under review

தி.பெ.கமலநாதன்

From Tamil Wiki
Revision as of 09:04, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
கமலநாதன்

தி.பெ.கமலநாதன் (நவம்பர் 4, 1923 - நவம்பர் 4, 2007) தலித் வரலாற்றாய்வாளர், ஆவணச்சேகரிப்பாளர்.

பிறப்பு, கல்வி

தி.பெ.கமலநாதன் நவம்பர் 4, 1923-ல் பௌத்த அறிஞர் ஏ.பி.பெரியசாமி புலவர் - கனகபூஷணி அம்மாள் இணையருக்கு பிறந்தார். கமலநாதனுக்கு 16-வது வயதானபோது தந்தை காலமானார். எம்.ஏ பட்டம்பெற்றார்

தனிவாழ்க்கை

கமலநாதன் மனைவி தவமணி. வித்யா ராஜேந்திரன் , டாக்டர். சுமித்ரா முருகன் என இரு மகள்கள். காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியில் சேர்ந்த கமலநாதன். 1983-ல் ஓய்வுபெற்றார்.

வரலாற்றுப்பணி

கமலநாதன் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் தமிழ் நாட்டில் நடந்த தலித் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்துப் பாதுகாத்து தொடர்ச்சியாக ஆவணப்படுத்தினார். அவரது தந்தை ஏ.பி.பெரியசாமிப் புலவரால் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளும், நூல்களும் அதில் அடங்கும். துண்டறிக்கைகள், பாராட்டு மடல்கள், திருமண அழைப்பிதழ்கள், மாநாட்டு உரைகள், மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலக்கிய ஆக்கங்கள் என அவரால் சேரித்து பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் அந்த காலகட்டத்தின் தலித் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. அயோத்திதாசப் பண்டிதர் நடத்திய தமிழன் இதழின் பிரதிகளும் கூட அவரால் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அவர் சேகரித்த ஆவணங்களை பின்னர் அவர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்குத் தந்து விட்டார்.

தலித் வரலாற்று நூல்கள்

1916-ல் பெரியசாமிப் புலவரால் திருப்பத்தூரில் துவக்கப்பட்ட தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தைப் புனரமைத்து அதன் சார்பில் சில வரலாற்று ஆவணங்களை அவர் மறுபதிப்பு செய்தார். கோபால் செட்டியார் எழுதிய 'ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்’ அதன் முதல் வெளியீடாக வந்தது. 1920-ல் வெளியான அந்த நூல் இக்காலம் 'தாழ்த்தப்பட்டவர்கள்’ என குறிக்கப்படுகிறவர்கள் பூர்வத்தில் பௌத்தர்களாய் இருந்தவர்களே என வாதிடுகிறது.

கமலநாதன் ஆங்கிலத்தில் வெளியிட்ட சிறுநூலில் மூன்று வரலாற்று ஆவணங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த பெரிய பறைச்சேரியின் (தற்போதைய ஜார்ஜ் டவுன்) பிரமுகர்களும், மற்றும் அந்த சமூகத்தின் தலைவர்களுமாக நாற்பத்து நான்குபேர் கையெழுத்திட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் 1810-ஆம் ஆண்டில் அளித்த கோரிக்கை மனுவும்; 1891-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி, அயோத்திதாசரின் முன்முயற்சியில் ஊட்டியில் கூட்டப்பட்ட 'திராவிட மகாஜன சபை’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், திவான் பகதூர் சீனிவாச ராகவ அய்யங்காருக்கு அயோத்தி தாசப் பண்டிதர் எழுதிய 'திறந்த மடலின்’ பிரதியும் தொகுக்கப்பட்டிருந்தன.

1810-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு விதித்த துப்புரவு வரியிலிருந்து’’ தமக்கு விலக்களிக்கவேண்டுமென தலித்துகள் கோரிக்கை விடுத்து சமர்பித்த மனுவில், 1758-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் சென்னையைத் தாக்கியபோது அன்றைய கவர்னர் ஜார்ஜ் பிகோட் என்பவரும் அவரிடம் துபாஷியாக இருந்த முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவரும் பெரிய பறைச்சேரிக்குச் சென்று உதவி கேட்டதையும், அதைத் தொடர்ந்து தலித்துகள் திரண்டு சென்று கோட்டையிலிருந்த இரண்டாயிரம் சிப்பாய்களுக்கு உதவியாகப் போரில் ஈடுபட்டதையும், அப்போது பலர் உயிர் இழந்ததையும் குறிப்பிட்டு அப்படி உதவி புரிந்த தம் மீது வரி விதிக்க வேண்டாமென தலித்துகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரிய பறைச்சேரி என்பது பறையர்கள் மட்டுமின்றி போர்த்துகீசியர்கள், கீழ்நிலைப் பணிகளிலிருந்த ஐரோப்பியர்கள் முதலானவர்கள் குடியிருந்த இடம் என்பதால் எல்லோருக்கும் வரிவிலக்கு அளிக்க முடியாது. சிறிய வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம் என அப்போது பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவரங்கள் அந்த மனுவோடு சேர்த்து பிரசுரிக்கப்பட்டுள்ளன.

திராவிட மகாஜனசபை ஆவணங்கள்

கமலநாதன் வெளியிட்ட திராவிட மகாஜன சபை மாநாட்டுத் தீர்மானங்களில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 'பறையர்’ என்ற சொல்லை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்துவோரைத் தண்டிக்க சட்டமியற்ற வேண்டும்; சிறைகளில் இழிவான வேலைகளை அங்கு அடைக்கப்பட்டுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த கைதிகளே செய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகின்ற சிறை கையேட்டின் விதி 446-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் பிரதியொன்று டிசம்பர் 21, 1891-ல் காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்டதாகவும் அதைப் பெற்றுக்கொண்டதாக காங்கிரஸின் பொதுச் செயலாளராயிருந்த எம்.வீரராகவாச்சாரி என்பவர் பதிலெழுதியதாகவும் ஆனால் அதற்குப் பிறகு காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லையெனவும் அதுபோலவே தீர்மானங்களின் பிரதி முகமதியர் சங்கத்துக்கும் அனுப்பப்பட்டு அவர்களும்கூட அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அயோத்திதாசர் குறிப்பிட்டிருந்ததையும் கமலநாதன் இதில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

கி.வீரமணிக்கு மறுப்பு

வீகமலநாதனின் மிகமுக்கியமான பங்களிப்பு அவர் ஆங்கிலத்தில் எழுதிய"Mr. K. Veeramani M.A.,B.L. is Refuted and the historical facts about the scheduled Caste’s struggle for emancipation in South India" என்ற நூலாகும். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பும் பின்பும் தலித் மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது, அவர்கள் நடத்திய போராட்டங்கள், மாநாடுகள், பத்திரிகைகள் என்னென்ன என்பவற்றையெல்லாம் அதில் அவர் ஆதாரங்களோடு தொகுத்திருந்தார். 1886-க்கும் 1932-க்கும் இடையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளால் நடத்தப்பட்ட 12 பள்ளிகள், இரண்டு இரவுப் பாடசாலைகள், இரண்டு மாணவர் விடுதிகள், ஒரு நூலகம் முதலியவை குறித்த விவரங்களும்; 1891-க்கும் 1935-க்கும் இடையே நடத்தப்பட்ட 40 மாநாடுகள் குறித்த தகவல்களும்; 1909-க்கும் 1932-க்கும் இடையே நடத்தப்பட்ட 18 பௌத்த மாநாடுகள் பற்றிய செய்திகளும், 1869-க்கும் 1916-க்கும் இடையில் தலித்துகள் நடத்திய 11 பத்திரிகைகள் பற்றிய விவரங்களும் கமலநாதனால் அட்டவணைப்படுத்தப்பட்டு அந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டு கோரிக்கையை முதலில் எழுப்பியவர்கள் தலித்துகள் தான் என்பதற்கு ஆதாரமாக சட்டசபையிலும் வேலை வாய்ப்புகளிலும் தலித்துகள், சாதி இந்துக்கள், முகமதியர்கள், ஐரோப்பியர்கள், உள்நாட்டு கிறித்தவர்கள் ஆகியோருக்கு இடங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென 1909-ஆம் ஆண்டே அயோத்திதாசப் பண்டிதர் 'தமிழன்’ இதழில் எழுதியிருந்ததையும் கமலநாதன் பதிவு செய்திருக்கிறார். 1985-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 14 பக்கங்கள் கொண்ட அந்த நூல் தமிழக தலித்துகளின் சுயச்சார்பான வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்குகிறது. (ரவிக்குமார் கட்டுரையை ஆதாரமாக்கி எழுதப்பட்டது)

மறைவு

நவம்பர் 4, 2007-ல் சென்னையில் காலமானார்

ஆய்வுலக இடம்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் தமிழ் நாட்டில் நடந்த தலித் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்துப் பாதுகாத்தவர் கமலநாதன், தலித் வரலாற்று பாதுகாவலர் என்பதனால் அவரும் ஒரு களப்போராளிதான் என ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

  • தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்
  • Mr. K. Veeramani M.A.,B.L. is Refuted and the historical facts about the scheduled Caste’s struggle for emancipation in South India

உசாத்துணை


✅Finalised Page