under review

ஆர். பாலசரஸ்வதி

From Tamil Wiki
ஆர். பாலசரஸ்வதி

ஆர். பாலசரஸ்வதி (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1928) திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகி.

வாழ்க்கைக் குறிப்பு

பாலசரஸ்வதி ஆகஸ்ட் 28, 1928-ல் ஆந்திர பிரதேசத்திலுள்ள குண்டூரில் பார்த்தசாரதி ராவ், விசாகலட்சுமி இணையருக்குப் பிறந்தார்.

ஆர். பாலசரஸ்வதி

தனிவாழ்க்கை

வெங்கடகிரி ராஜாவின் நான்காவது மகனான ராகாராவ் ப்ரத்யும்னா கிருஷ்ணா மஹிபதி சூர்ய ராவ் பகதூரை 1944-ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பாலசரஸ்வதி இரண்டாவது மனைவி. இவர்களுக்கு வெங்கட ராஜா கோபாலகிருஷ்ண சூர்யராவ், கோபாலகிருஷ்ண மஹிபதி சூர்யராவ் என இரு மகன்கள். 1974-ல் கணவர் காலமானதும் ஹைதராபாதில் குடியேறினார்.

இசை வாழ்க்கை

பாலசரஸ்வதி அளத்துரு சுப்பையா என்பவரிடம் இசை கற்றார். ஆறாவது வயதில் எச்.எம்.வி இசைத்தட்டில் தனது குரலைப் பதிவு செய்தார். ஆர். பாலசரஸ்வதி அனைத்திந்திய வானொலியில் முதன் முதலாக மெல்லிசைப் பாடல்களைப் பாடியவர்.

ஆர். பாலசரஸ்வதி
பின்னனிப்பாடகர்

பாலசரஸ்வதி தெலுங்குத் திரைப்படங்களில் முதன் முதலாக பின்னணி பாடல் பாடினார். பாக்கிய லட்சுமி (1943) தெலுங்குத் திரைப்படத்தில் கமலா கோட்னிஸ் என்ற நடிகைக்கு பின்னணிப் பாடல் பாடினார். ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், சி.ஆர். சுப்பராமன், எஸ்.வி. வெங்கட்ராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். அனுமந்தராவ், எஸ். ராஜேஸ்வர ராவ், சித்தூர் வி. நாகையா, கண்டசாலா, எஸ். தட்சிணாமூர்த்தி, வேதா, மாஸ்டர் வேணு, ஜி. கோவிந்தராயுலு, எம்.பி. சீனிவாசன் ஆகியோரின் இசையமைப்பில் பாடல்களைப் பாடினார். கண்டசாலா, ஏ.எம். ராஜா, டி.எம். சௌந்தரராஜன், டி.ஏ. மோதி, சீர்காழி கோவிந்தராஜன், சு. ராஜம் ஆகியோருடனும் இணைந்து பின்னணிப் பாடல்களைப் பாடினார்.

திரை வாழ்க்கை

பாலசரஸ்வதி 1930-கள் முதல் 1960-கள் வரை தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1936-ல் சி. புல்லையாவின் இயக்கத்தில் உருவான சதி அனுசூயா, பக்த துருவா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நடிகையாகப் பாடி நடித்தார். இயக்குநர் கே. சுப்பிரமணியம் தனது தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அழைத்தார். பக்த குசேலா, பாலயோகினி, திருநீலகண்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். துக்காராம் திரைப்படத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயர் துக்காராம் வேடத்தில் நடிக்க அவரது மகளாக தஞ்சாவூர் பாலசரஸ்வதி நடித்தார்.

ஆர். பாலசரஸ்வதி

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  • பக்த குசேலா (1936)
  • பாலயோகினி (1936)
  • துகாராம் (1938)
  • திருநீலகண்டர் (1939)
  • தாசிப் பெண் (ஜோதிமலர்) (1943)
  • பில்ஹணா (1948)

உசாத்துணை


✅Finalised Page