under review

மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்

From Tamil Wiki
மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார்

மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் (1883 - ஜூன் 27, 1962) தமிழில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை முன்வைத்து எழுதிய எழுத்தாளர். சாதி ஒழிப்பு, பெண்கல்வி, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடியவர். ஈ.வெ.ராமசாமி (பெரியார்) அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் முதன்மையான பிரச்சாரகராக இருந்தவர். தாசிமுறையை ஒழிக்க போராடியவர். 'தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' என்னும் நாவலை எழுதியவர்.

பிறப்பு, இளமை

திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். மூவாலூர் என்னும் ஊருக்கு பின்னர் குடியேறினர். ராமாமிர்தத்தின் தந்தையான கிருஷ்ணசாமி குடும்பத்தை கைவிட்டுச் சென்றார். குழந்தையை வளர்க்கமுடியாத சின்னம்மாள் ஒரு தேவதாசியிடம் தன் பத்துவயது மகளை விற்றார். இசையும் நாட்டியமும் கற்ற ராமாமிர்தத்தை ஒரு முதியவருக்கு ஆசைமணம் (முறையில்லா திருமணம்) செய்துவைக்க வளர்ப்பு அன்னை முயன்றார். அதை எதிர்த்து தனக்கு இசையும் நடனமும் கற்றுத்தந்த சுயம்புப் பிள்ளை என்பவரை ராமாமிர்தம் மணந்தார். வடுவூர் கோயிலில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

அரசியல் பணிகள்

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்

ராமாமிர்தம் அம்மையாரின் திருமணத்திற்கு ஊரில் கடுமையான எதிர்ப்பு உருவானது. அவர்கள் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டனர். அதை எதிர்த்துபோராடினார்கள். 1917-ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை பகுதியில் இசைவேளாளர் குடும்பத்துப் பெண்களை இணைத்து நாகபாசத்தார் சங்கம் என்கிற அமைப்பை ஆரம்பித்தார். (பிற்பாடு அது இசை வேளாளர் சங்கமாக மாறியது). இசைவேளாளர் குடியில் திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு திருமணத்தை நடத்திவைப்பது இந்த அமைப்பின் நோக்கம். நாகபாசத்தார் சங்கம் சார்பில் இரண்டு மாநாடுகளை மயிலாடுதுறையில் கூட்டினார். இந்த மாநாடுகளில் திரு.வி.கல்யாணசுந்தரனார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் தன்னுடைய நவசக்தி இதழில் ராமாமிர்தம் அம்மையார் பற்றி எழுதினார். அது காந்தியின் கண்களுக்குப் படவே காந்தி ராமாமிர்தம் அம்மையாரை காங்கிரஸில் இணையும்படி அழைத்தார். பின்னாளில் ராமாமிர்தம் அம்மையாருக்கு விருது வழங்கியபோது சி.என்.அண்ணாத்துரை 'ஐம்பதாண்டுகளுக்கு முன்பு சமூக சீர்திருத்தம் செய்ய ஆள்தேடியபோது காந்தியாரின் கண்ணில் அம்மையார் மட்டும்தான் பட்டார்’ என அதைக் குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த தி.ரு.வி.கல்யாணசுந்தரனார், வரதராஜுலு நாயிடு, ஈ.வெ.ராமசாமிப் பெரியார் போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். ராமாமிர்தம் அம்மையார் கதர்பிரச்சாரத்தில் கடுமையாக பணியாற்றினார்.

1925-ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறியபோது ராமாமிர்தத்தம்மையாரும் வெளியேறினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியபோது அதில் தீவிரமாக ஈடுபட்டார். ஈ.வெ.ராமசாமி பெரியார் நடத்திய 'குடியரசு’ இதழில் ராமாமிர்தம் அம்மையாரின் கட்டுரைகள் வெளிவந்தன. 1930-ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938-ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1947-ல் தேவதாசி முறை ஒழிந்தது. 1949-ல் ஈ.வெ.ராமசாமி பெரியார் இளவயதான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது உருவான கருத்து வேறுபாடு காரணமாக சி.என்.அண்ணாத்துரை திராவிடர் கழகத்தை விட்டு விலகும் போது அவருடன் இராமாமிர்தம் அம்மையாரும் திராவிடர் கழகத்தை விட்டுவிலகினார். அதன்பிறகு சி. என். அண்ணாத்துரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளரானார். ஜூன் 27, 1962-ல் அவர் காலமாகும்வரை தி.மு. க ஆதரவாளராகவே இருந்தார்.

சமூகப்பணிகள்

தாசிமுறை ஒழிப்பு

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் தாசிமுறை ஒழிப்புக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தார். தேவதாசி முறை ஒழிப்புக்காகப் போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து போராடினார். 1929 முதல் பலமுறை சட்டமுயற்சிகள் நிகழ்ந்தாலும் 1947-ல் நிறைவேற்றப்பட்ட முழுமையான சட்டம் வழியாகவே தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

பகுத்தறிவுப் பிரச்சாரம்

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுப்பிரச்சாரம் ஆகிய நோக்கங்களுடன் தொடர்ச்சியாக மேடையில் பேசியும் கட்டுரைகள் எழுதியும் வந்தார்.

இலக்கியவாழ்க்கை

மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் சுயமரியாதைக் கருத்துக்களையும் தாசிமுறை ஒழிப்பையும் முன்வைத்து 'தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதினார். அந்நாவல் தாசிமுறை ஒழிப்புப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியது. சி.என்.அண்ணாத்துரை நடத்திய 'திராவிட நாடு’ இதழில் 'தமயந்தி’ என்கிற தொடர்கதையையும் எழுதினார்

மறைவு

மயிலாடுதுறையில் தன் முதுமையைக் கழித்த ராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27, 1962-ல் தன் 70-வது வயதில் மறைந்தார்.

நினைவுகள்,வாழ்க்கை வரலாறுகள்

நினைவு திட்டம்

1989-ஆம் ஆண்டு கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5000-த்தை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அதற்கு அம்மையாரின் நினைவாக ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்’ என்று பெயரிடப்பட்டது

வாழ்க்கை வரலாறுகள்
  • மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும் - பா.ஜீவசுந்தரி
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - தமிழ்ச்செல்வன்

இலக்கிய இடம்

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் எழுதிய தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால சீர்திருத்த இலக்கியப்படைப்பாக கருதப்படுகிறது. நேரடியான பிரச்சார நோக்கம் கொண்ட படைப்பு இது. மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பகுத்தறிவுப்பிரச்சாரம், பெண்விடுதலை ஆகியவற்றுக்கு பங்களிப்பாற்றிய சீர்திருத்தவாதி.

நூல்கள்

  • தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்
  • தமயந்தி

உசாத்துணை

  • மூவலூர் இராமாமிர்தம்: வாழ்வும் பணியும் - பா.ஜீவசுந்தரி
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - தமிழ்ச்செல்வன்


✅Finalised Page