under review

பர்ட்டன் ஸ்டெயின்

From Tamil Wiki
Revision as of 09:07, 19 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)
Burton Stein Peasant state and society in medieval India India.png

பர்ட்டன் ஸ்டெயின் (Burton Stein) (1926 – April 26, 1996) இந்தியவியல் ஆய்வாளர். இந்திய வரலாறு, தமிழக வரலாறு பற்றிய ஆய்வுகளைச் செய்தவர். சோழர் கால நிலவுடைமை முறை மற்றும் சாதியமைப்பு முறை பற்றிய ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர்.

இளமை, கல்வி

பட்டன் ஸ்டெயின் 1926-ல் அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் பிறந்தார். இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்டார். இல்லினாய்ஸ் பல்கலையின் கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டமையால் பட்டப்படிப்பை முடிக்காமலேயே முதுகலைப் படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார். சிக்காகோ பல்கலையில் 1954-ல் முதுகலைப் படிப்பை முடித்தபின் ராபர்ட் கிரேன் வழிகாட்டலில் தன் முனைவர் பட்டப்படிப்பை 1957-ல் முடித்தார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பொருளியல் அடிப்படைகள் பற்றியது அவருடைய முனைவர் பட்ட ஆய்வு.

தனிவாழ்க்கை

பர்ட்டன் ஸ்டெயின் டோரதியை 1966-ல் மணந்தார். டோரதி ஸ்டெயின் (Dorothy Stein ) தொடக்ககால கணிப்பொறி நிரலெழுத்தாளர்களில் ஒருவர். உளவியலாளர், எழுத்தாளர். அடா என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். அடா லவ்லேஸ் (Ada Lovelace) பரவலாக நம்பப்படுவதுபோல கணிப்பொறியை உருவாக்கிய சார்ல்ஸ் பாபேஜுக்கு உதவியாக இருக்குமளவுக்கு கணிப்பொறியை அறிந்தவரோ, கணிதவியலாளரோ அல்ல என வாதிடும் நூல் இது

கல்விப்பணிகள்

முனைவர் பட்டம்பெற்றபின் பர்ட்டன் ஸ்டெயின் மினசோட்டா பல்கலையில் ஆசிரியராக பணியமர்ந்து 1965 வரை நீடித்தார். பின்னர் ஹவாய் பல்கலையில் ஆசிரியராக 1983 வரை 17 ஆண்டுகள் பணியாற்றினார். பர்ட்டன் ஸ்டெயின் சிகாகோ பல்கலை, பென்சில்வேனியா பல்கலை, வாஷிங்டன் பல்கலை, கலிபோர்னியா பல்கலை, பெர்க்லி பல்கலை ஆகியவற்றிலும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். லண்டன் பல்கலையின் கீழைத்தேய மற்றும் ஆப்ரிக்க ஆய்வு மையத்தின் (School of Oriental and African Studies ) ஆய்வுப்பேராசியராக லண்டனில் பணியாற்றினார். பர்ட்டன் ஸ்டெயின் இந்தியவியல் மற்றும் தெற்காசிய ஆய்வுகளுக்கான ஏராளமான கருத்தரங்குகளில் பங்கெடுத்தார். தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவெளியிட்டுக்கொண்டிருந்தார். தெற்காசிய ஆய்வுகள் மற்றும் இந்தியவியல் ஆய்வுகளில் முதன்மையான வழிகாட்டுநராக அடுத்த தலைமுறை ஆய்வாளர்களால் கருதப்பட்டார்.

வரலாற்று வரைபடம்

பர்ட்டன் ஸ்டெயின் மினசோட்டா பல்கலையைச் சேர்ந்த தன் ஆய்வுத்தோழரான ஜான் புரோக் (Jan Broek) உதவியுடன் தெற்காசியாவின் வரலாற்று வரைபடம் (Historical atlas of South Asia) ஒன்றை உருவாக்கும் முயற்சியை தொடங்கினார். சார்ல்ஸ் லெஸ்லி ஆம்ஸ்(Charles Leslie Ames) யை இணைத்துக்கொண்டு இந்திய துணைக்கட்டத்தின் வரலாற்று வரைபடம் ஒன்றை உருவாக்கும் நிதியுதவியை பெற்றார். ஜோசப் இ ஷ்வார்ட்ஸ்பெர்க் (Joseph E. Schwartzberg) வழிகாட்டலுடன் அந்த வரைபடப்பணி 1960-களில் தொடங்கியது. பர்ட்டன் ஸ்டெயின் அந்த திட்டத்தின் முதன்மை ஆலோசகராக இருந்தார். 1978-ல் சிகாகோ பல்கலை தெற்காசியாவின் வரலாற்று வரைபடத்தை( A Historical Atlas of South Asia) அதிகாரபூர்வமாக பிரசுரித்தது.

இந்தியவியல் ஆய்வு

Burton Stein Vijayanagara The New Cambridge history of India.jpg
Burton Stein Thomas Munro.jpg

பர்ட்டன் ஸ்டெயின் முதன்மையாக தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுக்காகவே கருத்தில்கொள்ளப்படுகிறார். அவருடைய கருத்துக்கள் வெவ்வேறு அறிஞர்களால் ஏற்கப்பட்டும் மறுக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டுள்ளன. பழங்கால தென்னிந்தியாவில் நவீன பாணியிலான ஓர் அரசு இருந்ததா என்பது பர்ட்டன் ஸ்டெயின் முன்வைக்கும் கேள்வி. அரசு என்பது மையப்படுத்தப்பட்ட அதிகாரமும், அதைநோக்கிக் குவியும் செல்வமும் கொண்டது. பழங்கால தென்னிந்தியாவில் அத்தகைய அரசு இருக்கவில்லை என்றும், அன்றிருந்த நிலவுடைமை முறை அதிகாரிகளின் அடுக்குமுறையால் ஆட்சி செய்யப்பட்டது அல்ல என்றும் பர்ட்டன் ஸ்டெயின் கருதுகிறார். வலுவான நிலவுடைமைச் சமூகங்களில் காணப்படும் அதிகாரிகளின் அடுக்குமுறை (bureaucracy ) சோழர் காலத்தில் இருந்ததில்லை என ஊகிக்கிறார். பழந்தமிழ்நாட்டு அதிகாரமுறையையும் வாழ்க்கைமுறையையும் புரிந்துகொள்ள தென்னாப்ரிக்க பழங்குடிச் சமூகங்களை ஆராய்ந்த ஏய்டன் சௌத்ஹால் (Aidan Southall) எழுதிய The Illusion of Tribe என்னும் நூலை ஆழ்ந்து பயின்று அதிலிருந்து தன் கொள்கையை உருவாக்கிக்கொண்டார் பர்ட்டன் ஸ்டெயின். தன்னுடைய 'பழங்கால தென்னிந்தியாவின் குடியானவன், அரசு, சமூகம்’ என்னும் நூலில் (Peasant, State and Society in Medieval South India (1980) தன் கொள்கையை விரிவாக முன்வைத்தார். அதன்படி பழங்காலத் தென்னிந்தியச் சமூகங்கள் மையப்படுத்தப்பட்ட அரசதிகாரமோ, ஒன்றுக்குமேல் ஒன்றென அடுக்கப்பட்ட ஆதிக்க முறையோ கொண்டவையாக இருக்கவில்லை. ஒன்றுக்கொன்று சமமான அதிகாரமும் உரிமையும் கொண்ட பல குடிச்சமூகங்களின் தொகுப்பாக இருந்தன. இந்த முறை கூறாக்க அரசு முறை (Segmentary lineage) எனப்படுகிறது

சோழர்காலத்து கிராமச்சமூகங்களை பர்ட்டன் ஸ்டெயின் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். அவருடைய கொள்கையின்படி அவை தன்னாட்சி கொண்ட சிறு குடிச்சமூகங்களாக, சிறிய அரசுகளாகவே இயங்கியிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு பகுதி செல்வம் வரிவசூலாக மைய அரசுக்குச் சென்றது. மற்றபடி மைய அரசு அந்த கிராமச்சமூகங்கள்மேல் எந்த ஆட்சியையும் செலுத்தவில்லை. அவை பழங்குடிக் காலம் முதல் தொடர்ச்சியாக இருந்துவந்த சாதியாசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளாலும், பரம்பரையாக வந்த சில குடும்பத் தலைமைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டன. மைய ஆட்சியில் மாற்றம் வந்தாலும் கிராமச்சமூகம் பாதிக்கப்படவில்லை. இந்த கிராமத் தன்னதிகாரம் நகர்மயமாக்கத்தாலும் மையச் சோழ அரசின் ஆதிக்கத்தாலும் சிதைவுற்றபோதுதான் பிற்காலத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள், வலங்கை இடங்கைப் பூசல்கள் உருவாயின.

Burton Stein A history of India.jpg

பர்ட்டன் ஸ்டெயினின் இக்கொள்கை பின்னாளில் வந்த பல வரலாற்றாசிரியர்களால் ஏற்கப்படவில்லை. நொபுரு கரஷிமா போன்ற ஆய்வாளர்கள் இந்தக் கருத்து மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது என்றும், கிராமசமூகங்கள் மேல் சோழர்களின் மைய அரசின் நேரடியான ஆணை இருந்ததை கல்வெட்டுகள் காட்டுகின்றன என்றும் கூறுகிறார்கள். ( நொபுரு கரஷிமா. வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் – சோழர் காலம் (850-1300) குறிக்கோளும் அணுகுமுறையும்). கார்த்திகேசு சிவத்தம்பி பர்ட்டன் ஸ்டெயின் முன்வைத்த கொள்கையை விரிவாக மறுத்து இறை என்னும் சொல் உறவுக்குழுமத் தலைவனைச் சுட்டுகிறது என்றும், அதிலிருந்து உருவான அரசன் என்னும் உருவகம் வட இந்திய அரசர்களின் நிலையில் இருந்து மாறுபட்டது என்றும், அரசன் என்னும் ஆட்சிமையம் சங்ககாலம் முதல் பல படிகளாக உருவாகி சோழர் காலத்தில் உச்சத்தில் இருந்தது என்றும் விளக்குகிறார். (சங்க இலக்கியம், கவிதையும் கருத்தும். கா.சிவத்தம்பி)

பர்ட்டன் ஸ்டெயின் ஓய்வுக்குப்பின் நான்கு நூல்களை எழுதினார். ஐந்தாவது நூலான இந்திய வரலாறு (A History of India) 1998-ல் அவருடைய மறைவுக்குப்பின் வெளியாகியது.

Burton Stein The makings of Agrarian policy in British India.jpg

வெளியீடுகள்

நூல்கள்

  • 1980: Peasant state and society in medieval South India. Oxford University Press. 1994. ISBN 9780195635072.
  • 1989: Thomas Munro: The origins of the colonial state and his vision of empire. Oxford University Press. 1989. ISBN 9780195623314.
  • 1989: Vijayanagara. The New Cambridge History of India. Cambridge University Press. 1989. ISBN 978-0-521-26693-2.
  • 1992: The Making of Agrarian Policy in British India, 1770-1900, Oxford University Press, ISBN 9780019562317, 0019562314
  • 1998: A History of India. Wiley. 16 June 1998. ISBN 978-0-631-20546-3.; 2010: Second edition revised by David Arnold, ISBN 978-1-4443-2351-1

கட்டுரைகள்

  • 1985: Stein, Burton (1985). "Notes on 'Peasant Insurgency' in Colonial Mysore: Event and Process". South Asia Research. 5 (1): 11–27. doi:10.1177/026272808500500102. S2CID 143808036.
  • 1985 : Stein, Burton (1985). "State Formation and Economy Reconsidered: Part One". Modern Asian Studies. 19 (3, Special Issue: Papers Presented at the Conference on Indian Economic and Social History, Cambridge University, April 1984): 387–413. doi:10.1017/S0026749X00007678. JSTOR 312446.

உசாத்துணை


✅Finalised Page