under review

மறைமலையடிகள்

From Tamil Wiki
Revision as of 09:05, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

To read the article in English: Maraimalai Adigal. ‎

மறைமலை அடிகள்

மறைமலையடிகள் (மறைமலை அடிகள், சுவாமி வேதாசலம். Maraimalai adikal) (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடித் தலைவர். சைவத் திருப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும் பெரும்பங்காற்றியவர். வைதீக விமர்சனம் செய்தவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர், துறவி . சமயம், நவீன இலக்கியம், அறிவியல் ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியவர். தமிழியம் என்னும் பண்பாட்டு- அரசியலியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

மறைமலை அடிகள்

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். 1916-ல் தம் பெயரை மறைமலை என தனித்தமிழுக்கு மாற்றிக்கொண்டார். (வேதம்-மறை, அசலம்-மலை). நாகப்பட்டினம் அருகே காடம்பாடி கிராமத்தில் சொக்கநாத பிள்ளைக்கும் சின்னம்மாளுக்கும் மகனாக ஜூலை 15, 1876-ல் பிறந்தார். (திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது) நாகப்பட்டினத்தில் அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்த சொக்கநாதபிள்ளை மறைமலை அடிகள் பத்து வயதாக இருந்தபோது மறைந்தார்.திருக்கழுக்குன்றம் கோயிலின் தெய்வமான வேதாசலமூர்த்தியை வழிபட்டு அவர் பிறந்தமையால் இப்பெயர் போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மறைமலை அடிகள் சிறுவயதில் தன் அன்னையிடமும், திண்ணைப் பள்ளி ஆசிரியர்களிடமும் படித்துவிட்டு நாகப்பட்டினம் வெஸ்லியன் மிஷன் பள்ளியில் படித்தார். நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சூளை சோமசுந்தர நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கியங்களையும் முத்துவீரைய இலக்கணம் எழுதிய முத்துவீரைய உபாத்தியாரிடம் தமிழ் இலக்கணமும் படித்தார். சிவஞானபோதத்தைச் சோமசுந்தர நாயகரிடம் தீக்கை பெற்றுக்கொண்டு படித்தார். இவர் 15 - 21 வயதுக்குள்ளேயே தொல்காப்பியம் சங்கப்பாடல், சித்தாந்த சாத்திரங்கள் போன்றவற்றை நெட்டுருச் செய்துவிட்டார் என்கிறார் இவரது வரலாற்றை எழுதிய மறை. திருநாவுக்கரசு. தனிமுயற்சியில் படித்து ஆங்கிலத்திலும் வடமொழியிலும் புலமை உடையவரானார்.

தனிவாழ்க்கை

1893-ல் மனோன்மணியம் நாடகம் வெளிவந்தபோது அதைப் படித்துவிட்டு இவர் எழுதிய கடிதம் பெ.சுந்தரம் பிள்ளையுடன் அறிமுகமாகக் காரணமாகியது. சுந்தரம் பிள்ளையைக் காண திருவனந்தபுரத்திற்குச் சென்றார். இவர் தமிழாசிரியராகப் பணியாற்றும் தகுதியுடையவர் என்ற சிபாரிசுக் கடிதத்தை சுந்தரம் பிள்ளை இவருக்குத் கொடுத்தார். 1896-ல் திருவனந்தபுரம் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகச் சேர்ந்தார்.

1893-ல் திருவனந்தபுரத்தில் இருந்த சைவசித்தாந்த சபையில் சித்தாந்த பாடம் நடத்தினார். 1898 முதல் 1911 வரை 13 ஆண்டுகள் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியர் ஆனார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இவருக்கு ஆதரவாக இருந்து ஆய்வுக்கு வழிகாட்டியாக அமைந்தவர் வில்லியம் மில்லர். இக்காலங்களில் பரிதிமாற்கலைஞர் இக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். கல்லூரியில் மறைமலை அடிகளாரின் மாணவர்களில் வ.சு. செங்கல்வராய பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார், சோமசுந்தரபாரதி, எஸ். வையாபுரிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்.

1911-லிருந்து சென்னை, பல்லாவரத்தில் தன்னை சமரச சன்மார்க்க குருபோதகராக அறிவித்துக்கொண்டார். சைவப் பணியை மக்கள் பணி என ஆக்கிக்கொண்டார். அதன்பின் சுவாமி என்ற அடைமொழி இவருடன் சேர்ந்துகொண்டது.

1893-ல் சவுந்திரவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். இவரின் நான்கு மகன்கள்: திருஞானசம்பந்தம், திருநாவுக்கரசு,, மாணிக்கவாசகம், சுந்தரமூர்த்தி, இரு மகள்கள்: திரிபுரசுந்தரி,நீலாம்பிகை. இவர் மகள் நீலாம்பிகை அம்மையார் தமிழறிஞர். இவர் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நிறுவனர் திருவரங்கம் பிள்ளையை மணந்தார். திருநாவுக்கரசு மறை.திருநாவுக்கரசு என்ற பெரில் தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மிக விரிவான நூலாக எழுதினார். மறைமலை அடிகள் தன் பிள்ளைகளான திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தினார். திருஞான சம்பந்தம்- அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் -: மணிமொழி, சுந்தரமூர்த்தி - அழகுரு, திரிபுரசுந்தரி - முந்நகரழகி

மருத்துவம்,

மறைமலையடிகள் சித்தமருத்துவம், இயற்கைவாழ்க்கை முறை ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். உணவு உண்பதில் தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மலச்சிக்கல் இல்லாமல் வாழ்வதே அறிவுத்தெளிவு பிறக்கும் என்பதைத் தினமும் பின்பற்றி எனிமா எடுத்துக்கொண்டவர் என அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் மறை.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். சென்னையில் வாழ்ந்த பாண்டுரங்கனார் என்னும் தமிழறிஞர் இயற்கை உணவு ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தவர். பாண்டுரங்கனாரின் மாணவரான ராமகிருஷ்ணன் அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம் என்னும் இயற்கை உணவு ஆய்வுநிலையத்தை நடத்தியவர். பாண்டுரங்கனார் சமைக்காத உணவே உயிர்களுக்கு உகந்தது என்னும் கொள்கையை மறைமலை அடிகளிடமிருந்து கற்றுக்கொண்டார். இயற்கையுணவுக் கொள்கையின் முன்னவர்களில் ஒருவராக மறைமலையடிகளைக் குறிப்பிடுகிறார்கள்.

இதழியல்

  • இளமையில் மீனலோசனி என்ற செய்தித்தாளுக்குச் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். சோமசுந்தர நாயக்கர் பரிந்துரையினால் ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை நடத்திய ’சித்தாந்த தீபிகை’ என்னும் தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். ஐந்து இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல்கள் சிலவற்றிற்கு இந்தப் பத்திரிகைகளில் உரை எழுதினார். இந்த இதழில் குறிஞ்சிப்பாட்டு உரை வந்தது. இவருக்கு முன் பூவை கலியாணசுந்தர முதலியார் அந்த இதழின் ஆசிரியராக இருந்தார்.
  • ஞானசாகரம் என்ற இதழை 1902-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார் அதனைப் பின்னர் அறிவுக்கடல் என்று தனித் தமிழில் பெயர் மாற்றம் செய்தார்.இந்த இதழில் மாணிக்கவாசகர் காலம், தொல்காப்பியர் காலம், தமிழ்-வடமொழி பிறத்தல் பரிமேலழகர் உரை ஆராய்ச்சி ஆகியன வெளிவந்தன.1915-ல் மறைமலையடிகள் கொழும்பு, இமயமலைச் சாரல் எனப் பல்வேறு இடங்களுக்கு பயணித்தபோது அறிவுக்கடல் நின்றுவிட்டது.
  • 1906-1908-ஆம் ஆண்டுகளில் (The Oriental Mystic) என்ற பெயரில் சைவ சித்தாந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நடத்தினார்.
  • ORIENTAL MYSTIC OF MYNA (1908)THE OCEAN OF WISDOM (1935) என்னும் இரண்டு ஆங்கில இதழ்களை நடத்தினார்.

அமைப்புச்செயல்பாடுகள்

  • மறைமலை அடிகள் 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார்.
  • பல்லாவரத்தில் தன் இல்லத்தில் இராமலிங்க வள்ளலார் கொள்கைப்படி ஏப்ரல் 22, 1912-ல் ’சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ தொடங்கினார். பின்னர் தனித்தமிழில் அதை 'பொதுநிலைக் கழகம்’ எனப் பெயர் மாற்றினார்.
  • திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார்.
  • மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

இலக்கியவாழ்க்கை

மறைமலை அடிகளின் இலக்கியப்பணி மூன்று களங்களைச் சேர்ந்தது. தனித்தமிழியக்கம், சைவ மறுமலர்ச்சி இயக்கம், இலக்கியம். நூலாசிரியராகவும் இதழியலாளராகவும் பேச்சாளராகவும் இம்மூன்று தளங்களிலும் செயல்பட்டார்.

தனித்தமிழியக்கம்

தமிழில் உரைநடை உருவாகி வந்த காலகட்டத்தில் செயலாற்றியவர் மறைமலையடிகள். தமிழ் உரைநடை மூன்று மூலங்களை கொண்டு உருவானது. மதஇலக்கியம், பேச்சுமொழி, ஆங்கில மொழியாக்கம். மத இலக்கியத்தில் சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்திருந்தது. பேச்சுமொழியில் மொழித்திரிபு மிகுந்திருந்தது. மொழியாக்கங்களில் ஆங்கிலச் சொற்கள் அப்படியே எழுதப்பட்டன. இம்மூன்றுக்கும் எதிராக தமிழ்த்தூய்மையை பேணும் தனித்தமிழியக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று உருவாக்கினார்.தனித்தமிழியக்கம், பழந்தமிழ் இலக்கியம் பற்றி 11 நூல்களை எழுதினார்.தனித்தமிழியக்கத்தில் மறைமலையடிகளின் மாணவர்நிரை மூன்று தலைமுறைகளாக நீள்வது. அவரை தன் ஆசிரியராகக் கொண்டவர்கள் தேவநேயப் பாவாணர் இலக்குவனார் போன்றவர்கள். அவர்களிடமிருந்து இன்னொரு மாணாக்கர் நிரை உருவானது

சைவ மறுமலர்ச்சி

மறைமலையடிகள் ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை உருவாக்கி சைவமீட்பியக்கத்தின் அடுத்த தலைமுறை அறிஞர்களில் ஒருவர். ஆனால் பின்னாளில் ஆசாரவாத சைவத்துக்கு எதிராக ஒரு பொதுச்சைவத்தை முன்வைப்பவராக ஆனார். சைவ வழிபாட்டுமுறைகளைச் சீர்திருத்தவும், அவற்றிலுள்ள சாதிப்பாகுபாடுகளைக் களையவும் முயன்றார். சைவத்திலுள்ள சிறுதெய்வ வழிபாட்டை(நாட்டார் தெய்வ வழிபாட்டை) கடுமையாக எதிர்த்தார். சிறுதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுக்கலாகாது என பிரச்சாரம் செய்தார். சைவசித்தாந்தத்தை மட்டுமே சார்ந்த ஒரு தத்துவ சைவத்தை முன்வைத்தார்.பின்னாளில் மறைமலையடிகள் இராமலிங்க வள்ளலாரின் சோதிவழிபாட்டை ஏற்றுக்கொண்டார். அதை சைவத்தின் நவீன வடிவமாகவே கருதினார். மறைமலை அடிகள் சைவம் பற்றி 5 பொதுவான நூல்களும் 5 ஆய்வு நூல்களும் எழுதினார். சைவ சமயச் சொற்பொழிவுகளை ஆற்றினார். இராமலிங்க வள்ளலார் குறித்தும் எழுதியிருக்கிறார்

இலக்கியம்

மறைமலையடிகள் அன்று உருவாகி வந்த நவீன இலக்கியத்தை மொழித்திரிபின் வடிவமாகவே கண்டார். பிழையற்ற செவ்வியல்நடையிலேயே இலக்கியங்கள் எழுதப்படவேண்டும் என வாதிட்டார். நவீன இலக்கியம், அறிவியல் சார்ந்த களத்தில் ஏராளமான கட்டுரைகளை எழுதினா. ஆறு அறிவியல்நூல்கள் ஒரு நாடகம் இரண்டு நாவல்கள் எழுதினார். மறைமலையடிகளின் இரண்டு நாவல்களுமே தழுவல்கள். தூய தமிழில் நீண்ட வாக்கியங்களில் அமைந்த இந்த நாவல்கள் வெளிவந்த காலத்திலேயே யதார்த்தம் அற்ற படைப்புகள் என்னும் விமர்சனத்துக்கு உள்ளாயின. கோகிலாம்பாள் கடிதங்கள் அதன் கடிதவடிவம் காரணமாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படுகிறது.

1908-ல் எடிசன் ஆங்கிலத்தில் எழுதிய ஆறு கட்டுரைகளை மறைமலையடிகள் மொழிபெயர்த்திருக்கிறார். முருகவேள் என்னும் புனைபெயரில் இந்நூல் வந்தது. இதில் மறைமலையடிகளின் வாழ்க்கைக்குறிப்பும் விரிவான ஆங்கில முகவுரையும் உண்டு. இலங்கைப் பள்ளிகளில் இது பாடத்திட்டத்தில் இருந்தது.1907-ல் இவர் காளிதாசனின் சாகுந்தலத்தை மொழி பெயர்த்தார். இதற்கு ஆராய்ச்சியுரையும் வெளியிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூல் சென்னைக் கல்லூரிகள் பாடத்திட்டத்தில் இருந்தது.

இறுதிக்காலத்தில் மறைமலையடிகள் நேரடியாக மரபான முறையில் தன் இல்லத்தில் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். அவருடைய மாணவர்களில் மணி திருநாவுக்கரசு போன்றவர்கள் சிறந்த தமிழறிஞர்களாக திகழ்ந்தார்கள்.

சொற்பொழிவு

மறைமலையடிகள் சைவப்பிரச்சாரச் சொற்பொழிவுகளை தொழில்முறையாகவும் செய்துவந்தார். தமிழகத்திலும் பிற இடங்களிலும் பயணித்து பல தனிச் சொற்பொழிவுகள் செய்து சைவ மறுமலர்ச்சிக்கருத்துக்களைப் பரப்பினார். 1906-ஆம் ஆண்டில் சைவசித்தாந்த சமாஜம் சார்பாகச் சிதம்பரத்தில் நடந்த சைவ மாநாட்டிற்குக் கொழும்பு ராமநாதன் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் "Theistic Aspect of Saiva Sidhanda" , "ஹடயோக ராஜயோக பிராணாயாமம்" என்னும் தலைப்புகளில் மறைமலையடிகள் பேசினார். நாகப்பட்டினம், திருச்சி, மதுரையில் சைவமாநாடுகளில் மறைமலை அடிகள் பங்கு கொண்டிருக்கிறார்.

1914-ஆம் ஆண்டிலும் 1917-ஆம் ஆண்டிலும் இவர் கொழும்பு சென்று பேசியிருக்கிறார். 1915-ல் இமயமலை சென்றபோது அங்கே ஒரு கூட்டத்தில் சைவ சமயம், சித்தாந்தம் பற்றி ஆங்கிலத்தில் பேசினார்.1914-ல் கொழும்பு சென்றபோது தனிக்கூட்டங்களில் பேசியதற்குக் கிடைத்த பணத்தில் பல்லாவரத்தில் அவருடைய இல்லம் கட்டப்பட்டது.மறைமலையடிகள் 1921-ல் யாழ்ப்பாணத்தில் இதே தலைப்பில் விரிவாகச் சொற்பொழிவாற்றியபோது யாழ்ப்பாணம் ந.சி. கந்தையாபிள்ளை பேச்சு முடிந்ததும் ரூ.200 அன்பளிப்பாக வழங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது.1921-1922-ஆம் ஆண்டுகளில் இவர் கொழும்பில் இருந்தபோது சைவசித்தாந்த வகுப்பும் நடத்தியிருக்கிறார்.

பதிப்புப்பணி

1903-ல் முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, 1906-ல் பட்டினப்பாலை ஆராயச்சி நூல்களைத் தன் மாணவர்களின் உதவியுடன் பதிப்பித்த்தார். இவ்விரு நூல்களிலும் நச்சினார்க்கினியர் உரை வேறுபடும் இடம், பாடல்களின் அழகியல் கூறுகள் வருகின்றன. பட்டினப்பாலை முகவுரையில் குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி எழுதப்பட்டதாய்க் குறிப்பு உள்ளது. ஆனால் அது வெளிவரவில்லை.

நூல் நிலையம்

மறைமலை அடிகள் தன் பல்லாவரம் வீட்டில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார். 1914-ல் இங்கு 4000 தமிழ், வடமொழி, ஆங்கில நூல்கள் இருந்தன. பின்னர் இது பெரிய நூல் நிலையமானது. தன் இறுதிக்காலத்தில் இவர் எழுதிய உயிலில் தன் நூல் நிலையத்தைப் பொதுமக்களுக்கு உரிமையாக்கினார். தன் புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மக்களுக்கே என்றும் எழுதிவைத்தார்.

1958-ல் மறைமலை அடிகளின் மருமகனும் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக தலைவருமான வ.சுப்பையா பிள்ளை தலைமையில் மறைமலையடிகள் நூலகம் என்னும் அமைப்பு லிங்கி செட்டி தெருவில் உருவாக்கப்பட்டு மேலும் நூல்களும் சேர்க்கப்பட்டு பொதுப்பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. 1779 முதல் இருநூறாண்டுக்காலம் வெளியான நூல்கள் அதில் இருந்தன. 2008 மே மாதம் இடச்சிக்கலால் இந்நூலகம் மூடப்பட்டது. அரசு அளித்த உதவியின்படி சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு மறைமலை அடிகள் நூலக நூல்கள் கொடுக்கப்பட்டு அந்நூலகம் ஒரு தனிப்பிரிவாக செயல்பட்டு வருகிறது.

சைவ,ஆன்மிகப் பார்வை

மறைமலையடிகள் தமிழகத்தின் சைவ மறுமலர்ச்சியின் தலைமை ஆளுமைகளில் ஒருவர். சைவம் சார்ந்து இன்றுவரை நீளும் ஆசாரமறுப்பு மரபின் முதன்மைச் சிந்தனையாளர்.

சைவசமய மறுமலர்ச்சியை உருவாக்கியவர்களை இரண்டு பெரும்போக்குகளாக பிரிக்கலாம். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை முதன்மை ஆளுமையாகக் கொண்ட மரபு ஆசாரவாத நோக்கு கொண்டது. பழமையை இறுகப்பற்றிக்கொண்டது. ஆகமமுறை சார்ந்த வழிபாட்டுக்காக வாதாடுவது. சாதிவேறுபாடுகளை வலியுறுத்துவது. ஜே.எம்.நல்லுச்சாமிப்பிள்ளை தமிழகத்தில் சைவசித்தாந்தம் சார்ந்து சைவத்தின் எல்லா வகையான ஆசாரங்களையும் வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து தொகுத்த முன்னோடி. சூளை சோமசுந்தர நாயக்கர் ஆசாரவாத சைவத்தை முன்வைத்து, மாற்றுச் சமய தரப்புகளுடன் தீவிரமான கருத்தியல் போரில் இருந்தவர்.

அந்தத் தரப்புக்கு எதிரான ஆசாரமறுப்புப் பார்வைகொண்ட சைவம் ஒன்றை முன்வைத்தவர்களில் இராமலிங்க வள்ளலார், மறைமலையடிகள், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியோர் முக்கியமானவர்கள். சூளை சோமசுந்தர நாயக்கரிடம் சைவக்கல்வி பெற்றவர் மறைமலையடிகள். ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளையின் மாணவராக, அவர் நடத்திய இதழில் பணிபுரிந்த மறைமலையடிகள் அந்தப் பார்வையில் இருந்து படிப்படியாக விலகி இராமலிங்க வள்ளலாரை வந்தடைந்தார். இதுவே அவருடைய சைவ-ஆன்மிகப் பார்வையின் வளர்ச்சிமாற்றத்தின் எளிய வரைபடம்.

மறைமலையடிகள் சமயம் தொடர்பாக எழுதிய ஐந்து நூல்களில் திருவொற்றியூர் மும்மணிக் கோவையின் (1900) பாடல்கள் சங்கப் பாடல்களின் நடையை ஒத்தவை. திருப்பாதிரிப்புலியூர் சைவ மாநாட்டில் (1902) பழந்தமிழ் கொள்கையே சைவசமயம் என்னும் தலைப்பிலும், திருச்சி சைவ மாநாட்டில் (1927) கடவுள் நிலைக்கு மாறான கொள்கை சைவம் ஆகா என்ற தலைப்பிலும் (1929) பேசிய பேச்சுகள் புத்தகங்களாக வந்துள்ளன.

சாதி தொடர்பாக மறைமலையடிகள் 1923-ல் எழுதிய "சாதி வேற்றுமையும் போலிச்சைவரும், வேளாளர் நாகரிகம் பண்டைத் தமிழர், ஆரியர், தமிழர் மதம் (1940) என்னும் நூல்களில் சைவத்தை சாதிகடந்த ஒரு மதமாக நிறுவுகிறார் பச்சையப்பர் கல்லூரியில் நடந்த தமிழர் மத மாநாட்டில் (1940) பேசிய பேச்சு தமிழர் மதம் என்னும் நூலாக வந்தது. மதம் என்ற சொல்லே மாணிக்கவாசகர் காலத்துக்குப் பின் தோன்றியது; தமிழர்கள் ஒளி வணக்கம் உடையவர்கள்; காலைக் கதிரவன் முருகன்; மாலைக் கதிரொளி சிவன்; நீரின் நிலம் பார்வதி; சிவலிங்க வடிவம் நெருப்புக் குழி என்றெல்லாம் விரிவான களத்தை எழுப்பி தமிழர் மதமும் சாதியும் தொடர்பற்றவை என்ற கருத்தை உணர்த்துகிறார்.தனவைசியர் ஊழியர் நூலில் வந்த கட்டுரை வேளாளர் நாகரிகம் (1923).

மறைமலையடிகள் சைவத்தை பழந்தமிழ் மரபின் நீட்சியாக காண்பவர். தமிழ்ச்சைவம் என்னும் கருத்தை அவர் உருவாக்க முயன்றார். தமிழர் மதம் என்பது வேதமரபில் இருந்து வேறுபட்டது, தனக்கான தொன்மையான வரலாறு கொண்டது, அதுவே சைவமாக ஆகியது என வலியுறுத்தினார். தமிழர் நடுவே சாதிவேறுபாடுகள் தேவையில்லை என்றும், மதவழிபாடுகளில் மூடநம்பிக்கைகளும் வெற்றுச்சடங்குகளும் தேவையற்றவை என்னும் கூறினார். சைவத்திற்குள் உள்ள சிறுதெய்வ வழிபாடுகளை கண்டித்தார். சைவசித்தாந்தம் சார்ந்த அறிவார்ந்த அணுகுமுறையே மெய்யான சைவ மரபு என்றார்.மறைமலை அடிகளின் ஆன்மிகக் கருத்துக்கள் முழுமையாகவும் தலைப்புவாரியாகவும் தொகுக்கப்படவில்லை.

அருட்பா மருட்பா விவாதம்

மறைமலையடிகள் அருட்பா மருட்பா விவாதத்தில் இராமலிங்க வள்ளலார் தரப்பில் நின்று தொடர் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவருடைய சொற்பொழிவுகளால் அருட்பா மருட்பா விவாதம் முடிவுக்கு வந்தது. (பார்க்க அருட்பா மருட்பா விவாதம் )

தமிழ் இலக்கிய ஆய்வு

1930-ல் மறைமலை அடிகள் எழுதிய "மாணிக்கவாசகர் காலமும் வரலாறும்" என்ற நூல் இருபது ஆண்டுகளாக அவர் ஆராய்ந்த முடிவுகள் உள்ள நூலாகும். இந்த நூல் சைவசமயக் குரவரான மாணிக்க வாசகரின் காலத்தைப் கூறுவதற்காக எழுதப்பட்டது என்றாலும், தொல்காப்பியர் ஆழ்வார்கள், சேக்கிழார் எனப் பலரின் காலத்தையும் இந்நூல் கணிக்கிறது. முன்னரே மாணிக்கவாசகரின் காலம் பற்றி மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஓர் ஆய்வுநூலை எழுதி அறிஞர் நடுவே அது ஏற்கப்பட்டு அதனடிப்படையில் பிற கால ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன.மறைமலை அடிகள் பாண்டியர் கல்வெட்டுகளில் கூறப்படும் வரகுணன் மணிவாசகர் கூறும் வரகுணன் அல்லன் என்று சொல்லி தன் நூலில் மணிவாசகர் காலத்தைப் பின்னுக்குக் கொண்டுசெல்கிறார். இராமன் கற்பனைப் பாத்திரம், விநாயகர்முருகன் போன்றோரின் பிறப்பு பற்றியவை கட்டுக்கதைகளே என்பன போன்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன.

ஆய்வு முடிவுகள் மறுப்பு

மறைமலை அடிகள் பெரும்பாலும் பழைய நூல்களிலுள்ள மொழிச்சான்றுகளின் அடிப்படையிலேயே தன் கால ஆய்வுகளைச் செய்தார். அவர் காலகட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் மிகுதியாக நிகழவுமில்லை. ஆகவே பல்லவர்களின் காலத்துக்கு முன் தமிழகத்தில் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை; ஆதிசங்கரருக்கு முன்பே மாயாவாதத் தத்துவம் தமிழகத்தில் இருந்தது; ராமாயணம் கற்பனையான காவியம்; மகாபாரதம் யதார்த்தமானது; ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள்; வட்டெழுத்து தொல்பழங்காலம் முதல் தமிழகத்தில் வழங்கி வருகிறது என்பது போன்ற அவருடைய ஆய்வு முடிவுகளை அதிகாரபூர்வமான சான்றுகளுடன் மறுத்து எழுதிய ஆய்வுகள் வந்துள்ளன.

வரலாற்றுப் பேராசிரியர்களான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, சத்தியநாத அய்யர், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் போன்றோர் பல்லவர்களைப் பற்றிக் கூறிய முடிவுகளுக்கு மாறானது மறைமலையடிகளின் ஆய்வு. ஆழ்வார்களின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் நிறுவியுள்ளனர். பல்லவருக்கு முந்திய காலத்தவை என்று கருதப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. வட்டெழுத்து வடிவம் தொல்பழங்காலம் முதல் இருப்பது போன்ற அடிகளின் கருத்துக்கள் விரிவாக மறுக்கப்பட்டுள்ளன.

சுயமரியாதை இயக்கத்துடன் முரண்பாடும் உறவும்

மறைமலை அடிகள் சம்ஸ்கிருத எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய களங்களில் சுயமரியாதை இயக்கம் (திராவிட இயக்கம்) மீது சார்பு கொண்டிருந்தார். ஆனால் பின்னர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தமிழ் தொன்மையையும் சைவசமயத்தையும் எதிர்த்தபோது சுயமரியாதை இயக்கத்துடன் கடுமையாக முரண்பட்டார். தெலுங்கு மொழியினரான வைணவர்களால் தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம் என்றும் அது தமிழ்ப்பண்பாடு ,சைவமதம் ஆகியவற்றை அழிப்பது என்றும் கடுமையாக தாக்கினார். அதற்கு ஈ.வெ.ராமசாமி பெரியார் கடுமையான சொற்களில் எதிர்ப்பையும் தெரிவித்தார். அவ்விவாதம் சில ஆண்டுகள் நீண்டது. பின்னர் ஈ.வே.ராமசாமிப் பெரியார் மறைமலை அடிகளிடம் தான் பேசிய கடுமையான சொற்களுக்காக மன்னிப்பு கோரினார். பொதுவானவர்கள் வழியாகச் சமரசம் ஏற்பட்டது. ஈ.வெ.ராமசாமி பெரியாரின் ஆங்கில இதழான Revolt-ல் மறைமலை அடிகள் தன் ராமாயண ஆய்வை எழுதினார். ஆனால் அவர்களுக்கிடையேயான முரண்பாடுகள் அவ்வாறே நீடித்தன. (ஆ.இரா.வேங்கடாசலபதி. அந்தக்காலத்தில் காபி இல்லை பக்கம் 118-121)

மறைமலையடிகள் திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை தமிழியம் என்னும் கருத்தாக்கத்திற்கு எதிரான ஒன்றாக பார்த்தார். அது தெலுங்கர்களால் முன்வைக்கப்படுவது என தொடர்ந்து ஐயம் கொண்டிருந்தார். பின்னர் அவருடைய வழிவந்தவர்கள் திராவிட இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டாலும் தமிழியக்கத்தை திராவிடக் கருத்தியலுக்கு எதிராக நிறுத்தும் போக்கு தொடர்கிறது. அதன் தொடக்கப்புள்ளி மறைமலையடிகளே.

அறிவியக்க இடம்

மறைமலை அடிகள் சிலை
மறைமலை அடிகள் அஞ்சல்முத்திரை

மறைமலை அடிகள் நான்கு அடிப்படைகளில் இன்று மதிப்பிடப்படுகிறார்.

  • அவருடைய நவீன இலக்கியப் பங்களிப்பு பெரிதாகக் கருதப்படுவதில்லை. அவருடைய தனித்தமிழ் நடை நவீன இலக்கியத்தில் எந்தச் செல்வாக்கையும் செலுத்தவில்லை
  • இலக்கிய ஆய்வாளராக அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் அவரது சமகாலத்திலும் பிற்காலத்திலும் இஒப்புக்கொள்ளப் படவில்லை, தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் இவரை ஆய்வாளராக அடையாளம் காட்டவில்லை என்று அ.கா. பெருமாள் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அவர் ஆய்வுக்குரிய முறைமைகளைக் கடைப்பிடிக்காமல் அகவய நோக்கையே ஆய்வுகளில் மேற்கொண்டார் என்று சுட்டிக்காட்டப்படுகிறது
  • மறைமலை அடிகள் தனித்தமிழியக்க முன்னோடியாக பெரிதும் மதிக்கப்படுகிறார். பின்னாளில் உருவான தமிழ்க்கலைச்சொல்லாக்கம், ஆட்சிமொழி தமிழ் இயக்கம் ஆகியவற்றில் அவருடைய செல்வாக்கு ஆழமானது. தமிழியம் என அழைக்கப்படும் சிந்தனைப்போக்கின் முதன்மை ஆளுமை என கருதப்படுகிறார்.
  • சைவ மறுமலர்ச்சிக் காலத்தில் சைவசமயத்தை வழக்கமான சடங்குகள், வழிபாடுகளில் இருந்து அதன் அடிப்படையான சைவசித்தாந்த தத்துவம் மற்றும் யோகமுறைகளை நோக்கி கொண்டுசென்றவர்களில் மறைமலை அடிகளின் பங்களிப்பு முதன்மையானது

மறைவு

இறுதிக்காலத்தில் பல்லாவரத்தில் காவியுடை அணிந்து துறவுக் கோலத்தில் இருந்தார். செப்டம்பர் 15, 1950-ல் தமது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார்.

மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு ஆர்.பொன்னம்மாள்

வாழ்க்கை வரலாறுகள், நினைவகங்கள்

மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு. இளங்குமரன்
நூல்கள்
  • பாவலர் சி அன்பானந்தம்: மறைமலை அடிகளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் பாவலர் சி. அன்பானந்தம் என்னும் கவிஞரால் பாடப்பட்டுள்ளது.
  • மறை.திருநாவுக்கரசு :மறைமலையடிகள் 50 ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் இவரது வரலாற்றை இவரது மகன் மறை. திருநாவுக்கரசு தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் வரலாறு என்னும் நூலை எழுதினார்.
  • இளங்குமரன்:மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் இளங்குமரானால் எழுதப்பட்டது
  • ஆர்.பொன்னம்மாள்: மறைமலை அடிகள் வரலாறு ஆர். பொன்னம்மாள் எழுதி வெளிவந்துள்ளது
நினைவுச்சின்னங்கள்
  • மறைமலை அடிகள் நூலகம் 1958-ல் நிறுவப்பட்டு இப்போது கன்னிமாரா நூலகத்துக்குள் செயல்படுகிறது
  • சென்னை புறநகருக்கு மறைமலை நகர் என பெயரிடப்பட்டுள்ளது.

நூல்கள்

மருத்துவம், இயற்கை வாழ்க்கை
  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
  • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
  • மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
  • யோக நித்திரை: அறிதுயில் (1922)
  • தொலைவில் உணர்தல் (1935)
  • மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
மொழியாக்கம்
  • சாகுந்தல நாடகம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சம்ஸ்கிருத ஆராய்ச்சி
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
தொகுப்பு
  • ஞானசாகரம் மாதிகை (1902)
சைவம்
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
  • முனிமொழிப் ப்ரகாசிகை (1899)
  • மாணிக்க வாசகர் வரலாறு (1952)
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
  • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
  • திருவாசக விரிவுரை (1940)
  • சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
  • துகளறு போதம், உரை (1898)
  • வேதாந்த மத விசாரம் (1899)
  • வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
  • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
  • சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
  • சிவஞான போத ஆராய்ச்சி (1958)
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
  • தமிழர் மதம் (1941)
பழந்தமிழிலக்கிய ஆய்வு
  • முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
  • முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
  • பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
  • உரைமணிக் கோவை (1972)
  • மாணிக்க வாசகர் மாட்சி (1935)
  • மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
  • முதற்குறள் வாத நிராகரணம் (1898)
  • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
மரபிலக்கியப்படைப்புகள்
  • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
  • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
  • திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
நாவல்
பொது
  • மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
  • அறிவுரைக் கொத்து (1921)
  • அறிவுரைக் கோவை (1971)
  • கருத்தோவியம் (1976)
  • சிந்தனைக் கட்டுரைகள் (1908)
  • சிறுவற்கான செந்தமிழ் (1934)
  • இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
  • இந்தி பொது மொழியா ? (1937)
  • தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
  • வேளாளர் நாகரிகம் (1923)
ஆங்கிலம்
  • Can Hindi be a lingua Franca of India? (1969)
  • Tamilian and Aryan form of Marriage (1936)
  • Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
  • Ocean of wisdom, Bimonthly(1935)
  • Ancient and Modern Tamil Poets (1937)
இதழ் தொகுதிகள்
  • அறிவுக்கடல் (ஞானசாகரம்) (1902)
  • ORIENTAL MYSTIC OF MYNA (1908)
  • THE OCEAN OF WISDOM (1935)

உசாத்துணைகள்


✅Finalised Page