under review

நீலம் (வெண்முரசு நாவலின் நான்காம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 14:51, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)


நீலம் ('வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதி)

நீலம்[1] ('வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதி) கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை. இது ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தவற்றை விவரிக்கிறது. மகாபாரத வரிசையில் இருந்து விலகி, பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம். 'ராதாமாதவ[2]’ மனநிலையைக் கொண்டாடும் பகுதி இது.

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் நான்காம் பகுதியான 'நீலம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஆகஸ்ட் 2014-ல் முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு செப்டம்பர் 2014-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

நீலத்தை முதலில் நற்றிணை பதிப்பகமும் பின்னர், கிழக்கு பதிப்பகமும் அச்சுப் பதிப்பாக வெளியிட்டன.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

நீலம் நிழலாய், ஒளியாய் இந்தப் பிரபஞ்சத்தில் பட்டு, உலகம் தூக்கத்திலிருந்து மீள்வதில் தொடங்குகிறது இந்த நீலம். நீலத்தின் தொடக்கம் உலகம் தியானம் கலைந்து எழுவதைக் காட்டுகிறது.

நீலத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தன இடம்பெற்றுள்ளன. ஸ்ரீகிருஷ்ணர் பிறந்து புலம்பெயர்வது தொடங்கி, மதுராவின் முடிசூடுவது வரையிலான நிகழ்ச்சிகளே இந்த நாவலின் மையச் சரடு. இதுவே, மையச் சரடாக இருந்தபோதிலும் இந்த நாவல் முழுக்க ராதையே நிறைந்திருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் தன் குழந்தைப் பருவத்தில் செய்த கோடி குறும்புகளையும் அவர் வளர வளர புரிந்த அரும்பெருஞ்செயல்களையும் இந்தப் படைப்பு பேசுகிறது. அனைத்துமே ராதையின் பார்வையில், ராதையின் மனநிலையின் விவரிப்புகளாக நாவலில் அமைக்கப்பட்டுள்ளன.

நீலத்தில் ராதையின் 'காத்திருப்பு’ யுகங்களைக் கடந்ததாகவும் அளக்க முடியாத விரிவும் ஆழமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ராதையின் மனத்திற்குள் ஓடும் முடிவற்ற கற்பனையில், கனவில் ஸ்ரீகிருஷ்ணரின் பாதச்சுவடுகளும் குழலிசையும் அழியாமல் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியேயும் கேட்டபடியேயும் ராதை காத்திருக்கிறார். இந்த 'நீலம்’ முழுவதும் ஆயிரம் அன்னையர் வந்துசெல்கின்றனர். காலந்தோறும் உள்ளத்தாலும் கருத்தாலும் காதலாலும் கருணையாளும் மாறாத ராதையர்கள். ஆனால், வெவ்வேறு உருக்கொண்ட ராதையர்கள். இந்த நீலம் ராதையின் அதிகனவுகளாலும் அவற்றை அவள் நினைவாக, சொல்லாக மாற்றிப் பார்க்கும் நிகழ்வுகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கு முன்னரும் பின்னரும் நடந்த அனைத்தும் வரிசை மாறியே இதில் இடம்பெற்றுள்ளது. இதில் கதை பெரும்பாலும் ராதையின் மனப் போக்கிலும் இடையிடையே சூதர்கள், குறமகள்கள், நிமித்திகர்கள், முதுபெண்டிர்கள் போன்றோரின் சொற்களிலும் தோய்ந்து தோய்ந்து நகர்கிறது. அவர்களுள் ஒரு ராதையை மட்டும் எடுத்து, அவளுக்குள் உறையும் ஆயிரம் ராதைகளை நமக்குக் காட்டுகிறது நீலம்.

நீலத்தின் கதைக்களங்கள் பர்சானபுரி, கோகுலம், விருந்தாவனம், மதுரா ஆகிய நான்கும் ஆகும். இதற்கு முன்னர் விரிவாக எடுத்துரைக்கப்படாத ஆயர்குலத்தின் வாழ்க்கை முறை, அரசியல், குழு மனப்பான்மை ஆகியவற்றை 'நீலம்’ தன்போக்கில், கதைநகர்வுக்காகச் சொல்லிச் செல்கிறது. ஆயர்குலத்தின் வீரம், தொழில்நேர்த்தி, கற்புநெறி எனப் பலவற்றை விளக்கி, அந்தக் குலத்தினர் அன்றைய அரசியல் நகர்வுகளில் பொருந்தும், முரண்படும் இடங்களை நாவல் சுட்டிக் காட்டுகிறது.

கோகுலத்திலுள்ள பெண்களும் பர்சானபுரியிலுள்ள பெண்களும் விருந்தாவனத்திலுள்ள பெண்களும் சிறுவன் ஸ்ரீகிருஷ்ணர் மீது பேரன்பு கொள்கின்றனர். அவனின் குறும்புகளை எண்ணி எண்ணி வெறுத்து ஒதுக்கும் மனங்களே மறுபுறம் திரும்பி, அவனை நினைத்து நினைத்து விரும்பி ஏங்குவதை கிருஷ்ண லீலையாக நீலம் விளக்குகிறது.

மகாபாரதத்துக்கும் நீலத்துக்குமான நேரடித் தொடர்பு நான்கு வரிகள் மட்டுமே! ஆயர்குல மலைமருத்துவரும் நிமித்திகருமான ஒருவர் மதுராவின் அரசர் ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, அவரின் கையைப் பற்றி, நாடியைத் தொட்டு நோக்கி, தியானித்து, "பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்" (நீலம், பக்கம் - 286) என்று கணித்துக் கூறுகிறார். இந்த நான்கு வரிகள் கொண்டே, 'இந்தப் பகுதி 'வெண்முரசு’ நாவலோடு இணைகொள்கிறது. இதில் உள்ள வரிகள் தேர்ந்த செவ்வியற்தமிழ்ச் சொற்களால் எழுதப் பெற்றுள்ளன.

கதை மாந்தர்

ஸ்ரீகிருஷ்ணர், ராதை ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் கம்சன், வசுதேவர், தேவகர், தேவகி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

பிற வடிவங்கள்

விமர்சகர் சுபஸ்ரீ நீலத்தை முழுமையாகத் தம் குரலில் ஒலிப்பதிவு செய்து 'வெண்முரசு பாடினி[3]’ என்ற பெயரில் யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page