under review

முருகபூபதி

From Tamil Wiki
லெ.முருகபூபதி
முருகபூபதி

லெட்சுமணன் முருகபூபதி ( பிறப்பு: ஜூலை 13, 1951) ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையின் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர்.

பிறப்பு,கல்வி

லெ. முருகபூபதியின் முன்னோர் தமிழகத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். இலங்கையின் வட மேல் மாகாணத்தின் நீர்கொழும்பு பிரதேசத்தில் இலட்சுமணன் - கதிர்மாணிக்கம் இணையருக்கு ஜூலை 13,1951- ல் பிறந்தார் முருகபூபதி. இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 -ல் விவேகானந்த வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

முருகபூபதி 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது மெல்பேர்னில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் 1972-ல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை மூலமாக டொமினிக் ஜீவா நடத்திவந்த மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'சுமையின் பங்காளிகள்' 1975-ல் வெளியானது. அதன்பின்னர், இலங்கையிலிருந்து வெளிவரும் மல்லிகை, பூரணி, மாணிக்கம், கதம்பம், புதுயுகம், தேசாபிமானி மற்றும் வீரகேசரி பத்திரிகை ஆகியவற்றில் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களை 'ரஸஞானி" மற்றும் 'ரிஷ்யசிருங்கர்’ ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.

1985-ஆம் ஆண்டு சோவியத் மாஸ்கோவில் நடைபெற்ற அனைத்துலக இளைஞர் மாநாட்டிற்கு, வீரகேசரி பத்திரிகையின் சார்பில் கலந்துகொண்ட முருகபூபதி, இந்தப் பயணம் குறித்த தொடர் ஒன்றை 'சமதர்ம பூங்காவில்' என்ற பெயரில் 15 வாரங்கள் தொடராக எழுதினார். இதன்மூலம், முருகபூபதி இலங்கைத் தமிழ் பத்திரிகை உலகிலும் எழுத்தாளர்கள் வட்டத்திலும் பரவலாக அறியப்பட்டார்.

இதழியல்

1972-லிருந்து 1977-ஆம் ஆண்டுவரை கொழும்பு வீரகேசரி தேசிய தமிழ் பத்திரிகையில் பிராந்திய நிருபராகப் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, 1977-ஆம் ஆண்டு பத்திரிகையின் ஒப்புநோக்காளராக பணியாற்றத் தொடங்கினார். 1984 -ன் நடுப்பகுதியில், வீரகேசரியின் ஆசிரியர் பீடத்தில் துணை ஆசிரியரானார். 1987-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அந்தப் பணியிலிருந்தார். 1987-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

இலக்கிய இடம்

முருகபூபதி தரவுகளின் சேகரம், அரசியல், சமூகம், இலக்கியம் சார்ந்த அனைத்து துறைகளிலும் நினைவுத்திறன் ஆகியவற்றால் ஓர் இலக்கிய ஆவணப்பதிவாளராக முக்கியமானவர். ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த பின்னரும் தொடர்ச்சியாக இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் நூல்கள் பற்றியும் இலக்கிய நிகழ்வுகள் பற்றியும் அவர் எழுதிவரும் கட்டுரைகளும் பதிவுகளும் இலக்கிய ஆய்வுகளுக்கு மூலப்பொருட்களாக அமைகின்றன.

முருகபூபதி எழுதிய ஒரேயொரு புத்தகத்தைத் தவிர, மிகுதி அனைத்தும் அவர் புலம்பெயர்ந்த பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதப்பட்டவை. அந்த நூல்கள் அனைத்திலும் புதிய நிலங்கள் பற்றிய அவரது புறவயமான பார்வையும் நுட்பமான அவதானங்களும் உள்ளன.

"முருகபூபதி அவர்கள் சிற்றிலக்கியப் பரப்பிற்குள் செயற்பட்டுக்கொண்டே மிகச்சிறந்த ஆய்வு நூலையும் வரவாக்கியுள்ளார். ஆய்வு என்பது அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவ வேண்டும். அவ்வகையில் அவர் எழுதியிருக்கும் 'இலங்கையில் பாரதி' எனும் நூல் சிறந்த ஆய்வு நூலாகும்" என இலங்கையின் ஓய்வுபெற்ற ஆசிரியை நீலாம்பிகை கந்தப்பு குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதை
  • சுமையின் பங்காளிகள் (1975)
  • சமாந்தரங்கள் (1989)
  • வெளிச்சம் (1998)
  • எங்கள் தேசம் (2000)
  • கங்கை மகள் (2005)
  • நினைவுக்கோலங்கள் (2006)
  • மதக செவனெலி (Shadows Of Memories) - மொழிபெயர்ப்பு (2012)
  • கதைத் தொகுப்பின் கதை (2021)
செய்தி நூல்கள்
  • பறவைகள் (2001)
சிறுவர் இலக்கியம்
  • பாட்டி சொன்ன கதைகள் (1997)
பயண இலக்கியம்
  • சமதர்மப்பூங்காவில் (1990)
கடித இலக்கியம்
  • கடிதங்கள் (2001)
நேர்காணல்
  • சந்திப்பு (1998, இலக்கிய மற்றும் ஊடக ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய  நூல்)
கட்டுரை நூல்கள்
  • நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995, தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள்
  • இலக்கிய மடல் (2000)
  • மல்லிகை ஜீவா நினைவுகள் (2001)
  • எம்மவர் (2003, அவுத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரத்திரட்டு)
  • கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் (2004)
  • ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள் (2005)
  • உள்ளும் புறமும் (2011, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும்)
  • சொல்ல மறந்த கதைகள் (2014)
  • சொல்ல வேண்டிய கதைகள் (2017)
  • சொல்லத்தவறிய கதைகள் (2019)
  • இலங்கையில் பாரதி - ஆய்வு நூல் (2019)
  • நடந்தாய் வாழி களனி கங்கை (2021)
  • யாதுமாகி (2022)
  • வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (2022)

விருதுகள்

  • 'சுமையின் பங்காளிகள்' - 1975-ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது
  • 'பறவைகள்' - 2002-ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது
  • 2002-ஆஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது
  • பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது (2012, ஆஸ்திரேலியா)
  • அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018-ல் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது

அமைப்புச்செயல்பாடுகள்

  • முருகபூபதி பங்காற்றிய இலக்கிய அமைப்புகள்
    • 1985-ல் நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்
    • ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (2004 முதல் இன்றுவரை)
    • இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 முதல் இன்றுவரை)

உசாத்துணை


✅Finalised Page