under review

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

From Tamil Wiki
Revision as of 09:04, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம்

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1916) கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எழுதிய கவிதைநூல். இது நாஞ்சில்நாட்டில் வேளாளர் முதலிய குடிகளிடம் இருந்த மருமக்கள்வழி சொத்துரிமைமுறையை எதிர்த்து பகடியும் விமர்சனமும் கலந்து எழுதப்பட்டது. செவ்வியல் செய்யுள்நடையில் இல்லாமல் நாட்டார் பாடல்களின் முறையில் அமைந்தது.

எழுத்து, பிரசுரம்

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை இந்நூலை தன் பெயரில் வெளியிடவில்லை. 1916-ல் இந்நூல் 1916-ல் திருவனந்தபுரத்தில் இருந்து வெளிவந்த தமிழன் பத்திரிகையில் மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. அந்நூலைப் பற்றி அவ்விதழின் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு நிகழ்வை எழுதியிருந்தார். ஒருநாள் திருவனந்தபுரம் சாலை பகுதியில் ஒரு பண்டாரம் தன்னிடம் புதையல் பற்றிய தகவல் அடங்கிய ஒரு சுவடிக்கட்டு இருப்பதாகவும் வீட்டுக்கு சென்று வாசித்துப் பார்க்கும்படியும் சொன்னார். அதுதான் 'நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்'. இது சித்தர் ஒருவரால் எழுதப்பட்டது என இதழாசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

கவிமணி நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்த்தை எழுதும்போது அவருக்கு வயது 40. ஆனால் அப்போது அவர் புகழ்பெற்ற கவிஞர் அல்ல. அவர் புகழ்பெற்ற பின்பு அவரது 66-வது வயதில்தான் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் அச்சேறியது. 1942-ல் புதுமைப்பதிப்பகம் வெளியிட்டது. ஆசிரியராக கவிமணி பேர் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருமக்கள்வழி மான்மியம்

கேரளத்தில் எப்போதென்று அறியமுடியாத காலம் முதலே மருமக்கள் சொத்துரிமை முறை இருந்து வருகிறது. இது தாய்வழிச் சொத்துரிமை முறையின் இன்னொரு வடிவம். சொத்துரிமை முழுக்க முழுக்க பெண்களுக்கு இருந்தது. பெண்களின் சொத்துக்கு நிர்வாகியாக , உரிமை இல்லாதவராக, அவர்களின் மூத்த சகோதரர் இருந்தார். அவர் காரணவர் என்று அழைக்கப்பட்டார். பெண்களின் சொத்து அப்பெண்களின் பெண்களுக்கே செல்லும். மகன்களுக்குச் செல்லாது. அந்த மகன்களுக்கு மகள் இருந்தால் அவளுக்குச் செல்லும். அரசுரிமை  போன்ற ஆண்கள் வகிக்கும் பதவிகள் காரணவராக இருக்கும் மாமனில் இருந்து மூத்த சகோதரியின் மூத்த மகனுக்குச் செல்லும்.

ஒரு சிக்கலான சொத்துரிமை முறை. இது தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்தச் சொத்துரிமை முறை திருவிதாங்கூரில் அரசநிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்த எல்லா சாதியினருக்கும் பரவியிருந்தது.  வேளாளர்கள் பொதுவாக சோழர் ஆட்சிக்காலத்தில், கிபி ஒன்பதாம் நூற்றாண்டுமுதல் குமரிமாவட்டத்தில் வந்து குடியேறியவர்கள். நஞ்சை நில வேளாண்மை அறிந்தவர்கள். மெல்லமெல்ல அவர்கள் திருவிதாங்கூர் அரசில் உயர் பதவிகளை வகிக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு வகித்தவர்கள் மருமக்கள் சொத்துரிமை முறைக்கு மாறினார்கள். மற்றவர்கள் மக்கள்த்தாய முறையில் நீடித்தார்கள்.  

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருமக்கள் சொத்துரிமை என்பது சீரழிந்த நிலையை அடைந்தது. அது பெண்ணுக்குச் சொத்துரிமை என்ற அடிப்படையில் உருவானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் வீட்டுக்குள் அடைபட பெண் பெயரில் ஆண்கள் சொத்தை கையாள ஆரம்பித்தார்கள். அப்படி கையாள்பவர் தன் சொந்த மனைவியின் குழந்தைகளுக்கு அதை அதிகாரபூர்வமாகக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவரது மருமக்களுக்கு உரியது அந்தச் சொத்து. ஆகவே சொத்தை பலவகையிலும் திருடி தன் மக்களுக்குக் கொடுத்தனர் சிலர். மாமன் ஒழுங்காக இருந்தாலும் அவர் தங்கள் சொத்தை திருடுவதாக எண்ணினர் மருமக்கள். குடும்பங்கள் சண்டைகளில் சீரழிந்தன

இப்படி ஒரு சண்டையின் கதைதான் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். மருமக்கள் முறை ஒழிப்புக்காக நாயர் சாதியில் குரல்கள் எழுந்து, சீர்திருத்தத்துக்கான  இயக்கங்கள் சூடுபிடித்தன. அந்த இயக்கம் வேளாளர் நடுவே விவாதங்களை உருவாக்கியது. அப்போது  மருமக்கள் முறை ஒழிப்புக்காக பிரச்சாரம்செய்யும்பொருட்டு உருவானதே நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். இந்நூல் வெளிவந்த சில வருடங்களிலேயே 1927-ல் அம்முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டது. அந்த மாற்றத்தில் இந்நூலுக்கும் பங்குண்டு.

கதை, நடை

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ஒரு அங்கத நூல். ஒரு பெரிய குடும்பத்தில் காரணவருக்கு ஐந்தாம் மனைவியாக வாழ்க்கைப்பட்ட எளிய பெண்மணி தன் கதையைச் சொல்கிறாள். ஐந்து கல்யாணம் செய்தமையால் 'பஞ்சகல்யாணிபிள்ளை' என்று காரணவருக்கு ஊரிலே பெயர்.

தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி

தொட்டி தண்ணீர் சுமக்க ஒருத்தி

அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி

அண்டையில் அகலாதிருக்க ஒருத்தி

அத்தனை பேருக்கும் அடிமையாளாய்

ஏழை பாவியேனும் ஒருத்தி…

என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறாள் கதைசொல்லி. இந்த நூல் முழுக்க பெண்களின் உலகம் மிக அழகாக அதற்குரிய அடுக்களை வம்புகளுடன் சித்தரிக்கப்படுகிறது.

அம்மா மிளகை அரையென்றால் உடன்

அவள் கைமதலை அழுவது கேட்டிடும்

பிள்ளைக் குணமோ பிடுங்கி வைப்பாளோ

என்று அழுபிள்ளைக்காரி அக்காளை சொல்கிறாள்


இந்த குடும்பத்தில் மருமகன் வந்து சொத்துக்கணக்கு கேட்கிறான்

விளையை வயலாய் வெட்டித்திருத்த

வயலை விற்ற பணம் போதாதோ?’

சொத்து வழக்கு நீதிமன்றம் செல்கிறது. வழக்கிலேயே குடும்ப செல்வமெல்லாம் தேய்கிறது.

இழந்த்தை எண்ணி ஏங்கி ஏங்கி,

அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம்வழி

ஐயோ, இவ்வழி ஆகாது ஆகாது!

ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி

மனிதர் செல்லும் வழியா யிடுமோ?

என்று ஒப்பாரிபோன்ற கண்ணீரும் சாபமுமாக நூல் முடிவுறுகிறது.


பகடிநடை பயின்றுவரும் நூல் இது

'பத்து பெண்கள் பட்டினி கிடந்து

பருத்திப்பொதிபோல் பதினாறாம் நாள்

வெளிவந்திட வேண்டும் என்றால்

அவர் எத்தனை தோசை இட்டிலிக்கெல்லாம்

எமகாலராயிருப்பார் அப்பா?

இலக்கிய இடம்

கவிமணியின் மிகச்சிறந்த படைப்பு இது என சுந்தர ராமசாமி கருதுகிறார். நாஞ்சில்நாட்டில் இருந்து பின்னாளில் உருவான நவீன இலக்கியப்படைப்பாளிகளான சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, நீல பத்மநாபன், ஆ.மாதவன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கை இலக்கியத்தில் கையாள்வதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைந்த படைப்பு இது.

இலக்கிய ஆக்கத்தின் அடிப்படைகள் சில கைகூடிவந்த படைப்பு நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். ஒன்று இது ஒரு மண்ணில், பண்பாட்டில், வாழ்க்கைமுறையில் ஆழமாக வேரூன்றி நிற்கிறது. அந்த வேர்ப்பிடிப்பு  வழியாக அது எடுத்துக்கொண்ட நுண்மைகளை வைத்தே பேசுகிறது, பொதுமைகளை விட்டுவிடுகிறது. கதாபாத்திர உருவாக்கம், மொழி நடை ஆகியவற்றில் எந்த பிரயத்தனமும் தெரியாத ஒழுக்கு உருவாகி வந்திருக்கிறது.

ஒரு பிரச்சாரப் படைப்பு இது. எதற்காக பிராசரம் செய்ததோ அந்த இலக்குக்கு இன்று ஒரு பொருளும் இல்லை. அந்த வரலற்றையே சொன்னால்தான் புரியும். ஆனால் இது இலக்கியமாகி நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கவிருக்கிறது. இதன் நுண் விவரணைகள் வழியாகவே இது ஒரு செவ்வியல் படைப்பாக காலத்தைத் தாண்டிச் செல்கிறது

உசாத்துணை


✅Finalised Page