ஏ.எம்.ஏ. அஸீஸ்
ஏ.எம்.ஏ. அஸீஸ் (அபூபக்கர் முகம்மது அப்துல் அசீஸ்) (அக்டோபர் 4, 1911–நவம்பர் 24, 1973) ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர், அரசியல்வாதி, சமூக சேவையாளர். முஸ்லிம் மக்களின் கல்வி, முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்.
பிறப்பு, கல்வி
ஏ.எம்.ஏ. அஸீஸ் இலங்கை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர், மீராமுகைதீன் நாச்சியா இணையருக்கு அக்டோபர் 4, 1911-ல் பிறந்தார். தந்தை யாழ்ப்பாண நகரசபையின் உறுப்பினராக இருந்தார். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அல்லாபிச்சை பள்ளி, யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றார்.1929-ல் இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் கற்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.1933-ம் ஆண்டில், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் இளமானிப் பட்டத்தைப் பெற்றார். 1933-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பயின்றார்.
தனிவாழ்க்கை
ஏ.எம்.ஏ. அஸீஸ் உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மரீனா சுல்பிக்கா, முகம்மத் அலி, இக்பால் ஆகியோர் பிள்ளைகள்.
ஏ.எம்.ஏ. அஸீஸ் இலங்கை சிவில் சேவைப் பரீட்சையில் 1935-ல் தேர்ச்சி பெற்ற முதலாவது முஸ்லிம் சிவில் நிர்வாக அதிகாரி. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 13 வருடங்கள் மக்கள் பணிகளில் ஈடுபட்டார்.
ஆசிரியப்பணி
ஏ.எம்.ஏ. அஸீஸ் இலங்கை நிர்வாக சேவையிலிருந்து 1948-ம் ஆண்டில் இராஜினாமா செய்து, ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.
இஸ்லாமிய மக்களுக்கான சேவை
ஏ.எம்.ஏ. அஸீஸ் இலங்கை முஸ்லிம்களின் மனோநிலையை உருவாக்கியவர்களில் ஒருவர். சித்திலெப்பைக்குப் பின்பு முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியவர். மரபுடன் நவீனத்துவத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற நவீன கல்வி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
1942-ல் கல்முனை முஸ்லிம் கல்விச்சபையைத் தோற்றுவித்தார். 1945-ல் இச்சபை இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியமாக மாறியது. இந்நிதியம் வசதி குன்றிய முஸ்லிம் மாணவர்கள், தங்களுடைய உயர் கல்வியைத் தொடர நிதி உதவிகள் செய்தது. முஸ்லிம் சமூகத்திற்கான பொருத்தமான கல்விப் போதனை மொழி அவசியம் என்பதை 1940 முதல் தொடர்ச்சியாக எழுதியும், உரைகள் நிகழ்த்தியும் வந்தார்.
எ.எம்.எ. அஸீஸ் தமிழ் மொழியே முஸ்லிம்களின் தாய்மொழியாக இருத்தல் வேண்டுமென வாதிட்டார். 'இலங்கை முஸ்லிம்கள் மற்றும் தாய்மொழி: தமிழ் மொழியே முஸ்லிம்களின் கோரிக்கை' எனும் தலைப்பில் 1941-ல் எழுதினார். தென்னிலங்கை முஸ்லிம் மாணவர்கள் போதனா மொழியாக சிங்களத்தை ஏற்பதை எதிர்த்து எழுதினார்.
சோனகர்
ஏ.எம்.ஏ. அஸீஸ் 1944-ல் “இலங்கை முஸ்லிம் யூனியன்” என்ற அமைப்பை நிறுவி, அதன் உருவாக்கத் தலைவராக ஆற்றிய உரையில், ’சோனகர்’ என்ற பதம் இனவாதத்தைத் தோற்றுவிக்கின்றது என்பதால், மத அடிப்படையிலான ’முஸ்லிம்’ என்ற பெயர் உபயோகிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். தற்போது இந்தப் பதம் சில அரச ஆவணங்களில் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது.
அமைப்புப் பணிகள்
- 1950-1960 பத்தாண்டுகளில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
- 1950-ல் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை அமைப்பைத் தோற்றுவித்தார்.
- முஸ்லிம் வாலிபர் சங்கம் (YMMA), இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம்(CMSF) ஆகிய இரண்டும் ஏ.எம்.ஏ. அஸீஸின் முயற்சியால் உருவானவை.
இலக்கிய வாழ்க்கை
ஏ.எம்.ஏ. அஸீஸ் விமர்சகர். கட்டுரைகள் பல எழுதினார். ’இலங்கையில் இஸ்லாம்’ என்ற புத்தகத்தை எழுதினார். 1952-ல் இலங்கை செனட் சபை உறுப்பினராக இருந்தபோது நிகழ்த்திய பேருரைகள் புகழ்பெற்றவை.
விருதுகள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 1980-ல் ’இலக்கியக் கலாநிதி கெளரவப்பட்டம்’ வழங்கியது.
மறைவு
ஏ.எம்.ஏ. அஸீஸ் நவம்பர் 24, 1973-ல் காலமானார்.
மதிப்பீடு
இலங்கையில் தமிழ் முஸ்லீம்களின் பண்பாட்டு இடத்தை வரையறை செய்தவர்களில் ஒருவராக ஏம்.எம்.ஏ.அஸீஸ் மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமியர்கள் நவீனக் கல்வி அடைந்து அரசியல் ரீதியாக ஒருங்கிணையவேண்டும் என்பதை முன்வைத்தார்.
நூல்கள்
- இலங்கையில் இஸ்லாம்
- அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
- மொழிபெயர்ப்புக் கலை
- மிஸ்ரின் வசியம்
- கிழக்காபிரிக்கக் காட்சிகள்
- ஆபிரிக்க அனுபவங்கள்
- தமிழ் யாத்திரை
உசாத்துணை
- ஈழத்துத் தமிழறிஞர்கள்: த. துரைச்சிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு
- கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்: கலாநிதி எம்.ஏ. நுஃமான்: ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் எஸ்.எம்.எம். யூசுப்
- தேசாபிமானி ஏ.எம்.ஏ.அஸீஸ்: கலாநிதி ஏ.சீ.எல். அமீர் அலி: tamilmirror
- மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்: விடிவெள்ளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
19-Feb-2023, 19:40:54 IST