under review

ஏழு கன்னிமார்

From Tamil Wiki
Ezhukannimaar2.jpg

ஏழு கன்னிமார் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற தெய்வங்கள்.ஏழு செங்கற்கள் வடிவில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாகவும், தனித்தனி கல் வடிவில் செதுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களாகவும் ஏழு கன்னிமார்கள் உள்ளனர்.

ஏழு கன்னிமார்

Ezhukannimaar3.jpg
கடல் கன்னிகைகள்

கற்புடைய ஏழு கன்னிகள் கடல் தேவதையாக பூமியில் தோன்றினர். அவர்கள் எழுவரும் பார்வதியின் அவதாரமாகக் கருதப்பட்டனர் என்றொரு கதை வழக்கில் உள்ளது. திருமாலின் மனைவியாகிய லட்சுமியே கடல் தேவதைகளாக மாறினாள் என்ற கதையும் உள்ளது. தேவலோக கன்னிகள் பூமியில் கடல் கன்னிகளாக அவதரித்து பின் தெய்வமாயினர் என்ற கூற்றும் உண்டு.

இவ்வாறு பார்வதி, லட்சுமி, தேவலோக கன்னிகள் என மூவருள் ஒருவர் வடிவமாக ஏழு கன்னிகள் பூமியில் நாகை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் பிறந்தனர். இவர்கள் ஏழு பேருக்கும் மூன்று அண்ணன்கள். பத்து பேரும் மீனவக் குடும்பத்தில் பிறந்தனர். ஏழு தங்கைகளையும் வீட்டில் விட்டுவிட்டு மூன்று அண்ணன்களும் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

கடலினுள் புயல் மூழவே அண்ணன்கள் மூவரும் கரையை அடைய தாமதமானது. ஏழு கன்னிப் பெண்களும் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த காமுகர்கள் வீட்டினுள் நுழைந்த அவர்கள் ஏழு பேரையும் தங்கள் காம இச்சைக்கு ஆளாக்கினர். கற்பிழந்த ஏழு கன்னியரும் தங்கள் அண்ணன்கள் வரும் முன் கடலில் குதித்து உயிர் இழந்தனர். கரை மீளாத அண்ணன்மார்கள் தங்கள் தங்கையின் நிலையை கடலிலேயே அறிந்தனர். மூவரும் கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

மறுநாள் காலை ஏழு கன்னிமார்களை கரை ஒதுங்கிய பின் மீனவர்கள் அங்கு நடந்ததை அறிந்தனர். துர்சகுனம் என்றறிந்து பூசாரியை அழைத்துக் குறி கேட்டனர். அவர் நடந்ததை கதையாக மீனவ மக்களுக்குச் சொன்னார். அதற்குள் ஏழு கன்னியரும் மீனவக் குடிகளை அழிக்கத் தொடங்கினர். அவர்களைக் கற்பழித்த துஷ்டர்களைத் தேடிக் கொன்றனர்.

மக்கள் எழுவர் முன் வேண்டி நின்றனர். பூசாரி அவர்களை ஏழு கல்லில் அடக்கினார். ஏழு கன்னியரையும் கல்லாய் நிறுவி படையலிட்டு இறுதி சடங்கு நிகழ்த்தினர். பூஜை செய்து ஏழு கன்னியரையும் தெய்வமாக அமைத்தனர்.

இக்கதை நாகை மாவட்டம் புதுக்கருப்பம், பூம்புகார் பகுதிகளில் வழக்கில் உள்ளது. ஏழு கன்னிமார் கோவிலில் மாசி மகம் அன்று திருவிழாவும் நடைபெறும்.

பூஜை முறை

ஏழு கன்னிமார் கோவில் சடங்கில் ஊர் மக்கள் அனைவரும் பங்கு கொள்வர். அந்த ஆண்டு அவர்கள் எண்ணிய வேண்டுதலை நிறைவேற்றுவர். பெண்கள் சாமி கொண்டு ஏழு கன்னிகளாக ஆடிப்பாடி வேடங்கொள்வர். பூசாரியும் சாமி கொண்டு அருள் சொல்வார். சாட்டை வீரன் சாட்டையால் சாமியாடியை அடித்து ஏழு கன்னிமார்களை தணியச் செய்வான். ஏழு தெய்வங்களையும் தீயின் வடிவாக மாற்றி கடலினுள் விட்டுவிடுவர்.

தை மாதம் மூன்றாம் நாள் கன்னிப் பொங்கல் அன்று ஏழு பெண்கள் அருள் கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி ஊர்வலம் வருவர். மாசி மாதம் பௌர்ணமி அன்று கன்னிக் கோவில் அலங்காரம் செய்யப்படும். கன்னிப் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவர்.

பாற்கடல் கன்னிகள்
Ezhukannimaar1.jpg

இக்கதை ஏழு கன்னிமார்கள் குறித்து குமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது முதலில் நஞ்சு உருவானது. அந்த காலகூட நஞ்சினால் பத்திரகாளி உருவாகி புட்டாபுரம் என்னும் ஊரில் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தாள்.புட்டாபுரத்தில் ஏழு கன்னிமார் பெற்ற ஏழு பிள்ளைகளை பெற்றனர். அவர்கள் எழுவரையும் அவள் வளர்த்து வந்தாள். விஷ்ணு அவர்கள் எழுவருக்கும் பெயரிட்டார். அவர்கள் பத்திரகாளியின் பாலான பதநீரை உண்டு வளர்ந்தனர். இவர்கள் காளியின் அடியிலேயே கன்னியர்களாக அமர்ந்தனர். இவர்களை வழிபடும் பூஜை ஒன்று வழக்கில் உள்ளது.

பூஜை முறை

ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் தெய்வ அலங்காரம் செய்து பூசாரியின் முன் வந்து நிற்பர். பூசாரி அவர்களுள் ஏழு பேரைத் தேர்வு செய்து கோவிலுள் பூஜைக்கு கூட்டிச் செல்வார். ஏழு கன்னிகள் அம்மன் அலங்காரத்தில் பதினைந்து நாட்கள் சுற்றியுள்ள முப்பது கிராமங்களுக்கு வீதியுலா செல்வர். இவர்களை இப்பகுதி மக்கள் அம்மனாக வழிபடுவர்.

சக்தியின் வடிவம்

பொதிகை மலையடிவாரத்தில் உள்ள ஏழை விவசாயக் குடும்பத்தில் ஏழு கன்னிமார்கள் அவதரித்தனர். பார்வதி, பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், காத்தாயி, பூங்காவனம் என்னும் எழுவர். இவர்கள் ஏழு பேரும் சக்தியின் வடிவாக பூமியில் அவதரித்தவர்கள். சிவன் கொடுத்த சாபத்தால் தங்கள் வல்லமை தெரியாமல் பூமியில் வாழும் நிலையடைந்தவர்கள்.

ஏழு கன்னிகளும் திருமண வயதை எட்டியது பெற்றோர் எழுவருக்கும் மணம் செய்ய எண்ணி மணமகன் தேடினர். ஏழை குடும்பம் என்பதால் ஏழுபேருக்கும் மணம் அமையவில்லை. தங்கள் சக்தியை அறிந்திடாத எழுவரும் மணலில் லிங்கம் செய்து சிவனை நோக்கி தவமிருந்தனர்.

சிவன் அவர்களுக்குக் காட்சி கொடுக்கும் முன் அவர்களிடம் திருவிளையாடல் செய்ய எண்ணினார். ஏழை விவசாயி வேடம் பூண்டு அவர்கள் எழுவர் முன் தோன்றினார். பூஜை செய்துக் கொண்டிருந்தவர்களை தழுவினார். யாரோ ஒரு இளைஞன் தங்களை தழுவுவதைக் கண்டு ஏழு பேரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்து ஓடினர்.

பிரிந்த ஏழு சகோதரிகளும் திரும்பச் சேர ஓராண்டானது. ஓராண்டிற்கு பின் இணைந்த சகோதரிகளில் காத்தாயி மட்டும் கையில் குழந்தையுடன் வந்தாள். அவளை கண்டு அச்சமும், சந்தேகமும் கொண்ட மற்ற சகோதரிகள் அவளைச் சூழ்ந்து நடந்ததை வினவினர். காத்தாயி, "நாம திக்குக்கு ஒருவரா ஓடும் போது அந்த இளைஞன் என்னை நோக்கி வந்து என்னுடன் கூடினான். அவன் செயலால் வந்தது இந்த குழந்தை" என்றாள். அவளை கூறிய பின்பும் சகோதரிகள் நம்பாததைக் கண்டு, "நான் என்ன செய்தால் நீங்கள் என்னை நம்புவீங்க?" என்றாள்.

மற்ற ஆறு பேரும் அவளை குழந்தையுடன் தீயில் ஏறும் படி சொன்னனர். காத்தாயியும் அவ்வாறு செய்ய பணிந்தாள். காத்தாயி ஏற தீ மூட்டப்பட்டது. காத்தாயி அதனுள் பாய எண்ணிய சமயம் சிவன் அவர்கள் முன் தோன்றினார். "இவை எல்லாம் என் திருவிளையாடல் அன்றி வேறில்லை. நீங்கள் ஏழு பேரும் சக்தியின் வடிவங்கள் என் சாபத்தால் பூமியில் பிறக்கப் பணிந்தவர்கள். நீங்கள் திசைக்கு ஒருவராக சென்று கோவில் கொண்டு மக்களைக் காத்தருள்க. உங்களுக்குத் துணையாக காவல் தெய்வங்கள் வந்தமர்வர்" என்று சொல்லி மறைந்தார்.

ஏழு கன்னிமார்களும் திருநெல்வேலியில் உள்ள சன்னாசி நல்லூர், புலியூர், காலிங்கராயநல்லூர், வ.சித்தூர், குமாரை, வெங்கனூர், அரகண்ட நல்லூர் ஆகிய இடங்களில் தெய்வங்களாக அமர்ந்தனர்.

வழிபடும் ஊர்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஏழு கன்னிமார்கள் வெவ்வேறு கதை வடிவில் தெய்வங்களாக உள்ளனர். மேலே சொன்ன கதைகள் நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் வழக்கில் உள்ளது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page