற்றிய குறிப்பு உள்ளது. ஆற்காடு நவாபுகள் ஆட்சி செய்த பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இக்கதை நிகழ்ந்திருக்கலாம்
காதுகுத்துச் சடங்கு
வெள்ளையம்மாள் தன் குலகுரு மீனாட்சி சைவபுரந்தர பண்டித குருசாமி சர்மா அவர்களிடம் ஆலோசித்து தனக்கு நீதி வழங்கிய இஸ்லாமிய சர்தாருக்குச் செய்யும் நன்றிக்கடனாக இஸ்லாமியச் சடங்கு ஒன்றை தன் குடிக்குச் செய்வதாக முடிவுசெய்தாள். வழக்கப்படி இளமையிலேயே காதுகுத்தும் வழக்கத்தை தவிர்த்து வளர்ந்தபின் சீர்செய்து காதுகுத்துக் கல்யாணம் நடத்தி காதுகுத்தும் வழக்கத்தை கொண்டுவந்தார். காடையூர் பொருளந்தை குலத்தினர் வெள்ளையம்மாளின் நான்கு மகன்களின் வழிவந்தவர்கள். அவர்களின் பெயரால் நான்கு குடிகளாக இன்று அழைக்கப்படுகின்றனர். இளமையில் காதுகுத்தாமலிருப்பதனால் ’முழுக்காதுப் பொருளந்தை’ என கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அழைக்கப்படுகின்றனர்.
ஆலயம்
கொங்குநாட்டுக் கண்ணகி என அழைக்கப்படும் வெள்ளையம்மாள் மறைந்தபின் அவள் நீரூற்றி முளைத்ததாகச் சொல்லப்படும் காடையூரில் காடையீசுவரர் கோயிலில் உள்ள வெடத்தலா மடத்தடியில் தெய்வமாக நிறுவப்பட்டு அக்குலத்தோரால் வழிபடப்படுகிறாள்
நூல்
வெள்ளையம்மாளின் வரலாற்றை கண்ணாடிப் பெருமாள் என்னும் நாட்டார்ப்புலவர் பாடலாக இயற்றியிருக்கிறார்/ காடையூர் ஈஸ்வரன் கோயிலில் வெள்ளையம்மாளின் கதை சுதைச்சிற்ப ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது
நவீன இலக்கியம்
எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் வெள்ளையம்மாளின் கதையை ஒட்டி 'மண்' என்னும் சிறுகதையை எழுதியிருக்கிறார்
உசாத்துணை
- கொங்குநட்டு மகளிர்.செ.இராசு
- முழுக்காதன் குலவரலாறு புலவர்
- முழுக்காதர் குல வரலாறு சாந்திப்பிரியா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2022, 03:46:29 IST