under review

வெட்சித்திணை

From Tamil Wiki
Revision as of 12:07, 16 January 2023 by Logamadevi (talk | contribs)

பகைவரைப் போருக்கு அழைத்து அதில் வெற்றி பெற விரும்பும் ஒரு நாட்டினர் முதலாவதாக அப்பகை நாட்டில் உள்ள பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வரும் போர்முறைக்கு 'வெட்சித்திணை’ என்று பெயர். அவ்வீரர்கள் வெட்சிப் பூவைச் சூடிச் செல்வர். பெரும்பான்மையும் மண் கவர நினைக்கும் வேந்தனே முதலில் போர்ச் செயலைத் தொடங்குவான். அவன் முதலில் செய்வது ஆநிரை கவர்தலே. 'வெட்சி நிரை கவர்தல்' என்பது பழம்பாடல் ஒன்றின் பகுதி.

இவ்வெட்சிப் போர் மன்னுறு தொழில், தன்னுறு தொழில் என இரு வகைப்படும்.

மன்னுறு தொழில்

தன் நாட்டு மன்னன் கட்டளை இட, அதனை ஏற்று, பகை நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருவது மன்னுறு தொழில் எனப்படும்.

தன்னுறு தொழில்

மன்னனது கட்டளை இன்றியும், அவனது குறிப்புணர்ந்த வீரன் பகை நாட்டுக்குத் தானே சென்று, பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருவது தன்னுறு தொழில் எனப்படும்.

வெட்சித்திணையின் துறைகள்

வெட்சித் திணையையும் அதற்குரிய துறைகளையும் புறப்பொருள் வெண்பாமாலையின் முதல் நூற்பா கூறும், அது வருமாறு,

வெட்சி, வெட்சி அரவம், விரிச்சி, செலவு,
வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்,
பூசல் மாற்றே, புகழ்சுரத் துய்த்தல்,
தலைத்தோற் றம்மே, தந்துநிறை, பாதீடு,
உண்டாட்டு, உயர்கொடை, புலனறி சிறப்பே,
பிள்ளை வழக்கே, பெருந்துடி நிலையே,
கொற்றவை நிலையே, வெறியாட்டு உளப்பட
எட்டு இரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும்.

வெட்சி ஒழுக்கத்தில் ஐந்து நிலைகளைக் காணமுடியும். அவை, கவர்தல், பேணல், அடைதல், பகுத்தல், வணங்கல் என்பனவாம். வெட்சித் திணையின் 19 துறைகளையும் இந்த 5 நிலைகளில் அடக்கலாம்.

கவர்தல் -வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள் (7)

பேணல் -பூசல் மாற்று, சுரத்துய்த்தல் (காட்டு வழியில் ஓட்டிச் செல்லுதல்)(2)

அடைதல்-தலைத்தோற்றம், தந்துநிறை (2)

பகுத்தல்- பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை(6)

வணங்கல்-கொற்றவை நிலை, வெறியாட்டு(2)

எடுத்துக்காட்டு

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி
நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

பொருள் : பகை அரசன் ஒருவன் மொற்றொரு அரசனின் நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகத் (வெட்சிப் போர் புரிவதற்காகத்) தன் படைவீரர்களைத் திரட்டினான்; அவர்களுக்கு உண்டாட்டு நடத்தினான். அவ்வமயம், போரில் வெற்றி பெற்றால் அரசனிடமிருந்து எதைப் பரிசாகப் பெறுவது சிறந்தது என்று வீரர்களுக்கிடையே உரையாடல் நிகழ்ந்தது. அங்கிருந்து அதைக் கேட்ட புலவர் ஒருவர் வீரர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை இப்பாடலில் கூறுகிறார்.மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெல்லிய நடையையுடைய எருமையின் பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றுக்களையுடைய பசிய பயற்றின் தோட்டைப் படுக்கையாகக் கொண்டு கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம். நாரால் வடிக்கப்பட்டு பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் மருதநிலத்தூர்களைப் பெறுவதும், கூர்மையான நுனியையுடைய நீண்ட வேல் தைத்து மார்புடன் மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு உரியதாகும்.

வெட்சியுள் கரந்தை

இன்றைய நிலையில் புலவர்கள் கரந்தை என்னும் திணையைத் தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். கரந்தை ஆ நிரைகளை மீட்டுக்கொள்வது ஆதலால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம்

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக்கழகம்

புறம்400-தண்ணடை பெறுதல்



✅Finalised Page