under review

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

From Tamil Wiki
இசுலாமியச் சிற்றிலக்கியங்கள், முனைவர் ஜெ.ஆர். இலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு

தமிழ் இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கிய வகைகளைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். அவை தவிர்த்து இஸ்லாமிய சமயம் சார்ந்த சிற்றிலக்கியங்களையும் இயற்றியுள்ளனர்.

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

மாலை, கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ் என தமிழ் இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கிய வகைகளைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். அவை தவிர்த்து இஸ்லாமிய சமயத்திற்கே உரித்தான தனி வகைச் சிற்றிலக்கியங்களையும் இஸ்லாமியப் புலவர்கள் அளித்துள்ளனர்.

இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களின் பொருண்மை

இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் இஸ்லாமிய சமயம் சார்ந்த கருத்துக்களையும், நெறிமுறைகளையும், போதனைகளையும் முன் வைக்கின்றன. இஸ்லாமிய சமயம் சார்ந்த பெரியோர்களின் வாழ்க்கையை, அறிவுரைகளைக் கொண்டதாகவும், இஸ்லாமியப் புனித நகரங்களான மக்கா, மதீனா, பாக்தாத், நாகூர், ஆஜ்மீர் போன்றவற்றின் பெருமை, சிறப்புகளைப் பேசுவதாகவும் இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள் அமைந்துள்ளன.

'படைப் போர்', 'முனாஜாத்து', 'கிஸ்ஸா', 'மஸ்அலா', 'நாமா' என்பன இஸ்லாமிய சமயத்திற்கே உரித்தான தனி வகைச் சிற்றிலக்கியங்களாகும்.

படைப் போர்

இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களுள் தமிழ்ப் பெயருடன் விளங்கும் ஒரே சிற்றிலக்கியம் படைப் போர். போரைப் பற்றிய பிரபந்தமே படைப் போர். தமிழ்ச் சிற்றிலக்கியமாகிய பரணிக்கு இணையானதாக இவ்விலக்கியம் கருதப்படுகிறது. ஆனால், பரணியின் உறுப்புக்களாகிய கடைதிறப்பு, காளி பாடியது, பேய் பாடியது , பேய் முறைப்பாடு போன்றவை இஸ்லாமிய மரபிற்கும், அறநெறிக்கும் ஒவ்வாதவை என்பதால், அவற்றை விடுத்து , பரணியின் ஒரு பகுதியாகிய ’போர் பாடியது’ என்பதை மட்டும் மையமாக வைத்து ‘படைப் போர்’ இலக்கியம் அமைக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம், ஹஸ்ரத் அலி , கிமாம் ஹசன் , இமாம் ஹுசைன் போன்றோர் எதிரிகளோடு போரிட்டு வென்ற வரலாற்றினை எடுத்துக் கூறும் இலக்கியமாக படைப் போர் இலக்கியம் அமைந்துள்ளது.

முனாஜாத்து

முனாஜாத்து எனும் அரபுச்சொல்லுக்கு, ’இரகசியம் பேசுதல் ’ என்பது பொருள். இச்சொல் வழிபாடு, பிரார்த்தனை என்பதையும் குறிக்கிறது . இறைவனையும் அவனது அடியார்களையும் போற்றிப் புகழ்ந்து அருள் வேண்டும் சிற்றிலக்கிய வகையே முனாஜாத்து எனப்படுகிறது.

கிஸ்ஸா

இஸ்லாமிய போதனைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியம் 'கிஸ்ஸா'. இஸ்லாமிய மார்க்க வரலாற்று நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட கிஸ்ஸாக்கள், இஸ்லாமிய மார்க்கக் கருத்துகளை, போதனைகளை மையமாகக் கொண்ட கிஸ்ஸாக்கள் என இதில் இரு வகைகள் அமைந்துள்ளன.

கிஸ்ஸா இலக்கியங்களில் சில செய்யுளாகவும், சில உரைநடையாகவும் , இன்னும் சில செய்யுள், உரைநடை இரண்டும் கலந்ததாகவும் அமைந்துள்ளன.

மஸ்அலா

இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களையும் நெறிகளையும் கேள்வி - பதில் வகையில் விளக்குவதே மஸ்அலா. ‘மசலா’ என்றும் இது அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்குபவையாக மசலா இலக்கியங்கள் அமைந்துள்ளன.

நாமா

’நாமே’ (Nameh) எனும் பாரசீகச் சொல்லின் தமிழ் வடிவமே ‘நாமா’. நாமே என்பதற்கு கதை அல்லது நூல் அல்லது தொடர் வரலாறு எனப் பொருள். நாமா என்பது இஸ்லாமிய மதக் கதைகளைக் கூறுவதாகும். இஸ்லாமியக் கருத்துகளையும் , வரலாறுகளையும் தமிழுலகில் பரப்புவதற்காக இஸ்லாமியப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றிலக்கிய வகையே ’நாமா’.

இஸ்லாமியர்களின் இலக்கியப் பங்களிப்பு

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள் காத்திரமான பங்களிப்புகளைத் தந்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், புலவர் வரலாறுகளில் இஸ்லாமியர்களின் இலக்கியப் பங்களிப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இஸ்லாமியர்கள் படைத்துள்ளதாகவும், அவற்றில் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையே எழுநூறுக்கும் மேல் இருக்கும் என்றும் தனது ’இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார், முனைவர் ஜெ.ஆர். இலட்சுமி.

உசாத்துணை


✅Finalised Page