under review

கதாரத்தினாவளி

From Tamil Wiki
கதா ரத்தினாவளி

கதாரத்தினாவளி ( பொ.யு. 1893) தமிழின் தொடக்க காலச் சிறுகதைத் தொகுப்புகளுள் ஒன்று. ஆர். வெங்கடசுப்பராவ் தெலுங்கு மொழியில் எழுதிய நூலின் தமிழ் மொழியாக்கம் இந்நூல்.

பதிப்பு, வெளியீடு

பல்வேறு நாடுகளில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த பல்வேறு சிறுகதைகளைத் தொகுத்து வழக்குரைஞர் ஆர். வெங்கட சுப்பராவ் தெலுங்கில் ‘கதாரத்தினாவளி' என்னும் தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அதனை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர் டி.எஸ். முத்துசாமி சாஸ்திரிகள் தமிழில் மொழிபெயர்த்தார். சென்னையின் புகழ்பெற்ற, பிரிட்டிஷ் அரசின் அரசு ஆவணங்களை அச்சிடும் லாரன்ஸ் அசிலம் அச்சகம் (Lawrence Asylum Press) இந்த நூலை வெளியிட்டது.

இந்த நூலின் விலை இரண்டு ரூபாய், எட்டணா. தபால் செலவு நான்கணா. நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் வெளியான இந்த நூலுக்கு அக்காலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்திருக்கிறது.

உள்ளடக்கம்

இந்த நூலின் முன்னுரையில், ஆர். வெங்கடசுப்பராவ், “தமிழ்ப் பாஷையில் கதைப் புஸ்தகங்கள் அனேகமிருப்பினும், ஸ்திரீ புருஷர்கள் படிப்பதற்கு யோக்கியமானவையும், மனமகிழ்ச்சி பிறப்பிக்கத் தகுந்தனவும் அதிமகாய்க் காணப்படா. ஆதலால், இந்தப் புஸ்தகம் தயாரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “அனேக கதைப் புத்தகங்களின்று பொறுக்கி யெடுக்கப்பட்டுத், தேசகால பாத்திரங்களுக்குத் தக்க மாறுபாடுகளுடன், படிப்பவருக்கும் கேட்பவருக்கும் அத்தியந்த சந்தோஷகரமாயிருக்கும் வண்ணம், தெளிவும் இனிதுமான நடையில் நூதனமாய் எழுதப்பட்டிருக்கின்றன.” என்று கூறியுள்ளார்.

இந்நூலில்,

  • செம்படவன் கதை
  • மாதுளம் பழக்கதை
  • குருடர்கள் கதை
  • நாக கன்னிகையின் கதை
  • கீல் குதிரையின் கதை
  • குருவை மிஞ்சிய சீடன் கதை
  • கிழக்கணவன் கதை
  • கிளிக் கதை
  • அடங்காப்பிடாரியின் கதை
  • பைக்குள் பரலோகஞ்ச் சென்றவன் கதை
  • பரமானந்த சிஷ்யர்கள் கதை
  • ஜகஜாலத் திருடன் கதை
  • தங்க வாத்துக்கதை
  • சடகோபாசாரி கதை
  • சாஸ்திரிகளின் குமாரத்தி கதை
  • பிணந்தூக்கிப் பிச்சையன் கதை

- என நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

ஆசிரியர் குறிப்பு

இந்நூலைத் தொகுத்திருக்கும் ஆர். வெங்கடசுப்பராவ், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். தெலுங்கில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'AN EPITOME OF LAW' என்ற நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1889-ல் வெளியான இந்த நூல், சட்டத்துறை சார்ந்து வெளியான முன்னோடித் தமிழ் நூல்களுள் ஒன்று.

‘கதாரத்தினாவளி'யைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் பண்டிதர் டி.எஸ். முத்துசாமி சாஸ்திரிகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகள் அறிந்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

உசாத்துணை

  • தனிநபர் சேகரிப்பு, ஆ.ப. சுவாமிநாத சர்மா, புதுக்கோட்டை.


✅Finalised Page