under review

எக்காளக்கூத்து

From Tamil Wiki

To read the article in English: Ekkalakoothu. ‎

எக்காளக்கூத்து (நன்றி: Wikiwand)

எக்காளம் என்னும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஆடப்படும் நிகழ்த்துகலை எக்காளக்கூத்து. நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினரான தொட்டியாம்பட்டி நாயக்கர் சாதியினரோடு தொடர்புடையது இக்கலை. அவர்களால் மட்டுமே இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

நடைபெறும் முறை

தொட்டியாம்பட்டி நாயக்கர் சாதியினர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வேளாண் தொழிலும், மேய்ச்சல் தொழிலும் செய்பவர்கள். இவர்கள் வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்ட சாதியினர். அதற்காகவே வேட்டை நாய்களை வளர்ப்பர்.

இவர்கள் காட்டுப்பகுதிக்கோ, மலைப்பகுதிக்கோ கூட்டமாகச் சென்று வேட்டையாடி வரும் விலங்கினைப் பூக்களால் அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்துவந்து ஊர் பொது இடத்தில் வைப்பர். அதற்குப் பூசை செய்வர். இவ்வாறு ஊர்வலமாக வேட்டையாடிய விலங்கினை எடுத்துவரும்போது உறுமி, பறை, கிடுமுடி போன்ற இசைக்கருவிகளை முழக்குவர். எருமைக் கொம்பால் செய்த எக்காளம் என்னும் இசைக்கருவியை ஊதுவர். இந்த இசைக்கருவிகளின் இசைக்கேற்ப வேட்டைக்குச் சென்றோர் ஆடிக் கொண்டு வருவர். வேட்டை ஊர்வலம் மறுபடியும் ஊர்ப் பொது இடத்துக்குக் கொண்டு வரப்படும். அங்கே விலங்கினைக் கூறு போடுவர். அதை வேட்டைக்கு வந்த உறுமிக்காரர், வேல் ஆயுதத்தை எடுத்து வந்தவர், உதவியாக வந்தவர் ஆகியோர்களுக்கும் பங்கு வைத்துக் கொடுப்பர். வேட்டை நடந்த அன்று இரவு சாப்பாடு முடிந்த பின்னர் கும்மி, தேவராட்டம், ஒயிலாட்டம் ஆகிய ஆட்டங்களை ஆடுவர்.

வேட்டையாடுவது சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட பின்னர் இந்த ஆட்டமும் வழக்கொழிந்தது.

நிகழ்த்தும் சாதிகள்

இக்கலை நாயக்கர் பிரிவின் ஒரு சாதியினரான தொட்டியாம்பட்டு (தொட்டியப்பட்டி) நாயக்கரால் நிகழ்த்தப்படுகிறது.

இசைக்கருவிகள்

  • எருமைத் கொம்பால் செய்த எக்காளம்
  • உறுமி
  • பறை
  • கிடுமுடி

நடைபெறும் இடம்

இக்கலை தொட்டியாம்பட்டி நாயக்கர் என்னும் வேட்டை சாதியினரால் வேட்டைக்குச் செல்லும் போது நிகழ்த்தப்படுகிறது. வேட்டை ஊர்வலம் தொடங்கும் ஊர் பொது இடத்தில் இக்கலை நிகழும்.

நிகழ்த்துபவர்கள்

  • உறுமிக்காரர்
  • வேட்டைக்கான வேல் ஆயுதத்தை ஏந்தி வந்தவர்
  • வேட்டைக்கு உதவியாக வந்தவர்

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page