under review

கலீல் அவ்ன் மௌலானா

From Tamil Wiki
கலீல் அவ்ன் மௌலானா

கலீல் அவ்ன் மௌலானா (பிறப்பு:டிசம்பர் 20, 1937) ஈழத்து தமிழ் அறிஞர். "வாப்பா நாயகம்" என்று அழைக்கப்படுபவர். ஆன்மீகத் தலைவர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

கலீல் அவ்ன் மௌலானா டிசம்பர் 20, 1937-ல் இலங்கை, தென் மாகாணம் மாத்தறை வெலிகமை எனும் ஊரில் ஷெய்க் ஜமாலியா ஸைய்யித் யாசீன் மௌலானாவிற்கு மகனாகப் பிறந்தார். இவர் கண்மணி நாயகமின் 34-ஆம் பரம்பரையிலும், கௌதுல் அஃலம் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹுவின் 21-ஆம் பரம்பரையிலும் பிறந்தவர்.

இளம் வயதிலேயே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக‌ ஓதி முடித்தார். மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் தந்தையிடம் முறைப்படி கற்றார். தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹு, உஸூல் பிக்ஹு, அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக், ஸர்பு, நஹ்வு, மன்திக், இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் ஆகிய பாடங்களை தம் தந்தையிடமிருந்து கற்றார். ​​இவர்கள் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இலங்கையில் வெலிகமை என்னும் ஊரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயத்தில் S.S.C. வரை ஆங்கில மொழியில் கற்றார். S.S.C. தேர்வை தமிழிலும் எழுதினார். பண்டிதப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், சங்ககால நூல்களையும் கற்றார்

ஆசிரியப்பணி

S.S.C. தேர்வுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று 1962 -ல் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஆசிரியர் பயிற்சி முடிய, 1963-ல் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். கிண்டர்கார்டன் முதல் 12-ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்தார்.

கலீல் அவ்ன் மௌலானா

1972-ல் அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று 'குருணாகல்' என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பின்னர் வட்டாரக் கல்வி அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார். 1973-லிருந்து ஐந்தாண்டு காலம் சிலாபம், புத்தளம் வட்டாரங்களில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தார். பின்னர் 1978-ஆம் ஆண்டு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு E.O. கல்வித்துறை அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆன்மீகப் பணியில் ஈடுபடுகிறார்.

1998ஆம் ஆண்டு முதல் துபாய் சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள முரீத்களுக்கு ஆன்மீக அறிவு போதித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலநூறு முரீத்களுக்கு ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பன்மொழிப் புலவர். மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார். 1964-ல் இவரது முதற் படைப்பு வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பரப்பினர் 1967-ல் நடத்திய கவியரங்கில் இவரது கவிதை சிலாகித்துப் பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது கவிதை நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. பல உரைநடை நூல்களை இலங்கை, இந்தியா நாடுகளில் வெளியிட்டார். அவரது தந்தை யாசின் மெளலானாவின் காமூஸ் எனும் அரபு-தமிழ் அகராதியை தொகுத்து வெளியிட்டார்.

ஆன்மீகம்

கலீல் அவ்ன் மௌலானா

மறைஞானப் பேழை என்ற ஆன்மீக மாத இதழை வெளியிட்டார். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் ஏற்படுத்தினார். ​​இந்த சபையின் வழிநடத்தலில் இந்தியாவில் திருச்சியில் மதரசதுல் ஹுஸனைன் பீ ஜாமியா யாசீன் என்னும் அரபு கலாசாலை இயங்கி வருகிறது. இந்த கலாசாலை உலக மற்றும் இஸ்லாமிய கல்வியை இலவசமாக சிறுவர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் "அவ்னியா உலக சமாதான அறக்கட்டளை" என்னும் அறக்கட்டளை மூலம் பல சமுதாய மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. உலகெங்கும் வாழும் தமது ஆயிரக்கணக்கான முரீதுகளுக்கு அல் குர்ஆன், அல் ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை அளித்து வருகிறார். இவர்களின் முரீதுகள் இலங்கை, இந்தியா குறிப்பாக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

நூல் பட்டியல்

 • யாசீன் நாயகம் ரலி வரலாறு
 • பரமார்த்தத் தெளிவு
 • நாயகர் பன்னிரு பாடல் கவிதை
 • உண்மை விளக்கம்
 • பேரின்பப்பாதை ஞான அறிமுக நூல்
 • பர்ஜன்ஸி மவுலிது தமிழாக்கம்
 • அருள்மொழிக் கோவை தமிழ் ஆங்கிலம்
 • கஸீதத்துல் அஹ்மதிய்யா அரபு - தமிழ் வாரிதாத்
 • தாகிபிரபம்
 • பதுருசஹாபாக்கள் மவுலிது தமிழாக்கம்
 • காமூஸ் அரபு-தமிழ் அகராதி
 • மகானந்தாலங்கார மாலை சித்திரக்கவி
 • மனிதா அமுத மொழிகள் தொகுப்பு
 • ஒளியை மறைக்கத் துணியும் தூசி
 • அற்புத அகிலநாதர் கவிதை
 • குத்புகள் திலகம் யாசீன் மௌலானா ரலி-கவிதை
 • இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா கவிதை
 • துஹ்பத்துல் முர்ஸலா அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு
 • ஈழ வள நாட்டில் பயிர் பெருக்க வாரீர்!
 • குறிஞ்சிச் சுவை தமிழ் இலக்கிய நூல்
 • மருள்நீக்கிய மாநபி
 • இறையருட்பா கவிதை
 • ரிஸாலத்துல் கௌதிய்யா அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு

உசாத்துணை