under review

நா. சுகுமாரன்

From Tamil Wiki
Revision as of 08:09, 16 September 2022 by Tamizhkalai (talk | contribs)
நா. சுகுமாரன் (நன்றி: தமிழ் ஹிந்து)

நா. சுகுமாரன் (பிறப்பு: ஜூன் 11, 1957) தமிழில் எழுதி வரும் கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர். இதழாசிரியராகவும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுகுமாரன் தமிழ்ப்புதுக்கவிதையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

நா. சுகுமாரன்

நா. சுகுமாரன் கோயம்புத்தூரில் நாராயணன், தங்கமணி இணையருக்கு ஜூன் 11, 1957-ல் பிறந்தார். மூன்று தலைமுறைக்கு முன்னால் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அத்தைக்கு குழந்தை இல்லாததால் அவருடன் ஊட்டி வெலிங்டனில் ஒன்பது மாதத்திலிருந்து வளர்ந்தார். குன்னூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆரம்பப்பள்ளிக்கல்வி பயின்றார். பின்னர் கோயம்புத்தூர் செயின்ட் மைக்கல்ஸ் உயர்நிலைப்பள்ளியில் (செயின்ட் ஜான்ஸ் பள்ளி) பயின்றார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் புதுமுக வகுப்பு படித்தார். அரசு மாலைக் கல்லூரியில் பொருளியல் படித்தார். அங்கிருந்து இடைநின்று பிஎஸ்ஜி கல்லூரியில் பிஎஸ்ஸி வேதியியலில் சேர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

நா. சுகுமாரன் முதலில் வெல்டிங் சார்ந்த விற்பனைப் பிரதிநிதி வேலை பார்த்தார். பின் நிப்போ பேக்டரியின் விற்பனைப் பிரதிநிதியாக வேலை கிடைத்தது. மைசூர், பொள்ளாச்சியிலுள்ள குவாலிட்டி ஸ்பின்னிங் மில்ஸ் என விற்பனைப் பிரதிநிதியாக பத்து வருட காலம் பணியாற்றினார். இசையில் ஈடுபாடு கொண்டவர். சென்னை வந்து ஆயத்த ஆடை தொழிற்சாலை தொடங்கினார். அது நஷ்டமான பின் 'தமிழன்’ என்ற நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தார். குங்குமம் குமுதம் இதழ்களில் இதழாசிரியராகப் பணிபுரிந்தவர் பின்னர் சன் டிவி குழுமத்தின் சூர்யா டிவியில் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

சுகுமாரனின் மனைவி பிரேமா. சுகுமாரன் திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.

நா. சுகுமாரன்

இதழியல்

சுகுமாரன் கோவையில் இருந்து நிகழ் சிற்றிதழை தொடங்கி இரண்டு இதழ்கள் நடத்தினார். அது பின்னர் கோவை ஞானியால் தொடர்ந்து நடத்தப்பட்டது.

சுகுமாரன் பிரம்மராஜன் நடத்திய "மீட்சி" சிற்றிதழின் கடைசி இதழான இருபத்தைந்தாவது இதழ் வரை எழுதினார்.

சுகுமாரனுக்கு 'தமிழன்’ என்ற நாளிதழில் முதல் வேலை கிடைத்தது. அந்த நாளிதழ் நிர்வாகக் காரணங்களால் ஒன்பது மாதத்தோடு நிறுத்தப்பட்டபோது குங்குமம் இதழில் பணியாற்றினார். அதன்பின் மூன்று மாதம் 'குமுதம் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். ஏப்ரல் 1998-ல் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

சுகுமாரன் 'காலச்சுவடு' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

நா. சுகுமாரன்
தொடக்கம்

நா. சுகுமாரன் கலியபெருமாள், சோமசுந்தரம் ஆகிய ஆசிரியர்களின் வழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். கல்லூரியில் படித்தபோது பூசாகோ (PSG) கல்லூரி நூலகம் வழி வாசிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் 'புது வெள்ளம்’ மாணவர் பத்திரிகையில் கதை, கவிதைகள் எழுதினார். மரபு சார்ந்த கவிதைகளை பள்ளி ஆண்டு மலரில் எழுதியுள்ளார்.

கவிதைகள்

சுகுமாரன் ஆத்மாநாமுடன் அணுக்கமான நட்பு கொண்டிருந்தார். ஆத்மாநாம் நடத்திய ‘’ சென்னையில் இருந்து வெளிவந்த 'கவனம்’ ஆகிய இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதினார். சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பான கோடைகாலக் குறிப்புகள் 1985ல் வெளிவந்தது. தமிழ் கவிதைச்சூழலில் பெரிதும் கவனிக்கப்பட்ட தொகுதி அது. தமிழில் அக்காலகட்டத்தில் வெளிவந்த மூன்று முக்கியமான கவிதை தொகுதிகளில் ஒன்றாக அதை விமர்சகர் ராஜமார்த்தாண்டன் மதிப்பிட்டு கொல்லிப்பாவை இதழில் எழுதினார். (சமயவேலின் காற்றின் பாடல், ராஜசுந்தரராஜனின் உயிர்மீட்சி ஆகியவை மற்ற தொகுதிகள்) .

மிக விரைவிலேயே சுகுமாரன் அன்றைய இளையதலைமுறை கவிதைவாசகர்கள் நடுவே இளம் நட்சத்திரமாக அறியப்பட்டார். எண்பதுகளில் இளைஞர்களிடமிருந்த எதிர்ப்புணர்வு கசப்பு ஆகியவற்றின் கூரிய சொல்வடிவமாக இருந்தன அக்கவிதைகள். கூடவே இசையனுபவத்தை காட்சிப்படிமங்களாக ஆக்கும் கவிதைகள் அன்றைய படிமவியலை புதிய எல்லைக்குக் கொண்டுசென்றன. 'பயணியின் சங்கீதங்கள்’, 'சிலைகளின் காலம்’, 'வாழ்நிலம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் உள்ள கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பாகப் 'பூமியை வாசிக்கும் சிறுமி’ 2006-ல் வெளிவந்துள்ளது. கோடைகாலக் குறிப்புகள் தொகுதியிலுள்ள பல கவிதைகள் அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களால் விரும்பப்படுகின்றன.

புனைவுகள்

சுகுமாரன் பள்ளியிறுதி வகுப்பு படிக்கும்போது தாமரை இதழில் கதைகள் எழுதியுள்ளார். 'நியாயங்கள்’ என்ற கதை முதன்முதலில் வெளிவந்தது. சுகுமாரன் கதைகள் அதிகம் எழுதவில்லை. பெருவலி, வீழ்ச்சி, வெல்லிங்டன், இரகசியத் தோட்டம் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். வெலிங்டன் சுகுமாரனின் இளமைக்கால அனுபவங்களில் இருந்து உருவான படைப்பு.

கட்டுரைகள்

சுகுமாரன் கோவையில் மார்க்ஸிய இயக்கங்களுடனும் ஞானியுடனும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பிரம்மராஜனின் நட்பின் வழியால மேற்கத்திய இலக்கியம், இசை ஆகியவற்றை அறிமுகம் செய்து கொண்டார். பிரம்மராஜனின் இரண்டாவது தொகுப்பான 'வலி உணரும் மனிதர்கள்’ தொகுப்புக்கு பின்னட்டைக் குறிப்பு எழுதினார். சுந்தர ராமசாமியுடனான நெருக்கமும் உரையாடலும் சுகுமாரனின் இலக்கியக் கொள்கைகளை வடிவமைத்தன.

சுகுமாரனின் அரசியல்பார்வை இடதுசாரிக் கோணம் கொண்டது. அவருடைய இலக்கியப் பார்வை சுந்தர ராமசாமியை வழிதொடரும் நவீனத்துவ அணுகுமுறை கொண்டது. 'திசைகளும் தடங்களும்’, 'தனிமையின் வழி’ ஆகியவை இவரது கட்டுரைத் தொகுப்புகள்.

திரைப்படம்

சுகுமாரன் மலையாளக் கலைப்படங்கள் சார்ந்து அறிமுகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணனின் சினிமா பற்றிய புத்தகத்தை "சினிமா அனுபவம்" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.

மொழியாக்கங்கள்

சுகுமாரன் இலக்கியம், அரசியல் என இரு தளங்களிலும் குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களைச் செய்தவர். மலையாள மார்க்ஸிய எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் எழுதிய ‘மார்க்ஸிய அழகியல்: ஒரு முன்னுரை’ அவருடைய மொழியாக்கங்களில் குறிப்பிடத்தக்கது. கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸின் One Hundred Years of Solitude நாவலை ;தனிமையின் நூறு ஆண்டுகள்' என்னும் பெயரில் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்தார்.

சக்கரியாவின் 'இதுதான் என் பெயர்' நாவலையும் ஆர்.உண்ணி எழுதிய காளிநாடகம் என்னும் சிறுகதை தொகுதியையும் மலையாளத்தில் இருந்து மொழியாக்கம் செய்தார்.

வெட்டவெளி வார்த்தைகள்’, 'கவிதையின் திசைகள்’, 'பாப்லோ நெரூதா கவிதைகள்’, 'பெண் வழிகள்’ ஆகிய கவிதை நூல்களையும் சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார்

விருதுகள்

  • கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இயல் விருது 2017-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் நா. சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது.
  • 2008-ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெற்றார்.

இலக்கிய இடம்

கோடைகாலக் குறிப்புகள்

சுகுமாரன் இடதுசாரிப் புரட்சியாளர்களின் கவிதைகளில் இருந்து கவிதைவடிவத்தையும், உணர்ச்சிவெளிப்பாட்டையும் எடுத்துக்கொண்டார். ஆனால் அரசியல்சார்பினால் உருவாகும் புறவயமான குரல் இல்லாமல் ஆழ்ந்த அகவயத்தன்மையுடன், தனிப்பட்ட கோபம் சீற்றம் ஆங்காரம் கசப்பு என்னும் அடிப்படை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்த கவிதைகள் அவருடையவை. ஒரு காலகட்டத்தின் எதிர்ப்புக் குரலாகவே ஒலித்தவர். நவீனத் தமிழ்க் கவிதையில் ஆத்மாநாம், சுகுமாரன், சேரன் மூவருமே அவ்வண்ணம் இளமையின் குரல் என சொல்லத்தக்கவர்கள்.

"சில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள். ஒரு யுகமுடிவின் கசப்பு தங்கிய கவிதைகள் சுகுமாரன் எழுதியவை. திமிறித்திமிறி சென்று வீணாகித் திரும்பி வருதலின் ஆற்றாமை நிறைந்தவை. சிறகுகளுடன் முட்டைக்குள் இருப்பதன் வலியையும் பிளந்து வெளிவந்தால் பறக்கக்கிடைக்கும் வெளி வலைக்குள் என அறிதலின் கசப்பையும் முன்வைத்தவை." என எழுத்தாளர் ஜெயமோகன் சுகுமாரனின் கவிதைகளை மதிப்பிடுகிறார்

"தமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக அறிமுகமானார். இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட கவிஞர். தமிழ் நவீனக் கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவர்" என கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

சுகுமாரன் கவிதைகள் (காலச்சுவடு)
கவிதைத் தொகுப்புகள்
  • கோடைக்காலக் குறிப்புகள்(1985)
  • பயணியின் சங்கீதங்கள் (1991)
  • சிலைகளின் காலம்(2000)
  • வாழ்நிலம் (2002)
  • பூமியை வாசிக்கும் சிறுமி (2007)
  • இன்னொருமுறை சந்திக்கவரும்போது
  • செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல
  • நீருக்குக் கதவுகள் இல்லை
நாவல்
  • பெருவலி
  • வீழ்ச்சி
  • வெல்லிங்டன்
  • இரகசியத் தோட்டம்
மொழிபெயர்ப்புகள்
  • மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம் 1985)
  • வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதைகள் 2000)
  • இது தான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல் 2001)
  • கவிதையின் திசைகள்(உலகக் கவிதைகள் 2001)
  • பாப்லோ நெருதா கவிதைகள் (100 கவிதைகளின் மொழிபெயர்ப்பு 2005)
  • பெண் வழிகள் (மலையாள பெண்நிலைக் கவிதைகள் 2005)
  • மயிலம்மா - போராட்டமே வாழ்க்கை (ஆதிவாசிப் போராளியின் வாழ்க்கை 2006)
  • சினிமா அனுபவம் (2006)
  • காளி நாடகம் (உண்ணி ஆர். இன் சிறுகதைகள் 2007)
  • மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீரின் நாவல் 2008)
  • அரபிக்கடலோரம் (சக்கரியாவின் கட்டுரைகள் 2008)
  • ஆஸீஸ் பே சம்பவம் (அய்ஃபர் டுன்ஷ்)
  • தனிமையின் நூறு ஆண்டுகள் (2013)
  • பட்டு (அலெசான்ட்ரோ பாரிக்கோ)
  • தர்ப்பூசணி பழச்சிறுமி: உலக நாடோடிக் கதைகள்
  • குட்டி இளவரசி
  • கிரீன் கேபிள்ஸ் ஆனி
  • ஷா இன் ஷா
  • டாம் சாயரின் சாகசங்கள்
  • வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை
  • கருணைத் தீவு
  • காதல் கடிதம் (வைக்கம் முகம்மது பஷீர்)
  • பஷீர் நாவல்கள்
  • புதையல் தீவு
  • பஷீரின் எடியே
  • லயோலா என்ற பெரும்பாம்பின் கதை
  • லீலை: 12 மலையாளக் கதைகள்
  • மதில்கள் (வைக்கம் முகம்மது பஷீர்)
  • ஹெய்தி
கட்டுரைகள்
  • திசைகளும் தடங்களும் (2003)
  • தனிமையின் வழி ( 2007)
  • இழந்த பின்னும் இருக்கும் உலகம் (2008)
  • வெளிச்சம் தனிமையானது (2008)
  • மோகப் பெருமயக்கு
  • ஆற்றூர் ரவிவர்மா: கவிமொழி மனமொழி மறுமொழி
  • வாழிய நிலனே
  • வேழாம்பல் குறிப்புகள்
  • குதிரை முட்டை
  • தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்
பதிப்பித்தவை
  • தி. ஜானகிராமன் கட்டுரைகள்
  • கச்சேரி (தி.ஜா. தொகுக்கப்படாத கதைகள்)
  • தி. ஜானகிராமன் சிறுகதைகள்
  • புதுமைப்பித்தனுக்குத் தடை
  • மௌனி படைப்புகள்
  • கச்சேரி
பிற
  • தெனாலிராமன் கதை நாடகங்கள்
  • மரியாதை ராமன் கதை நாடகங்கள்
  • மாய மோதிரம் (சிறுவர் கதை)

இணைப்புகள்


✅Finalised Page