under review

கவி

From Tamil Wiki
கவி

கவி ( 1941) தாராசங்கர் பானர்ஜி எழுதிய நாவல். த.நா.குமாரசாமி மொழியாக்கத்தில் கலைமகள் வெளியீடாக பிரசுரம் ஆகியது. ஒரு நாட்டுப்புறப் பாடகனின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நாவல் இருவேறு குணச்சித்திரங்கள் கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்காகப் புகழ்பெற்றது.

மூலம், மொழியாக்கம்

தாராசங்கர் பானர்ஜியின் கவி 1941-ல் வங்கமொழியில் வெளிவந்தது. அதை 1972-ல் த.நா.குமாரசாமி தமிழாக்கம் செய்தார். நேஷனல் புக் டிரஸ்ட் அந்நாவலை வெளியிட்டது.

இந்நாவல் ரவீந்திரநாத் தாகூர் இறந்த வருடத்தில் வெளிவந்தது ஒரு முக்கியமான விஷயம் என்று நாவலின் மறுபதிப்புக்கு முன்னுரை எழுதிய சுநீல் கங்கோபாத்யாய சொல்கிறார். தாகூர் மற்றும் சரத் சந்திர சட்டர்ஜி ஆகியோர் உருவாக்கிய கற்பனாவாத மரபில் இருந்து வங்க இலக்கியம் நேரடியாக யதார்த்தம் நோக்கி வர ஆரம்பித்ததன் மிகச்சிறந்த உதாரணம் இந்நாவல் என்கிறார்.

கவி முதலில் சிறுகதையாகவே தாராசங்கர் பந்த்யோபாத்யாயவால் எழுதப்பட்டது. பின்னர் அதை விரிவாக்கி நாவலாக ஆக்கினார் தாராசங்கர் பந்த்யோபாத்யாய.

கதைச்சுருக்கம்

டோம் என்ற சாதியைச்சேர்ந்த நிதாரி என்ற இளைஞனின் கதை இந்நாவல். டோம் சாதியினர் குற்றம்செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். அவர்களில் ஒருவனாகிய நிதாரி ஒரு இரவுப் பள்ளிக்குச் செல்கிறான். கல்வி அவனுக்கு மொழிமீது வெறியை உருவாக்குகிறது. மொழியை அறிந்ததுமே நிதாரி இனிமேல் குலத்தொழில் செய்யமாட்டேன் என முடிவெடுத்தான். அறம், கருணை ஆகிய உணர்வுகளை அவனை அடைந்தான். ரயில்வே கேங்மேன் ராஜாவுடன் தங்குகிறான். அங்கே சுமைதூக்கியாக வேலை செய்கிறான்.

இந்நிலையில் ஊரில் சண்டி கோயில் திருவிழாவில் போட்டி கவிபாடும் நிகழ்ச்சியில் ஒருதரப்பின் கவிராயரின் உதவிப்பாடகனாகிய கவிஞன் பணம்வாங்கி வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறான். நிகழ்ச்சி ரத்து ஆகவேண்டிய நிலை. அப்போது தயங்கியபடி எழுந்து 'நான் பாடட்டுமா?" என்று நிதாரி கேட்கிறான். மேடையேறிய நிதாரி நுட்பமாகவும் அழகாகவும் கவிதை பாடுகிறான். அந்நிமிடமே அவன் தன்னைக் கவிஞனாக உணர ஆரம்பித்துவிட்டான்.

அதன்பின் நிதாரி எப்படி மெல்லமெல்லக் கவிஞனாக ஆகிறான் என்பதே இந்நாவலின் கதை. அவனுடைய முதல் மேடைப்பாட்டைகேட்டதுமே ராஜாவின் மைத்துனியான மோர் விற்கும் கருநிற அழகி அவன் மேல் மையல் கொள்கிறாள். அவளுக்கு ஏற்கனவே மணமாகியிருந்தது. கணவன் அவள்மேல் காதலுடன் இருந்தான். ஆனால் கவிஞனின் காதலின் ஆழத்தை அந்தக் கணவனால் அளிக்க இயலவில்லை. அந்த எளிய பெண்ணை அவன் பித்தியாக்குகிறான்.

இச்சமயம் ஜூமூர் என்ற நாடோடிப் பாடகர்க்குழு அங்கே வருகிறது. அவர்கள் நாடோடிகளாக சென்று ஆங்காங்கே சமைத்துண்டு விழாக்களில் ஆடிப்பாடி வாழ்பவர்கள். பெண்கள் அனைவருமே விபச்சாரிகளும் கூட. அக்குழுவில் உள்ள வஸந்தி என்ற பெண் நிதாரியின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். முதலில் அவள் அவனது கருநிறத்துக்காக அவனைச் சீண்டுகிறாள். பின் அவனுடைய உள்ளிருக்கும் கவிஞன் அவளை கவர்கிறான். நிதாரி வசந்தியுடன் செல்கிறான்.

நிதாரி ஜூமூர் கலைக்குழுவின் கவிராயனாக ஆகிறான். வசந்தி அவனைச் சீண்டி அவமதித்து விரட்ட நினைத்தாலும் அவள் மீது கொண்ட பித்தினால் அவளுடன் இருக்கிறான். நிதாரி குடித்துவிட்டு வந்து ஆபாசப்பாடல்களை பாடுகிறான். நிதாரி ஒவ்வொருநாளும் அதில் இருந்து தப்பி ஓட ஆசைப்படுகிறான். ஆனால் வசந்தியுடனான காதல் தடுக்கிறது. வசந்தி அலட்சியமும் கர்வமும் கொண்டபெண்ணாக இருக்கிறாள். நிதாரி அவளுக்குப் பணிவிடைசெய்கிறான். காசநோய் முற்றி அவன் கைகளில் அவள் இறந்தபின் ஒருநாள் முழுக்க அவன் சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறான்.

ஜூமூர் குழுவில் இருந்து மீண்டு மறுபடியும் தன் கிராமத்துக்கே வருகிறான் நிதாரி. அங்கே அவனை காதலித்தவள் இறந்துவிட்டிருந்தாள். அனுபவங்கள் வழியாக கனவுகளைப் பாடிய இளம்கவிஞனாகிய நிதாரி வாழ்க்கையை பாடும் பெருங்கவிஞனாகிறான்.

இலக்கிய இடம்

தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் தமிழில் ஆழமான செல்வாக்கைச் செலுத்திய நாவல். கவி அதற்கு அடுத்தபடியாக முக்கியமானது. படைப்பூக்கம் கொண்ட வாழ்க்கையின் அனைத்து கொந்தளிப்புகளையும் கட்டற்ற தன்மையையும் சித்தரிக்கும் நாவல் என்று கவியை ஜெயமோகன் வரையறை செய்கிறார். இருபெண்கள் வழியாக வாழ்க்கையின் இரு முகங்களையும் கண்டு நிதாரி பெருங்கவிஞனாக ஆகிறான். "வங்க ஞானப்புலத்தில் வைத்துப்பார்த்தால் அருளுருவாகிய உமையும் உக்கிரரூபியான காளியும்தான் இருவரும். குருதி வழியும் வாய்கொண்டவள் என்னும் சித்தரிப்பு வழியாக பல கோணங்களில் சொல்லி வஸந்தியில் இருக்கும் காளி என்ற அம்சத்தை அடிக்கோடிட்டுக்கொண்டே இருக்கிறார் தாராசங்கர். உமை ஆத்மனை எழுப்ப முடியும், காளியே தன் வெம்மைமூலம் அவனை கனியச்செய்ய முடியும் என்பதுதானே வங்க சாக்தேயத்தின் அறிதல்" என ஜெயமோகன் கூறுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page